இந்தியாவிற்கு வந்த சிறிலங்க அரசு குழுவுடன் இந்திய தரப்பு நடத்திய சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிக்கையும் வெளியிடப்படாத நிலையில் அது குறித்து வெளியான செய்தியின் அடிப்படையில், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச் செயலரும், தமிழர் கண்ணோட்டம் இதழின் ஆசிரியருமான தோழர் தியாகு அவர்கள் தமிழ் இணையத்தளம் ஒன்றிற்கு அளித்த நேர்காணல்:-
கேள்வி: இலங்கையில் இருந்து அதிபர் ராஜபக்சேவினுடைய சகோதரரும், அவருடைய பாதுகாப்பு ஆலோசகருமான பசில் ராஜபக்சே, பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே, அதிபருடைய செயலர் லலித் வீரதுங்கா ஆகிய மூவரும் டெல்லிக்கு வந்துள்ளனர். அவர்கள் புதன் கிழமையன்று அயலுறவுச் செயலர் சிவ்சங்கர் மேனன், தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், பாதுகாப்புச் செயலர் விஜய் சிங் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். பிறகு நமது அயலுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். இந்தப் பேச்சுக்களில் என்ன பேசப்பட்டது என்பதோ அல்லது என்ன முடிவெடுக்கப்பட்டது என்பது குறித்து இன்று காலை வரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. ஆனால், ஒரு பத்திரிக்கையில் அவர்கள் பேசியது குறித்து மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக ஒரு செய்தி வந்துள்ளது. அதாவது, இன்றுள்ள நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. எனவே மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்றும், தாங்கள் வாழ்ந்துவந்த இடங்களில் இருந்து போரின் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் மீண்டும் தங்கள் வாழ்விடங்களுக்கு திரும்ப அனுமதிக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியதாக செய்தி வந்துள்ளது. இதுகுறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?
தோழர் தியாகு: முதலில் யார் யார் பேசினார்கள் என்பதை நாம் நினைவில் வைத்து பார்க்க வேண்டும். அந்தப் பக்கத்தில் இருந்து டெல்லிக்கு வந்து பேசியிருப்பவர்கள் அவர்களுடைய பாதுகாப்புச் செயலர் கோத்தபய ராஜபக்சே, அவர்களுடைய அரசியல் ஆலோசகர் பசில் ராஜபக்சே. இன்னொருவர், சிறிலங்க அதிபரின் செயலராக இருக்கக் கூடிய லலித் வீரதுங்கா. இந்த மூன்று பெயர்களையும் நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு வந்து போகிற போது கடைசியாக கிருஷ்ணாவை பார்த்து விடை பெற்றுக் கொண்டார்கள் என்பதைத் தவிர, படத்திற்காக அவருடன் கையைக் குலுக்கினார்கள் என்பதைத் தவிர, முழுக்க முழுக்க பேச்சுவார்த்தையை நடத்தியவர்கள் யார் என்றால், இந்திய அரசினுடைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், இந்திய அரசினுடைய அயலுறவுச் செயலர் சிவ்சங்கர மேனன். இந்திய அரசினுடைய பாதுகாப்புச் செயலர் விஜய் சிங். அங்கே மூன்று பேர், இங்கே மூன்று பேர். இந்த ஆறு பெயர்களையும் மறந்துவிடாதீர்கள். ஏனென்றால், இந்த ஆறு பேரில் யாரும் அமைச்சர்கள் அல்ல. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல. அரசியல் தலைமை இல்லை இங்கே, இவர்களெல்லாம் அதிகார வர்க்கம் என்று வைத்துக் கொள்வோம்.
இவர்கள் அரசியல் தீர்வு பற்றி, ராணுவத்தை பாசறைக்கு திருப்பி அனுப்புவது பற்றி, அகதிகள் மறுவாழ்வு பற்றியெல்லாம் பேசியதாக மத்திய அரசின் வட்டாரங்கள் வழியாக செய்தி விடப்படுகிறது. அதாவது அயலுறவு வட்டாரங்கள். ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை.
இவர்கள் பெயர்களை ஏன் நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் சொல்கிறேன் என்றால், இந்த சுத்தமான யோக்கியர்கள் பெயர் இதற்கு முன்பு எப்படி வந்ததென்று நினைவுபடுத்தி பார்க்க வேண்டும்.
இதே கோத்தபய ராஜபக்சே, போர் நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு செய்தியை தெளிவாகச் சொன்னார். இதேபோல வட்டாரங்கள் அப்பொழுதும் ஒரு செய்தியைச் சொன்னார்கள். சிவ்சங்கர மேனனும், எம்.கே. நாராயணனும் பறந்து போனார்கள் கொழும்புவிற்கு, போரை நிறுத்துமாறு சொல்வதற்கு. அவர்களது கருத்து எங்களுக்கும் இணக்கமானதுதான் என்று அந்த வட்டாரங்கள், அதாவது இலங்கை அரசு. இதெல்லாம் அப்போது வந்த செய்திகள். பத்திரிக்கைகள் பரப்பிய செய்திகள். இந்த இடத்தில் கூட தலைப்பு வந்தது, போரை நிறுத்த இந்தியா கோரிக்கை, அவசரமாகச் செல்கிறார்கள். அவர்களும் சம்மதிக்கிறார்கள் என்பது போன்றெல்லாம் தோற்றம் காட்டினார்கள்.
அப்போதும் கோத்தபய ராஜபக்சே சொன்னார், அவர்கள் போரை நிறுத்த சொல்வதற்காக வரவும் இல்லை, நாங்களும் போரை நிறுத்துவதாக இல்லை. ஏனென்றால், நாங்கள் அன்றாட நிலவரங்களை, on a day to day basis இங்கே நடக்கிற ஒவ்வொன்றையும் அவர்களிடம் சொல்கிக் கொண்டிருக்கிறோம். அவர்களைக் கலந்து பேசிதான் அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுக்கிறோம். எங்களுக்குள் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. எனவேதான், அவர் என்ன சொன்னார் என்றால், ஏதோ இந்தியா தங்களை போரை நிறுத்தச் சொல்வது போலவும், இந்தியாவைக் கொண்டு போரை நிறுத்திவிடலாம் என்பது போலவும் பேசிக் கொண்டிருக்கிற தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சரத் பொன்சேகா சொன்னார், நமக்கு நினைவிருக்கும்.
எனவே, வெளியில் வருகிற செய்திகளை வைத்து எல்லாம் இவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை கணிக்க முடியாது. உண்மையிலேயே இவர்கள் பேச்சு நடத்தியதற்குப் பிறகு, அங்கு களத்தில் எடுக்கப்படுகிறத நடவடிக்கைகளை வைத்துதான் நாம் இங்கு என்ன பேசினார்கள் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.
இவர்கள் போய் பேசிவிட்டு வந்ததற்குப் பிறகுதான் அங்கு போர் தீவிரமடைந்தது. போரில் புதிய கருவிகள் கையாளப்பட்டன. புதிய அழிவுகள் ஏற்பட்டன. போரெல்லாம் முடிந்ததற்குப் பிறகு இதே கோத்தபய ஒரு பேட்டி கொடுத்தார். “இந்தியாவிற்கும் எங்களுக்கும் எந்த பிணக்கும் இல்லை”. பார்க்கப் போனால், அங்கு மூன்று பேர், இங்கு மூன்று பேர். மொத்தம் ஆறு பேர் அடங்கிய குழுதான் ஒவ்வொன்றையும் வழி நடத்தியது. அந்த மூன்று பேர்தான் இந்த சுத்த யோக்கியர்கள்தான் இப்பொழுது வந்திருக்கிற மூன்று பேர். அதே மூன்று பேர்தான் இப்பொழுது பேச வந்திருக்கிறவர்கள். அவர்களும் அவர்களும் பேசினால் என்ன பேசுவார்கள் என்பதை எளிதாக யூகிக்க முடியும். அவர்களாக வாயைத் திறந்து நாங்கள் இன்னது பேசினோம் என்று இப்பொழுது சொல்ல மாட்டார்கள். எனவே இது எல்லாமே பொய். ஆனால், என்ன பின்னணியில் இந்த பேச்சு நடத்திருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், பாசறைக்கு ராணுவத்தை திரும்பிப் போகுமாறு இந்தியா வலியுறுத்தியது என்று அந்த செய்தி கூறுகிறது. எங்கிருக்கிறது பாசறை. போர்க் களத்தில் இருந்து திரும்பிப் போகுமாறு கேட்கவில்லை. தமிழ்நாடு சட்டமன்றம், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்றும், தமிழ்ப் பகுதிகளில் இருந்து ராணுவம் வெளியேற வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றிய போது இந்தியா இதனை கேட்கவில்லை.
அக்டோபர் 14ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் போட்டார்கள். எந்தக் கட்டத்திலும் அதையெல்லாம் கேட்காமல், போரெல்லாம் முடிந்த பிறகு, ஒரு லட்சம் மக்கள் அழிக்கப்பட்டதற்குப் பிறகு, போரின் இறுதி நாளில் மட்டும் 20 ஆயிரம் பேர் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள் என்று சுயேட்சையான ஆதாரங்கள் அடிப்படையில் டைம்ஸ் நாளிதழ் லண்டனில் இருந்து செய்தி வெளியிட்டிருக்கிறது. பெரிய இழப்பு, அழிவு ஏற்பட்டிருக்கிறது என்ற சொல்லை ஐ.நா. பயன்படுத்தியிருக்கிறது. இவ்வளவும் வந்ததற்குப் பிறகு, இப்ப பாசறைக்குத் திரும்பிப் போகச் சொல்வதென்றால் என்ன காரணம்? இது சும்மா பேச்சுக்காக செய்வது. அங்கே என்ன பாசறை இருக்கிறது. எங்கே திரும்பிப் போவது?
உண்மை என்னவெனில் கிளிநொச்சியிலும், முல்லைத் தீவிலும் பெரிய ராணுவ பாசறைகளை இந்திய உதவியுடன் அமைக்கும் வேலை அங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே மக்கள் இல்லாத அந்த இடத்தில் பாசறைகளை அமைத்ததற்குப் பிறகுதான் இவர்களை இந்த முகாம்களை விட்டு அங்கு செல்வதற்கு அனுமதிக்கப் போகிறார்கள். இந்த பாசறைகள் ஏன் தேவைப்படுகிறது என்றால், காசா பகுதியிலும், மேற்குக் கரையிலும் இஸ்ரேல் யூதக் குடியேற்றங்களை பாதுகாப்பதற்காக எப்படி தன்னுடைய ராணுவத்தைப் பயன்படுத்துகிறதோ, அதேபோல் தமிழர் தாயகப் பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி, அந்த சிங்கள குடியேற்றங்களை பாதுகாப்பதற்காகவும், தமிழர்களிடம் இருந்து வரும் எதிர்ப்பை ஒடுக்குவதற்காகவும்தான் சிங்கள அரசு ராணுவ பாசறைகளை, பெரிய ராணுவ முகாம்களை, பலாலி போன்ற ராணுவ முகாம்களை எல்லா தமிழர் பகுதிகளிலும் அமைக்கப் போகிறார்கள். இதை தடுத்தோ, எதிர்த்தோ இந்தியா இதுவரை ஏதும் செய்யவில்லை, செய்யப் போவதும் இல்லை. இதில் யாருக்கும் எந்தவிதமான ஐயப்பாடும் தேவையில்லை.
கேள்வி: தற்போது முகாம்களில் வைக்கப்பட்டுள்ள அகதிகளை அவர்களின் வாழ்விடங்களுக்குச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கூட வலியுறுத்தியதாக அச்செய்தி கூறுகிறது?
தியாகு: அகதிகளை விரைவில் திருப்பி அனுப்புவது என்று சொல்கிறார்கள். முதலில் ஏன் இந்த முகாம்களை அவர்களது பிறந்த ஊர், வாழ்ந்த ஊருக்கு வெளியே கொண்டு சென்று அமைக்க வேண்டிய தேவை என்ன என்ற எழுகிறது. கண்ணி வெடி, கண்ணி வெடி அகற்றுதல் இதெல்லாம் சாக்கு. இந்த கண்ணி வெடிகளுக்கு மேல நடந்து போய்தானே அங்கு வாழ்ந்த மக்களை விரட்டி அடித்தீர்கள். அதற்கு மேல் ஏறிப்போய்தானே போர் நடத்தினீர்கள். அப்புறம் எங்கிருக்கிறது கண்ணி வெடி? கண்ணி வெடிகள் இருந்தென்றால், அந்தப் பகுதிகளில் மக்கள் முகாம் அமைக்க வேண்டாம். வேறு பகுதிகளில் அமைத்துக் கொள்ளலாமே. ஏன் அவர்களை முகாம்களில் அடைத்து வைக்க வேண்டும். அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? எந்த நாட்டு சட்டத்தின் படி இதெல்லாம் நடக்கிறது?
கேள்வி: 13வது திருத்தத்தை பலப்படுத்தி நடைமுறைப்படுத்துமாறு இந்தியா கோரிக்கை விடுத்ததாகக் கூட அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
தியாகு: அரசியல் தீர்வு பற்றி பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை.
அதேபோல, 13வது திருத்தத்தை பலப்படுத்தி அவர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும் அப்படியென்று இவர்கள் வலியுறுத்தியதாகக் கூட சொல்கின்றனர்.
ஈழத் தமிழர் இனச் சிக்கலை நன்கு புரிந்து கொண்டவர்கள், இது தொடர்பான அரசியல் தீர்வு முயற்சிகளை கவனித்துக் கொண்டிருப்பவர்களுக்கு ஒன்று நன்றாகத் தெரியும். அது என்னவென்றால், 13வது திருத்தம் மூலமாக தமிழர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்படப் போவதில்லை. தமிழர்களுக்கான ஆட்சி உருவாக்குவதற்கான வழிவகை இல்லை. பெயரளவிற்கு சிங்கள ஆட்சி மொழி, தமிழையும் துணை ஆட்சி மொழியாக வைத்துக் கொள்வது, தமிழையும், ஆங்கிலத்தையும் வைத்துக் கொள்வது, இதுபோன்ற மீண்டும் ஏற்றத் தாழ்வான விதிமுறைகளைத்தான் கொண்டு வரப்போகிறார்கள். எந்தவித அதிகாரமும் இல்லாத ஒரு மாவட்ட பஞ்சாயத்தைப் போன்ற ஒரு மாகாண பஞ்சாயத்தை ஏற்படுத்துவதுதான் இந்த திட்டமெல்லாம். அதுதான் 13வது திருத்தமென்பது.
குறைந்தது இந்திய அதிகாரிகள் பேசும்போது, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அமுல்படுத்துமாறு வலியுறுத்தினார்களா? அப்படி வலியுறுத்தியிருப்பார்களென்றால் அது வடக்கு- கிழக்குப் பகுதிகளை இணைக்க கோருகிறது.
கேள்வி: இல்லை, அப்படி எதுவும் கோரப்படவில்லை.
தியாகு: அதுதான் முக்கியமானது. ஏனென்றால் 13வது திருத்தம் அவர்கள் கொண்டு வந்தது. ஒப்பந்தத்தை அமல்படுத்துவதற்காக என்று சொல்லிக் கொண்டு அவர்கள் கொண்டு வந்தது. ஆனால், ஒப்பந்தத்திற்கும், 13வது திருத்தத்திற்கு வேறுபாடு இருக்கிறதா, இல்லையா என்பதை, வேறு யாரையும் வேண்டாம், இந்திய அரசிற்கு முழுக்க ஆதரவாக இருக்கிற சந்திரஹாசனை கேட்டாலே சொல்வார். எங்களுக்கு வேண்டியது 13வது திருத்தம் இல்லை. இந்திய-இலங்கை ஒப்பந்தம்தான் என்று அவர் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நுட்பமான வேறுபாடுகள், எம்.கே. நாராயணனுக்கோ, சிவசங்கர் மேணனுக்கோ, விஜய் சிங்கிற்கோ தெரியாது என்று மட்டும் நீங்கள் நினைத்துவிடாதீர்கள். அவர்களுக்கு இதெல்லாம் முக்கியமே இல்லை. இதெல்லாம் அவர்கள் மறைத்து வைத்திருக்கிற கொலைக் கருவிக்கு மேல் இருக்கிற பூச்சுகள். அதை மறைப்பதற்காகத்தான் இதையெல்லாம் பேசிகிறார்கள்.
இவர்களிடம் அவர்கள் வந்து பேச வந்ததனுடைய உண்மையான நோக்கத்தை இப்பொழுது சொல்கிறேன். இப்பொழுது 4வது ஈழப்போர் ஒரு கசப்பான முடிவிற்கு வந்துவிட்டது என்று புலிகள் அறிவித்துவிட்டார்கள். அது தமிழர்களுக்கு ஒரு தோல்வியில், நெருக்கடியில் முடிந்திருக்கிறது. ஏராளமான தமிழர்களை இழந்திருக்கிறார்கள், போராளிகள் மடிந்திருக்கிறார்கள். அதே நேரத்தில் மக்கள் சிறை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்கள் எல்லாம் இதுகுறித்து கவலையடைந்திருக்கிறார்கள். நெருக்கடி அடைந்திருக்கிறார்கள். அந்த விடுதலைப் படையினுடைய தலைவர் என்ன ஆனாரோ என்ற கேள்விக்குறியுடன் நின்றுக் கொண்டிருக்கிறது. இது ஒருபக்கம் இருக்கட்டும்.
ஆனால், வரலாற்றுக் கண்ணோட்டத்தைப் பார்க்கிற போது, ஓர் விடுதலைப் போர் என்பது விடுதலை இலக்கை அடைவது வரை முடிவதில்லை. களங்கள் மாறிவரும், போர் முறைகள் மாறிவரும். ஆனால், போர் தொடர்ந்து நீடிக்கும். விடுதலைப் போராட்டத்திற்கு முடிவு கிடையாது. நம்மை பற்றியோ, வியட்நாமை பற்றியோ நாம் பேச வேண்டிய தேவையில்லை.
இதே ஈழம் தொடர்பாக, இந்த போர் நடந்து கொண்டிருந்த காலத்திலேயே, சென்ற ஆண்டு அநேகமாக நவம்பர், டிசம்பரில், கிளிநொச்சி வீழ்ச்சிக்கு முன்னதாக சரத் பொன்சேகா கூறியதை நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன்.
இந்த நிலப்பகுதி முழுவதையும் கைப்பற்றுவது என்பது ஒன்றும் முடியாத காரியமில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லா நிலங்களையும் எங்களால் கைப்பற்ற முடியும். ஆனால், கைப்பற்றுவதன் மூலமாகவே பயங்கரவாதம் ஒழிந்துவிடும் என்றும் நான் நினைக்கவில்லை. ஆயிரம் புலிகள் மிச்சமிருந்தால் கூட அவர்கள் கெரில்லா முறைக்கு மாறிவிடுவார்கள். இந்த கெரில்லா தாக்குதல் நடத்தும்போது, மரபு வழி போரில் வெற்றி பெற்றதைப் போல நாங்கள் வெற்றி பெற முடியாது. அதை சமாளிப்பதற்கு நீண்ட காலம் தேவைப்படும். உண்மையிலேயே நான் அதைப் பற்றிதான் கவலைப்படுகிறேன் என்று பொன்சேகா சொன்னார்.
இரண்டாவது, கொழும்புவில் அமெரிக்கத் தூதராக இருந்து ஒய்வு பெற்றுச் சென்றவர் சென்னைக்கு வந்து ஒரு கூட்டத்தில் பேசினார். இந்த நிலங்களையெல்லாம் பிடித்து, புலிகளை போரில் தோற்கடிப்பதிலேயே இலங்கை அரசு குறியாக இருக்கிறது. அது தேவையற்றது. அப்படி செய்ய முடியாது. புலிகளை அப்படி அடியோடு தோற்கடிப்பது சாத்தியமான ஒன்று அல்ல. ஏனென்றால், எல்லா நிலங்களையும், ஒரு சதுர அங்குலம் கூட மிச்சமில்லாமல் பிடித்ததற்குப் பிறகும் அவர்கள் கெரில்லாப் போர் முறைக்கு மாறிவிடுவார்கள். மாறியதற்குப் பிறகு நீங்கள் அவர்களை ஒடுக்கிவிட முடியாது. இது நீண்ட காலம் நடக்கும். (ஏற்கனவே இந்தியாவிற்கு கிடைத்த அனுபவமெல்லாம் நமக்கு தெரியும்).
வெறும் 2,000 பொடியன்கள் என்று அழைத்த ராஜீவ் காந்தியினால், ஒரு லட்சம் படையினரை இறக்கியும் கூட அவர்களை ஒடுக்கவோ, அழிக்கவோ முடியவில்லை, இந்திய படைதான் புறமுதுகு காட்டி திரும்பி ஓடி வரவேண்டிய நிலை ஏற்பட்டது. இது பொன்சேகாவுக்கும் தெரியும், எல்லோருக்கும் தெரியும். மரபு வழி போர் என்பது எப்போதுமே அரசிற்கு பன்மடங்கு சாதகமானது. எப்போதுமே விடுதலைப் படைக்கு பாதகமானது. இதையெல்லாம் மீறி மரபு வழிப்போரில் புலிப்படை சாதனைகளைப் படைத்தது. கிளிநொச்சியை கைப்பற்றியது, ஜெயசிக்குருவை முறியடித்தது. ஆணையிறவைப் பிடித்தது. பூநகரியில் கிடைத்த வெற்றி இதெல்லாம் மிகப்பெரிய சாதனைகள்தான். ஆனால், அதற்கெல்லாம் ஒரு எல்லை இருக்கிறது என்பது தற்போது தெரிந்துவிட்டது.
அதுவும் இந்த உலகமயமாக்கல் ஒடுக்குமுறை என்ன செய்துவிட்டது என்று சொன்னால், பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் பல நாடுகளையும், பல நாடுகளினுடைய வளங்கள், சக்திகள், படை, அறிவு எல்லாவற்றையும் ஒன்று சேர்ந்து கொண்டு நசுக்குகிற போது, மக்கள் படையினால் அதை எதிர்த்து மரபு வழிப்போரில் நிற்க முடியவில்லை. ஆனால், கரந்தடிப் போர் அப்படி அல்ல. கரந்தடிப் போர் விடுதலை இயக்கங்களின் தாயகம். அங்கு அயலவன் வந்து ஒன்றும் செய்ய முடியாது.
நெடும்புனலுள் வெல்லும் முதலை அடும்புனலின்
நீங்கின் அதனைப் பிற
என்று வள்ளுவர் சொல்கிறார். ஆழ்ந்த நீர் தடாகத்திற்குள், நீர் பகுதிக்குள் முதலை வெற்றி பெறும், எதை எதிர்த்தும் வெற்றி பெறும். அது கரைக்கு வந்துவிட்டால் எதனிடமும் தோற்றுப் போகும். அதுபோலத்தான், விடுதலை இயக்கங்களுக்கு கரந்தடிப் போர் முறை என்பது. அவர்களுடைய தாய்த் தடாகம் அது. அது அவர்களுடைய நீர்நிலை. அதை வியட்நாமில் அமெரிக்கா அனுபவித்தது. இதே ஈழத்தில் இந்தியப் படை அனுபவித்தது. இப்பொழுது அந்தப் போர் மீண்டும் தொடங்கிவிடும் என்ற அச்சம் அவர்களுக்கு வந்துள்ளது.
இப்பொழுது அவர்கள் இன்னும் தொடங்கவில்லை. ஏனென்றால் இந்தப் போரில் மிச்சம் இருப்பவர்கள் மீண்டும் தங்களை அணி சேர்த்துக் கொண்டும், இந்தப் பகுதிகளை உடைத்துக் கொண்டு வெளியேறியவர்கள், அது வரப்போகிறது என்று தெரிந்து கொண்டு முன்கூட்டியே போய் வேறு இடங்களில் தங்கிக் கொண்டவர்கள், அது அம்பாறையில், மட்டக்களப்பில், யாழ்ப்பாணத்தில், வன்னிக் காட்டினுடைய பிற பகுதிகளில் போயிருக்கிறவர்கள், அவர்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள், அமைப்பாக ஒன்று திரண்டுக் கொண்டிருக்கிறார்கள். உலகத் தமிழர்களுடைய போராட்டங்கள், தமிழகத் தமிழர்களுடைய போராட்டங்கள், அவர்கள் நடத்துகின்ற விடுதலைக்கான போராட்டங்கள், இவற்றிற்கிடையே ஒரு இசைவு ஏற்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அப்படியொரு முறையான ஒழுங்கமைப்பு வந்து, திட்டமிட்டு மீண்டும் ஒரு கறந்தடிப் போரைத் துவங்குவதற்காக காத்திருக்கிறார்கள்.
அப்படி காத்திருப்பது இந்த அரசிற்கு மிக நன்றாகத் தெரியும். சிங்கள அரசிற்கும் தெரியும், இந்திய அரசிற்கும் தெரியும். இதை முறியடிப்பதற்கு இவர்கள் தொலைநோக்குடன் திட்டமிட ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக அண்மைக் காலத்தில் அங்கு சில நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன. காட்டிலிருப்பவர்களையெல்லாம் தேடி அழிக்கிற முயற்சியில், Fleshing out, wiping out என்று சொல்லி ராணுவத்தைக் கொண்டு போய் இறக்கியிருக்கிறார்கள். அப்படி போன ராணுவத்தினர் பல இடங்களில் தாக்கப்பட்டிருக்கிறார்கள்.
4 நாட்களுக்கு முன்பு மணலாற்றிற்கு அருகில் நெடுங்கேணியில் இப்படி தேடிச் சென்ற ராணுவத்தினரை புலிகள் தாக்கியதில் 150 படையினர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த செய்திகளையெல்லாம் வெளியில் விடாமல் மறைத்து வைத்திருக்கிறார்கள். அதற்குப் பிறகுதான் பதறியடித்துக் கொண்டு இவர்கள் இங்கே வந்திருக்கிறார்கள். எனவே, எப்படி காட்டுப் பகுதியில் இந்தப் போரை தொடர்ந்து கொண்டு செல்வது. கறந்தடிப் போரை எப்படி சமாளிப்பது. இதுபற்றிப் பேசுவதற்காகத்தான் இவர்கள் டெல்லிக்கு வந்தது. இதற்கான கருவிகள், இதற்கான ஆயுதங்கள், இதற்கான ஆலோசனைகள், இதற்கான படை உதவி, இதற்கான கருவிகள் பெறுவதற்காகத்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
இதே பசில் ராஜபக்சே, பாகிஸ்தானுக்கும் இரண்டு முறை போனார். போருக்கு முன்னாடி ஒரு முறை போனார், போர் நடந்து கொண்டிருக்கும் போது ஒரு முறை போனார். ஏன் போனார்? பாகிஸ்தான் அரசு ஒன்றும் சுயாட்சி பற்றி, 13வது திருத்தம் பற்றி அல்லது ஒப்பந்தம் பற்றி ஏதாவது பேசப் போகிறதா? அதெல்லாம் ஒன்றுமே கிடையாது. அவர் எதற்குப் போனால் என்றால், ஒரு 25 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருக்கிற விமானத்தில் இருந்து கொண்டு கணினியின் துணையோடு, ஒரு மனிதன் நிலத்தில் இருக்கிறது அந்த இடத்தைப் புள்ளி வைத்து அங்கிருந்து தாக்கினால் சரியாக அங்கு சென்று தாக்கக்கூடிய பிரிசிஷன் பாமிங் என்ற அந்த குண்டு வீச்சு முறை, அதற்கான கருவி, அதை இயக்குவதற்கான வான் படை ஆள், இது எல்லாமே பாகிஸ்தானில் இருந்துதான் வரவழைக்கப்பட்டது. அந்த வான் படை ஆளைக் கொண்டுதான், அந்த முறையில்தான், சமாதானச் செயலகம் கிளிநொச்சியில் எங்கிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும் என்பதால் அந்த இடத்தை குறிபோட்டு தமிழ்ச்செல்வனைக் கொன்றார்கள். அதுதான் அந்தப் போரில் மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது நமக்குத் தெரியும். தமிழ்ச்செல்வனைக் கொன்றது அப்படித்தான். அதற்கு இந்த பசில்தான் போய் பேச்சுவார்த்தை நடத்தி இந்தக் கருவிகளைப் பெற்றுக் கொண்டு வந்தார்.
அதேபோல், புதுக்குடியிருப்பில் போய் கடுமையாக இவர்கள் சிக்கிக் கொண்டிருந்தபோதுதான் மீண்டும் பசில் அங்கு போனார். நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இவர் அங்கு போய்தான், அதற்கான கருவிகள், மற்ற வழிமுறைகள், பாகிஸ்தானிய ராணுவ உதவிகளையெல்லாம் பெற்றுக் கொண்டு வந்தார். சீன டாங்கிகளும், பாகிஸ்தானிய விமானங்களும், இந்திய ராடார்களும், மூன்று நாடுகளுடைய ராணுவ அறிவுரைகளும், இதோடு ஈரான் மற்ற சில நாடுகளையெல்லாம் இணைத்துக் கொண்டுதான் இந்தப் போரை அவர்கள் நடத்தினார்கள்.
இதற்காகத்தான் அவர்கள் டெல்லிக்கு வந்தார்கள். இந்த கொலைத் திட்டத்தை, சதித்திட்டத்தை மறைப்பதற்காகத்தான் இந்த 13வது திருத்தம், ராணுவம் பாசறைக்கு போய்விட வேண்டும் என்று சொல்வதும், அப்படியே இந்தியா மிரட்டியது போல் பேசியது போலவும், இல்லையென்றால் நாங்கள் வந்து தலையிடுவோம். எப்ப தலையிடுவது? தலையிடுவதற்கான நேரம் இதுவா? கடைசி காலத்தில் எங்களை சுற்றி வளைத்துக் கொண்டு வெள்ளை பாஸ்பரஸ் குண்டுகளால் எங்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள், எங்கு பார்த்தாலும் குண்டு வெடிக்கிறது, இந்த உலகத்திற்கு கண்ணில்லையா? காதில்லையா? இதை தடுப்பதற்கு யாராவது வரமாட்டார்களா என்று கதறிக் கொண்டிருந்தார்கள். செஞ்சிலுவைச் சங்கம் கப்பலைக் கொண்டு போய் கடலோரத்தில் நிறுத்திக் கொண்டு, உணவை கொண்டுபோய் கொடுப்பதற்கு மறுக்கிறார்கள், நோயாளிகளை ஏற்றி வருவதற்கு அனுமதி மறுக்கிறார்கள் என்று சொன்னார்கள். முள்ளிவாய்க்காலில் கடைசியாக மிச்சமிருந்த அந்த மரத்தடி மருத்துவமனை கூட தொடர்ந்து மூன்று நாட்கள் பீரங்கிக் குண்டுகளால் தாக்கி அடியோடு தகர்த்தார்கள். செஞ்சிலுவைச் சங்கமே சொல்லியது, சிங்கள ராணுவம்தான் இந்த தாக்குதலை நடத்துகிறது, பீரங்கிக் குண்டுகளால் தாக்குகிறார்கள், கனரக ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்று சொல்லிவிட்டு தாக்குகிறார்கள் என்ற போதெல்லாம் தலையிடாத இந்தியா, இப்போ போய் நான் தலையிடுவேன் என்று மிரட்டியதாம்! ராஜரீகமாக பேசினார்களாம். சொல்கிறார்கள். உதவி செய்வதற்கு நாங்களே வந்துவிடுவோம் என்று சொன்னார்களாம். அதெல்லாம் தேவையில்லை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் என்று அவர்கள் கூறினார்களாம்.
உண்மையிலேயே தமிழர்களுக்கு சமத்துவ உரிமை கொடுப்பது என்றால், சிங்களவனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்கிற மாதிரி, தமிழனுக்கு ஒரு பார்லிமெண்ட் இருக்குமான்னு கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பது போல, தமிழர்களுக்கு ஒரு குடியரசுத் தலைவர் இருப்பாரான்னு கேட்டாங்களா? சிங்களவர்களுக்கு ஒரு படை இருப்பது போல், தமிழர்களுக்கு ஒரு படை இருக்கணும்னு கேட்டாங்களா? எதுவுமே இல்லாம சமத்துவம்னா, அப்ப என்ன அர்த்தத்துல சமத்துவம்?
எனவே இது எல்லாமே ஏமாற்று, மோசடி. நாம் வரிகளைப் படித்தால் மட்டுமே போதாது, வரிகளுக்குப் பின்னால் மறைந்திருக்கிற உண்மைகளையும் புரிந்து கொள்ள வேண்டும். அதுவும் இப்படிப்பட்ட மகா யோக்கியர்கள் கூடிப் பேசுகிறார்கள் என்றால், அவர்கள் ஏதோ தமிழர் நலன் பற்றி பேசுவார்கள் என்று யாரும் கனவிலும் நினைக்க வேண்டாம். மீண்டும் சூழ்ச்சித் திட்டங்கள் டெல்லிக்கும், கொழும்புவிற்கும் இடையே உருவாக்கப்படுகின்றன. அவற்றை முறியடிப்பதற்கு தமிழர்கள் விழிப்போடு இருக்க வேண்டும். அந்த விழிப்பின் அடையாளமாக போர்க் குற்றவாளிகளாக சிங்கள அரசுத் தலைவர்களையும், இந்திய அரசுத் தலைவர்களையும் உலக நீதிமன்றத்தில் கூண்டில் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை தமிழர்கள் வலியுறுத்த வேண்டும். ஐக்கிய நாடுகள் அந்த அகதி முகாம்களுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு செய்ய வேண்டும். உள்நாட்டிலேயே அகதிகளாக்கப்பட்டுள்ள தமிழர்களை அவரவர் சொந்த ஊரிலேயே கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று நாம் வலியுறுத்த வேண்டும். இதையெல்லாம் இந்தியா வலியுறுத்தும் என்று எதிர்பார்ப்பதோ, அது வலியுறுத்த வேண்டும் என்று பேசிக் கொண்டிருப்பதோ அர்த்தமற்றது. இதுதான் இதிலிருந்து நமக்கு தெரியக்கூடிய செய்தி.
இதன் 2- ஆம் பகுதி திங்கட்கிழமை…
நன்றி
paristamil
Headline
அரசியல் தீர்வு பற்றி பேசுவதெல்லாம் ஏமாற்று வேலை - தியாகு
Subscribe to:
Post Comments (Atom)
1 comments:
சிறந்த பதிவு
சிவா.......
பன்றி கொலை தொடர்பாக
ஒரு மெயில் அனுப்பியுள்ளேன்..
Post a Comment