Headline

அவர்கள் அகதிகள் இல்லை - தியாகு1.முந்தைய பகுதி

2ஆம் பகுதி

கேள்வி : நீங்கள் சொன்னது போல, போரினால் இடம் பெயர்ந்த ஈழத் தமிழ் மக்களை அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீண்டும் குடியமர்த்த வேண்டும். மற்றொன்று, அவர்களுடைய உரிமைப் போராட்டத்தை இதற்குமேல் முன்னெடுப்பதற்கு பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிற முயற்சிகளுக்கிடையே, இங்கே உள்ள அகதிகளை அங்கே திருப்பி அனுப்புவதற்கான ஒரு திட்டமும் தீட்டப்பட்டுள்ளதாகவும், இங்கு இருக்கக்கூடிய இலங்கை தூதரக அதிகாரிகள் சில முகாம்களுக்குப் போய் உங்களில் யார் யாரெல்லாம் தயாராக இருக்கிறீர்கள் என்றெல்லாம் கேட்டிருக்கிறார்கள். எனவே, இங்கிருக்கக்கூடிய அகதிகளைக் கூட வற்புறுத்தி அந்த நாட்டிற்கு அனுப்பக்கூடிய ஒரு முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தியாகு: முதலில், இது மக்கள் எழுச்சியின் மூலமாக தடுக்கப்பட வேண்டும். சட்டப்படியும் தடுக்கலாம். ஏனென்றால், சர்வதேச சட்டங்களுக்கு முரணானது இந்த முயற்சி. எந்த அகதியையும் அவர் விருப்பத்திற்கு புறம்பாக அந்த நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடியாது. அப்படி அனுப்புவதென்றால், தலாய் லாமாவை திபெத்திற்கு என்றைக்கோ அனுப்பியிருக்கலாம் அல்லது அவரோடு வந்தவர்களையெல்லாம் அனுப்பியிருக்கலாம். அவர்களையெல்லாம் தங்கவைத்து ஏதோ செய்து கொண்டிருக்கிறார்கள். செய்யட்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர்கள் தாய்நாட்டிற்குத் திரும்பிச் செல்லும் சூழல் இல்லை. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் விடுதலை கூட கேட்கவில்லை. சுயாட்சி அதிகாரம்தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். விடுதலை கேட்கிற சக்திகள் வேறு இருக்கிறார்கள். அதுபோல எத்தனையோ நாடுகளைச் சேர்ந்தவர்கள் இங்கே வந்து அரசியல் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். தங்கியிருக்கிறார்கள். இதேபோல, வேறு நாடுகளிலும் போய் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எனவே ஈழத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டில் அகதிகளாக இல்லை, நம்முடைய உடன்பிறப்புகளாகவே தங்கியிருப்பதற்கும், வாழ்வதற்கும் முழு உரிமை உண்டு. தமிழ்நாடு முழுவதும் எந்தெந்த இனத்தவரோ வந்து பங்கு போட்டு ஊரைப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் இருக்கிற உரிமை தமிழ் பேசுகிற மனிதர்களுக்கு இல்லை என்று சொன்னால் அது மிகவும் அநியாயம்.


ஆனால், நாம் சந்தேகப்படுவதற்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. ஒரு காரணத்தை நான் தெளிவாகச் சொல்கிறேன். தமிழக அரசு மறுக்க வேண்டும் இதை. மறுத்தால்தான் அதை நாம் நம்ப வேண்டும். எந்த தனியார் கல்லூரிகளிலும் ஈழ மாணவர்களைச் சேர்க்க வேண்டாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பல தனியார் கல்லூரிகளில் இதைச் சொல்கிறார்கள். ஏனென்றால், நாங்கள் அவர்களை திரும்பி அனுப்பப் போகிறோம். அவர்களை கல்லூரிகளில் சேர்க்காதீர்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். இங்கு அகதிகள் முகாம்களுடைய நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது என்பது உண்மை. இதெல்லாம் எதற்கு என்றால், திருப்பி அனுப்புகிற நிர்ப்பந்தத்தை உண்டு பண்ணுவதற்குத்தான். அதிலும் குறிப்பாக, இந்த அகதிகளிலேயே சிறப்பு முகாம்கள் என்று சொல்லி குறிப்பிட்ட போராளி அமைப்புகளோடு தொடர்புடையவர்கள், உதவியவர்கள் என்று சொல்லி சிறப்பு முகாமில் சில பேரை அடைத்து வைத்திருக்கிறார்கள். அதுவொரு ஆண்டுக்கணக்கில்லாத ஆயுள் தண்டனை. எந்த குற்றச்சாற்றும் கிடையாது. ஆனால் அவர்களை அடைத்து வைத்திருக்கிறார்கள். இவர்களை திருப்பி அனுப்புவதாக இருந்தால் அவர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும். அங்கே மற்ற மனிதர்களுக்கே ஆபத்து நிச்சயம். அதற்கும் மேல், இவர்களைப் பொறுத்தவரைக்கும் குறிப்பிட்ட போராளிக் குழுக்கள், விடுதலைக்கு உதவியவர்களை கொண்டுபோய் நாங்கள் புலன் விசாரணை செய்ய வேண்டும் என்று சிங்கள அரசு கேட்கிறது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்றால், விடுதலை இயக்கம் என்று சொன்னால், அது மக்களின் ஆவலில் இருந்து பிறக்கிற ஒரு இயக்கம். எனவே ஒடுக்குமுறை இருக்கிற இடத்தில் விடுதலை வேட்கை பிறக்கும். அந்த வேட்கைதான் இப்படிப்பட்ட போராளிகளை தோற்றுவிக்கும் என்பதை புரிந்துகொள்வதற்கு பதிலாக, புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களையெல்லாம் ஒழித்துவிட்டால், விடுதலை இயக்கத்தை ஒழித்துவிட முடியும் என்று நினைக்கிறார்கள். எனவே அந்த இயக்கத்தை ஆணி வேர், சல்லி வேர் பார்த்து அடியோடு பிடுங்கி எறிய வேண்டும் என்ற வெறித்தனமான பிடிவாதம் அந்த அரசிற்கு இருக்கிறது.
ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ஏற்கனவே புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருந்த காலத்தில், சகலதரப்பட்ட மக்களுக்கும் அவர்கள் ராணுவ பயிற்சி கொடுத்தார்கள். படையில் சேர்பவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் பொதுவாக கட்டுப்பாடு, ஒழுங்கு என்ற முறையில். அப்படி செய்யும் போது அவர்கள் என்ன செய்தார்கள் என்றால், தானி ஓட்டுநர்களுக்கெல்லாம் பயிற்சி கொடுத்தார்கள். அந்த பயிற்சி கொடுத்ததற்குப் பிறகு என்ன செய்தார்கள் என்றால், வானொலி, தொலைக்காட்சியில் எல்லாம் தோன்றி தாங்கள் பயிற்சி பெற்றது, அதனால் கிடைத்த நன்மை பற்றியெல்லாம் இவர்கள் பேட்டி கொடுத்தார்கள். இதையெல்லாம் எடுத்து பத்திரமாக உளவுத்துறை சேர்த்து வைத்துக் கொண்டார்கள். புலிகள் கையில் இருந்து யாழ்ப்பாணம் கையைவிட்டுப் போன பிறகு அந்த தானி ஓட்டுநர்கள் யார் யாரெல்லாம் பேட்டி கொடுத்தார்களோ, பிடித்துக் கொண்டுபோய் சித்ரவதை செய்து கொலை செய்துவிட்டார்கள். இது நடந்தது. அவர்களுக்கு அந்த கதி என்றால், சாதாரண மக்கள், அந்த இயக்க உறுப்பினர்களோ, அவர்களோடு சேர்ந்து போருக்கெல்லாம் போய்விடவில்லை. பயிற்சி பெற்றுக் கொண்டார்கள், அவ்வளவுதான். சிங்கப்பூரில் எல்லோருக்கும் கட்டாய ராணுவ பயிற்சி என்ற ஒரு திட்டம் இருக்கிறது. ஓராண்டோ, இரண்டாண்டோ பயிற்சி பெற்றுவிட்டு மீண்டும் பழைய வேலைக்கு வந்துவிடுவார்கள். அதனால் ராணுவத்தோடு சேர்ந்துவிடுவதில்லை. பல நாடுகளில் இந்த முறை இருக்கிறது. அந்த மாதிரிதான். ஆனால் அவர்களையெல்லாம் கொன்றுவிட்டார்கள். அப்படி இருக்கும் போது இவர்களையும் அனுப்பினால் உயிருக்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

அவர்களாக யாராவது விரும்பினால் போகட்டும். யாருக்கும் தடையில்லை. ஆனால், அவர்கள் யாருமே விரும்பவில்லை என்பதுதான் உண்மை. அவர்கள் என்ன கேட்கிறார்கள் என்றால், வீட்டில் உட்கார்த்திருந்தவர்களையெல்லாம் அகதி முகாமில் கொண்டு சென்று அடைத்து வைத்துவிட்டு, இங்கு அகதியாக வந்தவர்களையெல்லாம் கொண்டுபோய் வீட்டில் விட்டுவிடுகிறோம் என்று சொன்னால் எப்படி நம்புவது என்று கேட்கிறார்கள். கொழும்பு தூதரகத்தில் இருந்து போய் அகதி முகாம்களில் பார்க்கிறார்கள். நீங்கள் எல்லாம் வாங்க. வீட்டுக்கே போய்விடலாம், போர் முடிந்துவிட்டது என்று சொல்கிறார்கள். ஏற்கனவே வீட்டில், அவனவன் வயலில் வேலை பார்த்துக் கொண்டு, மீன் பிடித்துக் கொண்டு, உழவு பார்த்துக்கொண்டு, பள்ளிக்கூடம் நடத்திக் கொண்டிருந்தவர்களையெல்லாம் அடித்து, துரத்திக் கொண்டு

சென்று வேலி அடைத்து முகாம்களுக்குள் அடைத்துவைத்துவிட்டு, உங்களை கொண்டு சென்று வீட்டில் உட்கார வைக்கிறோம் என்று சொன்னால் என்ன அர்த்தம்? முதலில் அதை செய்து காட்டுங்கள். பிறகு எங்களிடம் வாருங்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எனவே அவர்களை எந்த வகையிலும் நிர்ப்பந்திக்கக்கூடாது, நெருக்கடி கொடுக்கக்கூடாது. சர்வதேச அளவில் ஏதிலியர்களுக்காக இருக்கக்கூடிய சட்டங்கள், ஒப்பந்தங்களின் படி அவர்கள் அனைத்து உரிமைகளோடும் தமிழ்நாட்டில் நடத்தப்பட வேண்டும். இதற்கு எச்சரிக்கையாக இருந்து நாமும் போராட வேண்டும். அவர்களும் போராட வேண்டும். சட்டப்படியும் அதை தடுக்க வேண்டும்.

நன்றி
-பாரிஸ்தமிழ்

0 comments: