Headline

பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும் - கொளத்தூர் மணி


விடுதலைப் புலிகளின் முப்பத்து மூன்று வருடகால ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டதாக கடந்த மே 18-ம் தேதி இலங்கை அரசு அறிவித்தது.

ஆனால் அதற்கு முன்பே அதே மே மாதம் 2-ம் தேதி இலங்கையில் போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, இலங்கைக்கு உதவுவதற்காக 92 வாகனங்களில் ராணுவத் தளவாடங்களையும், பீரங்கி டாங்கி-களை-யும்

இந்திய அரசு கொச்சின் வழியாக இலங்கைக்கு அனுப்புவதாகத் தகவல் பரவ, கோவையில் பெரியார் தி.க.வினரும், ம.தி.மு.க.-வினரும் அந்த வாகனங்-களை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்குச் சென்ற ஈழ ஆதரவாளர்கள், அந்த வாகனங்களைத் தாக்கி சேதப்படுத்தினர். இந்தச் சம்பவத்திற்காக பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்பட 250 பேர் மீது வழக்கு பதிவு செய்த காவல்-துறை, இதுவரை 75 பேரை கைது செய்துள்ளது. மற்றவர்களையும் தேடி வருகிறது. அது-மட்டுமல்லாமல் கையில் சிக்குபவர்-களையெல்லாம் கைது செய்து, இந்த வழக்கில் சேர்த்து வருவதாகவும் காவல்துறை மீது குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர் ஈழ ஆதரவாளர்கள்.


இந்நிலையில் சில தினங்களுக்கு முன் கோவை மத்திய சிறையில் ராமகிருஷ்ணனைச் சந்தித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், இன்னும் போலீஸிடம் சிக்காமல் இருப்பவர்களை அடையாளம் காட்டும்படி மிரட்டியதாகவும் தகவல்கள் உள்ளன. ஈழத்திற்காகப் போராடி வந்தவர்கள், தற்போது ஈழ ஆதரவாளர்களுக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளதாகவும், அதுவும் தமிழக அரசிடம் இருந்து பாதுகாப்பு வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை ‘ஈழ ஆதரவாளர் விடுதலை கோரிக்கை மாநாடு’ கோவையில் நடந்தது. மாநாட்டில் கொளத்தூர் மணி, சீமான், ‘கற்றது தமிழ்’ ராம், பாவாணன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.

கொளத்தூர் மணி பேசுகையில், “ஈழத்தில் சிங்கள அரசு இனவெறித் தாக்குதலைத் தொடங்கியதிலிருந்தே நாம் இங்கே பொங்கியெழ ஆரம்பித்துவிட்டோம். ஈழ மக்கள் படுகொலை செய்யப்படுவதற்கு இந்திய அரசே துணை நிற்பதைக் கண்டு தாங்கிக்கொள்ள முடியாமல் முத்துக்குமார் தொடங்கி பதினைந்திற்கும் மேற்பட்ட ஈழ ஆதரவாளர்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

ஈழம் அழிந்து வருவதைப் பொறுக்க முடியாமல் நாம் எல்லோரும் கொதித்துக் கொண்டிருந்த வேளையில், போர் உச்சகட்ட நிலையில் இருந்த-போது, எதற்கும் அஞ்சாமல் மத்திய அரசு தமிழகம் வழியாகவே இலங்கைக்கு ராணுவத் தளவாடங்களை அனுப்பியது. கோவை வழியாக ராணுவ வாகனங்கள் சென்றபோது, மானமுள்ள தமிழர்கள் ஒன்றுகூடி அந்த வாகனங்களை வழிமறித்தனர். ‘எங்கள் வரிப்பணத்தில் எங்கள் இனத்தையே அழிப்பதா!’ என்று மத்திய, மாநில அரசுகளை எச்சரித்தனர்.

மத்திய, மாநில அரசுகள் ஆற்ற வேண்டிய கடமையை அவர்கள் செய்யாததால், மக்களே செய்தனர். கடமையைச் சரியாகச் செய்த எங்களுக்குக் கிடைத்த பரிசு தேசிய பாதுகாப்புச் சட்டமா? இந்த அநீதியை இனியும் அனுமதிக்கக் கூடாது.

மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசு, பெரியார் திராவிட கழகத்தை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கலாமா என்று ஆலோசித்து வருகிறது. அறிவிக்கட்டுமே! பெயரை மட்டும்தானே அவர்களால் தடை செய்யமுடியும்? அப்படி மத்திய அரசு தடை விதித்தால் பெரியார் திராவிட கழகம், பிரபாகரன் திராவிட கழகமாக உருவெடுக்கும்” என்றார் அதிரடியாக.



பலத்த எதிர்பார்ப்புக்கிடையில் மைக்கைப் பிடித்தார் சீமான். “இதுவரை ஈழ விடுதலைக்காகப் போராடினோம். ஆனால் இன்று ஈழ ஆதரவாளர்கள் விடுதலைக்காகப் போராட வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. நான் என்ன பேசினேன் என்பதற்காக தமிழக அரசு என் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தைப் பாய்ச்சியது என்பது எனக்குத் தெரியவில்லை. நான் பேசியது புதுவையில். ஆனால் வழக்கு பதிவு செய்யப்-பட்டது பாளையங்-கோட்டையில். பிரபாகரனை அண்ணன் என்று கூறியது குற்றமா? இத்தாலியில் பிறந்த சோனியாவை அன்னை என்று கூறும்போது, என் மண்ணில் பிறந்த பிரபாகரனை அண்ணன் என்று கூறுவது குற்றமாகத் தெரிகிறதா நம் தமிழக அரசுக்கு?

இலங்கையில் நடக்கும் படுகொலையைத் தடுக்க மத்திய அரசு தவறிவிட்டது. அதனால்தான் தமிழகத்தில் நாங்கள் போராடுகிறோம். இந்திய ராணுவமே எங்களுக்கு எதிராக வந்தாலும் வெறும் கையோடு அவர்களை விரட்டி அடிப்போம். தற்போது ஆஸ்திரேலியா, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கிவிட்டது. அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அவர்கள் வாழும் நாட்டின் பாராளுமன்றங்களின் முன் ஈழ விடுதலைக்காக ஆர்ப்பாட்டங்-களை நடத்துகிறார்கள். ஆனால் தமிழகத்தில் அதைப் பற்றிப் பேசக்கூட அனுமதி இல்லை. அது ஜனநாயக நாடா அல்லது இந்தியா ஜனநாயக நாடா?

ஈழத்திற்காகக் கதறினோம், கத்தினோம், புலம்பினோம். இது பிழையா? இதற்குக்கூட அனுமதி இல்லாத நாடு, என்ன நாடு? தமிழனாகப் பிறந்தது தப்பா? தமிழா இனி உனக்கு நாடில்லை. மத-மில்லை. ஜாதியும் இல்லை. இனி உனக்கென்று எதுவும் இல்லை. இனி தமிழனின் பொதுச் சொத்து சிறை மட்டும்தான். வேண்டுமென்றால் இனம் மாறிப்போய்விடு.

இந்திய தேசமே அழிந்துபோனாலும் பரவாயில்லை, ஒரு விடுதலைப் புலிகூட இருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலையும் மத்திய அரசே, ஈழத்தை அழித்துவிட்டு இந்தியாவை-யும் அழிக்க வருவான் சிங்களன்.

ஈழத்தில் போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்துள்ளது. இலங்கையில் தமிழனுக்குச் சம உரிமை கிடைக்க வழி வகுக்கப்படும் என்று இலங்கை அரசு கூறுகிறது. பசிக்குச் சோறு தராத சிங்களனா, என் மக்களுக்குச் சம உரிமை தரப் போகிறான்.

பசியால் துடித்துக்கொண்டிருக்கும் என் மக்களுக்கு உணவு வழங்க ‘வணங்காமண்’ என்ற கப்பலை அனுப்பி வைத்தது சில நல்ல உள்ளங்கள். அதைக்கூட ஏற்க மறுக்கிறது ராஜபக்ஷே அரசு. சென்னை துறைமுகத்தில் நிற்கும் அந்தக் கப்பலை இலங்கைக்கு அனுப்ப தமிழக அரசும், மத்திய அரசும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. ஏன் குண்டடி பட்டு செத்தது பத்தாதா, பசியிலும் சாக வேண்டும் என்று ஆசைப் படுகிறதா இந்த அரசுகள்?

ஐ.நா.சபையில் நடந்த வாக்கெடுப்பில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்ததில் இருந்தே தெரியவில்லையா, தமிழ்நாடு இந்தியாவில் இல்லை என்பது? ஒரு மனிதனின் மரணத்திற்கு ஆயிரம் திரைக்கதை எழுதுகிறது, இலங்கை அரசு. நம் இனத்தின் சூரியன் அழியாது. தமிழ் ஈழ தேசக் கொடியை ஏற்றாமல் பிரபாகரன் தலை சாயாது” என்று ஆவேசம் குறையாமலேயே பேசி முடித்தார் சீமான்.


நன்றி
-தமிழ்ஸ்கைநியுஸ்

0 comments: