Headline

யுத்த வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை - திலினா வீரசிங்க


விடுதலைப் புலிகளை அழிப்பதில் உறுதியாக இருந்த மகிந்த அரசாங்கம் தமிழர்களுக்கான சிறந்த அரசியல் தீர்வினை முன்வைப்பதற்கான திட்டங்களையும் வகுத்து வைத்திருக்க வேண்டும். யுத்தம் முடிவடைந்து மூன்று வாரங்கள் பூர்த்தியான நிலையிலும் அரசியல் தீர்வினை முன்வைக்க அரசாங்கம் தவறி விட்டது. இது தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு என்ற விடயத்தின் சாத்தியத்தினை கேள்விக்குட்படுத்துகின்றது.

புலிகள் மக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்துவதாக கடும் குற்றச்சாட்டினை முன்வைத்த அரசாங்கம் இன்று வன்னியிலிருந்து வந்த மக்களை இராணுவ முகாம்களுக்கு மத்தியில் சுற்றிவளைத்து முகாம் அமைத்து தங்க வைத்திருப்பது மட்டும் நியாயமானதா? அவர்கள் இப்பொழுது அரசின் மனிதக் கேடயங்களாகியிருக்கின்றனர் என குளோபல் தமிழ் செய்திகளுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குற்றம்சாட்டுகின்றார் இலங்கையைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரும் பெண்ணியவாதியுமான திலினா வீரசிங்க.


அரசியல் அதிகாரத்தினைப் பெறுவதற்காக போராடிய ஆயதக் குழுவொன்றினை அரசாங்கம் தோற்கடித்துள்ளது. இதனால் மட்டும்; அரசாங்கம் கூறும் சுதந்திரமும், ஜனநாயகமும் இலங்கையில் ஏற்பட்டு விடப்போவதில்லை. கடந்த இரண்டு வருடங்களாக முன்னெப்போதுமில்லாத வகையில் தமிழ் மக்கள் மீது கடும் வன்முறையைப் பிரயோகித்து 30 வருட போhட்டத்தினை அரசாங்கம் அடக்கியிருக்கின்றது. இதனால் புலிகள் மட்டுமன்றி வடக்கு கிழக்கு வாழ் மற்றும் இதர பகுதி வாழ் தமிழ் மக்களும் பெரும் பிரச்சினைகளை சந்தித்திருந்தனர். தமது எதிரிகளை அழித்து விட்டதாக அரசு கூறுகின்றது. ஆனால் எதிரிகள் உருவாக்கிய பிரச்சினையும், யுத்தத்தினால் பெரும் அவலத்தினை சந்தித்த மக்களும் அவ்வாறே இருக்கின்றனர்.

புலிகள் தோற்கடித்தது மட்டும் அனைத்து பிரச்சினைகளுக்கு தீர்வாகாது. புலிகள் இல்லாததனை காரணமாகக் கொண்டு தமக்கு சார்பான தமிழ்ப்பிரதிநிதிகளைப் பயன்படுத்தி அரசாங்கம் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறையைக் கட்டவிழத்து விடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. புலிகளின் தோல்வியினால் தமிழர்கள் பாதுகாப்பற்ற உணர்வினை கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு முன்வைக்கப்படாத நிலையில் புலிகளை அழித்து விட்டதாக அரசு கூறுவது அர்த்தமற்றது. ஏனெனில் இது பல ஆயுத மோதல்களின் தொடராக அமையப்போகின்றது.


இன்று இந்த யுத்த நடவடிக்கையில் தமிழ் மக்கள் தமது தாயகத்தினை இழந்து நிற்கின்றனர். அடிப்படை வசதிகள் இன்றி பெரும் துன்பத்தினை அந்த மக்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்றனர். இது பெரும் மனிதாபினமானப் பிரச்சினையாகும். ஒரே நாட்டில் கூடி வாழ்ந்த சமூகம் பெரும் அவலத்தினை சந்தித்து நிர்க்கதியாக நிற்கும் நிலையில் தென்னிலங்கை புலிகளின் வீழ்ச்சியினை யுத்த முடிவினை கொண்டாடி மகிழ்ந்தது பெரும் கொடுமையாகும். வடக்கில் மக்கள் கொன்று குவிக்கும் போது தெற்கில் மக்கள் அமைதியாக இருந்தனர். சிங்களவர்கள் பிரபாகரனின் இறப்புச் செய்திக்காக காத்திருந்தனர்.

இந்த பேரவலத்திற்கு அரசாங்கம் மனிதாபிமான நடவடிக்கை என்று பெயர் சூட்டியது பெருத்த அவமானத்திற்குரியதாகும். இலங்கை வரலாற்றில் மிக மோசமான யுத்த நடவடிக்கையை அரசாங்கம் நடத்தி முடித்திருக்கின்றது. முன்னைய அரசாங்கங்கள் யுத்தம் செய்திருந்தன. ஆனால் மக்களின் இழப்பினைக் கருத்திற்கொண்டு அவை செயற்பட்டன. ஆனால் இந்த அரசாங்கம் மனிதாபிமானம் என்ற விடயத்தினை துச்சமென மதித்துள்ளது. அது மட்டுமன்றி இப்படியொரு யுத்தத்தினை நடத்தாமை குறித்து முன்னைய அரசாங்கங்கள் மீது கடும் குற்றச்சாட்டினை முன்வைக்கின்றன.

தமிழ் மக்களுக்கு எதிராக மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. முகாம்களில் இன்னும் உரிமை மீறல்கள் நிகழுகின்றன. புலிகள் தமது இயக்கத்திற்கு பலவந்தமாக ஆட்களைத் திரட்டினர் என்று குற்றம் சுமத்தும் அரசாங்கம் புலிகளிடமிருந்து தப்பி வந்த மக்களைக் கொன்று மனித உரிமை மீறல்களை நிகழுத்துவது எந்த விதத்தில் நியாயம்? இந்த செயற்பாடுகளை அரச ஊடகங்கள் ஊடாக அரசாங்கம் நியாயப்படுத்துகின்றமை தமிழ் மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாகும்.

தமிழ் மக்கள் தமது மனித கௌவரத்தினை இழந்து நிற்கின்றனர். அவர்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். அவர்கள் சுயமாக உழைத்து வாழ்ந்த தாயகப் பகுதியின் நிலை என்ன? தென்னிலங்கை மக்கள் தமது பிரதேசம் தொடர்பாக அனுபவிக்கும் உரிமைகள் அனைத்தும் வன்னி மக்களுக்கும் உண்டு. இந்த நிலையில் அவர்களுக்கான மீள் குடியேற்றத் திட்டங்கள் எவ்வாறு அமையப்போகின்றன? முகாம்களில் குடும்பங்களைப் பிரித்து வைத்திருக்கின்றனர். அவர்களை எப்படி மீள ஒன்றுசேர்க்கப் போகின்றது அரசாங்கம்? 2 நிமிடம் நூடில்ஸ் செய்வதைப்போன்று 180 நாட்களில் இவர்களை குடியேற்ற முடியுமா? சிங்கள மக்களையும் அங்கு குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? இதனை எல்லாம் பார்க்கும் போது எதிர்காலத்தில் மிக மோசமான மற்றுமொரு பிரச்சினையை இலங்கை அரசாங்கம் சந்திக்கப்போகின்றது.

சிங்களத்தின் அநீதியினை எதிர்த்தே தமிழ் இளைஞர்கள் ஆயுதமேந்தி போராடினர். இதனை அரசாங்கம் உணர வேண்டும். புலிகளின் பயங்கரவாதச் செயல்களுக்கு இலங்கை அரசாங்கங்களும் ஒருவகையில் பொறுப்பாளிகளே. புலிகளைப் பிடிக்கின்றேன் என்று தமிழ் மக்கள் மீது கட்டவிழத்து விடப்படும் அடக்குமுறைகளை அரசாங்கம் கைவிட வேண்டும். அதுவரை நாட்டில் யுத்தம் முடிவடைந்து விட்டது என்று கூறுவதில் அர்த்தமில்லை. இந்த நிலை தொடர்ந்தால் நாட்டில் மோசமான யுத்த வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை.

ஜனாதிபதியினை சூழ பிற்போக்கு யுத்த வாத அரசியல் சக்திகளே அணி வகுத்து நிற்கின்றன. தனது அதிகாரப்பலத்தினை வெளிப்படுத்தும் ஆசை கொண்டவராக ஜனாதிபதி இருக்கின்றார். புலிகளைத் தோற்கடித்ததன் பின்னர் தமிழர்களுக்கு அரசியல் தீர்வு தேவையில்லை என்பதே இச்சக்திகளின் ஒட்டுமொத்த கருத்தாகும். இதனையே சாதாரண சிங்களப் பொது மக்களும் கூறுகின்றனர்.

யுத்தவெற்றிக்காக இந்தியாவின் பகைமை நாடுகளான சீனா, பாக்கிஸ்தானுக்கு இலங்கை களம் அமைக்க இடமளித்து விட்டது. அப்பாவி தமிழர்களைக் கொன்று அவர்களின் தாயகப்பகுதிகளை அபகரித்து கொண்ட சிங்களவர்கள் அநியாயமாக வெளிநாட்டுச் சக்திகளுக்கு அப்பகுதிகளை தாரை வார்த்து விடும் நிலை தான் இதனால் ஏற்படப் போகின்றது. அப்பொழுது வடக்கு கிழக்குக்கு உரிமை கோர முடியாத நிலை சிங்களவர்களுக்கு ஏற்படும். தமிழ் மக்களுக்கு வடக்கு கிழக்கு உரித்தாவதனை விரும்பாத சி
சிங்களவர்கள் ஏதோ ஒரு வெளிநாட்டுச் சக்தி அப்பகுதிகளில் அதிகாரம் செலுத்துவதனை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நிலை ஏற்படப் போகின்றது.

தமிழ் மக்களுக்கு எதிராக பெரும் கொடுமைகளை இழைத்த அரசாங்கத்தின் பிரதிநிதிகள் யுத்தக் குற்றவாளிகள். சர்வதேச சட்டங்களின் அடிப்படையில் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் நான் ஜெனீவாவுக்கு சென்று எனது நாட்டில் 2 கோடி மக்கள் பார்த்திருக்க தமிழினப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்று கூறுவேன். இலங்கையில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஊடகச்சுதந்திரம் கருத்துச் சுதந்திரம் அடக்குமுறைக்குட்படுத்தப்பட்டுள்ள நிலையில் இது சாத்தியமில்லை தான். இவ்வாறு கூறுவதற்காக என்னை சிங்களப் புலி என்று கூறுவர். அதற்காக என்னைக் கொல்லவும் துணிவர். அதற்கு நான் அச்சப்பட மாட்டேன். ஆனால் நான் ஒரு பெண்ணாக இருப்பதனால் என்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியே கொல்வர். இதனையே நான் வெறுக்கின்றேன்.

யுத்த வெற்றியினை ஒருவாரம் கொண்டாடியது தமிழர்களை பெரிதும் பாதித்துள்ளது. இந்த கொண்டாட்டங்கள் ஊடாக தான் தெரிகின்றது பிரபாகரனுக்கு சிங்களவர்கள் எந்தளவுக்கு பயந்திருக்கின்றார்கள் என்று. சிங்கள சமூகம் அவரை பெரும் விரோதியாகவும், பயங்கரவாதியாகவும் பார்த்தாலும், என்னைப் பொறுத்தவரையில் அவர் வரலாற்றில் ஓர் நாயகனுக்குரிய அந்தஸ்தினை பெறும் தகுதி கொண்டவர். ஓர் சமூகத்தினை ஆட்டிப்படைப்பது என்பது எளிதானதல்ல. அதனை சாதாரண எவராலும் செய்து முடிக்க இயலாது. அவரின் இறப்பினை பார்த்து சிங்கள சமூகம் மன மகிழ்ந்தது. காலையில் பௌத்த உரையைக் கேட்கும் சிங்களப் பௌத்தர்கள் இரவில் பிரபாகரனின் சடலத்தினை தொலைக்காட்சிகளில் பார்க்க குதூகலித்துக் கொண்டிருந்தனர். ஒருவகையில் பிரபாகரனின் வீரத்தினை ஊதிப்பெருக்கியதும் சிங்கள மக்களே.

என்னைப் பொறுத்தவரை கிழக்கு நிலைமைகள் தான் வடக்கில் ஏற்படப் போகின்றன. கிழக்கில் அரசாங்கத்தின் தழிழ்ப் பிரதிநிதிகள் பெரும் அடக்குமுறையை தமிழ் மக்கள் மத்தியில் கட்டவிழ்த்து விட்டுள்ளனர். ஜனநாயகம் அங்கு நிலவுவதாகக் கூறப்பட்டாலும் அந்த மக்கள் அச்சத்துடன், பாதுகாப்பின்றி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறையை அரசாங்கம் தமது தரப்பில் இருக்கும் தமிழ் தலைமைகளைக் கொண்டு கட்டவிழ்த்து வருகின்றது. இவ்வாறான நிலை வடக்கில் தொடராது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை.

நன்றி
-globaltamilnews

0 comments: