Headline

ஈழத்தில் தினமும் 10 பேராவது பசியால் இறக்கிறார்கள்


பிரபாகரன் மர்மத்துடன் முடிந்துவிடுமா ஈழத்தவர் துயரம்? வெள்ளை பாஸ்பரஸ் கொன்ற உயிர்களின் வலி சில வெள்ளை நாடுகளுக்குப் புரியாமல் போகலாம். ரசாயனக் குண்டுகள் தின்ற மக்களின் குரலை ரஷ்யா உள்ளிட்ட கம்யூனிஸ்ட் நாடுகள் கண்டுகொள்ளாமல் போகலாம்.

அடிமை விலங்கை உடைக்கப் பாடுபட்ட ரணத்தை உணராத தலைமுறை இந்தியாவை ஆளலாம். ஆனால், புரட்சியின் அடையாளமாக உலகம் இன்று வரை நினைத்துப் பார்க்கும் கியூபா, அதுவும் ஃபிடெல் காஸ்ட்ரோவின் நாட்டுக்குமா புரியவில்லை ஈழத்தவன் ஓலம்?


தமிழ்ப் பிழைப்புக் கூட்டமும் சர்வதேசச் சமுதாயமும் கைகழுவிவிட்ட தமிழீழச் சமூகம் கம்பி வேலிக்குப் பின்னால் வேதனையில் தவிக்கிறது. உங்களில் யார் எங்களுக்கு உணவு தருவீர்கள்? தண்ணீர் தருவீர்கள்? ஆசை வார்த்தை பேசுவீர்கள்? இப்படிப் பார்வையால் கேட்பது மூன்று லட்சம் மக்கள்! 'அன்புள்ள, அப்பா, தங்கை அறிவது. இங்கு யாவரும் நலமே. உங்கள் சுகம் எப்படி? அம்மாவை வவுனியா வைத்தியசாலைக்குப் போய்ப் பார்த்தீர்களா? இங்கு ஏன் வந்தோம் என்றிருக்கு? சாப்பாடு லைனில் நின்று வாங்க வேண்டும்.


சிலவேளை முடிந்துவிடும். முடிந்தால் கிடைக்காது. திருப்பித் தர மாட்டார்கள். பிள்ளைக்கு மா பெட்டி இல்லை. குழந்தைக்குரிய சாப்பாடு ஏதும் இல்லை. விளக்கு எடுக்க எந்த எண்ணெயும் இல்லை. ஏன்டா வந்தோம் என்றிருக்கு. அங்கு செல்லடி என்றாலும் சமைச்சுச் சாப்பிட்டம். இங்கு சாப்பாடு இல்லாமல் சாகப் போறோம்...'' என்று துயரம் கலந்த வார்த்தைகளால் தொடர்கிறது அந்த இளைஞனின் கடிதம். இது ஒருவனின் கடிதம் அல்ல. ஓர் இனத்தின் கடிதம்.

துயந்தினி, குகந்தினி, துஷ்யந்தினி மூவரும் சகோதரிகள். ''எங்கள் அப்பா பெயர் யோகேஸ்வரன். அம்மா பெயர் சாந்தி. அவர்களைக் காணவில்லை. நாங்கள் தங்கியிருந்த பங்கரில் குண்டு விழுந்ததும், எல்லாரையும் மாதிரி நாங்களும் ஓடினோம். என் அம்மா, அப்பாவுக்குக் காயம். அவங்களை யாரோ தூக்கிக்கொண்டு போனார்கள். அப்புறம் வரவே இல்லை. அவர்கள் எங்காவது மருத்துவமனையில் இருக்கிறார்களா என்று தேடிப் பார்க்கவும் விட மறுக்கிறார்கள். நீங்களாவது கண்டுபிடித்துக் கொடுங்கள்'' என்று கதறுகிறார்கள் மூன்று பேரும்.

ரட்சணம் ராசையா கதை இன்னும் சோகமானது. ''தலைக்கு மேலே குண்டு விழுந்து ஓடி வந்தோம். என் கையில் இருந்த இரண்டு வயது குழந்தைக்குக் காயம் ஆனது. ராணுவ வீரர் ஒருவர் அதை வாங்கிக்கொண்டு என்னைத் துரத்திவிட்டார். என் குழந்தை என்னவானதோ? மருத்துவமனையில் போய்ப் பார்க்க அனுமதி கேட்கிறேன். தரவில்லை'' என்கிறார் ராசையா. சொந்தங்களைப் பார்க்க யாராவது தைரியமாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு பகுதியில் இருந்து வந்தால், அவர்களை மட்டும் வேலிக்கு வெளியே நின்று பார்க்க அனுமதிக்கிறது ராணுவம். மற்றபடி, தொண்டு நிறுவனங்களைக்கூடத் துண்டித்துவிட்டார்கள். இது உலகக் கொடுமை.

உச்சந்தலையில் குண்டு விழும்போதும், நெஞ்சுக்கு நேராக அலுமினிய ரவை பாயும்போதும் செஞ்சிலுவைச் சங்கத்துத் தொண்டர்கள் மட்டும் மறுக்கப்படாமல் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள். எல்லாப் போர்களிலும் இந்த நியாயம் மட்டும் நிச்சயம் கடைப்பிடிக்கப்படும். பாசிஸ்ட், நாசிஸ்ட்டுகள்கூட இதற்குத் தடை போட்டதில்லை. ஆனால், சிங்களிஸ்ட் அதனினும் கொடூரமானது. தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மொத்தத்தையும் நாட்டுக்கு வெளியே நிறுத்திவிட்டது.

கிளிநொச்சி, கொடிக்காமம், தென் மராட்சி ஆகிய மூன்று இடங்களில் மட்டும் சுமார் 25 முகாம்கள் இருக்கின்றன. இதில் அதிகாரபூர்வமாக இலங்கை அரசாங்கம் எடுத்துள்ள கணக்கெடுப்பின்படி 2 லட்சத்து 56 ஆயிரத்து 842 பேர் இருக்கிறார்கள். இதில் பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் கணக்கை வெளியிட மறுத்துள்ளார்கள். ''ஐந்து பேர் தங்குவது மாதிரி உள்ள டென்ட் கூடாரத்தில் 30 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு முகாம்களில் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தினமும் மாலை நான்கு மணிக்கு ஒருவேளை மட்டும்தான் சாப்பாடு வழங்கப்படுகிறது. தண்ணீர் அங்குள்ள தொட்டியில் நிரப்பிவைக்கப்படும். காலியாகி விட்டால், மீண்டும் மறுநாள்தான் தண்ணீர் கிடைக்கும்.

முதியோர், சிறுவர் வாழ்க்கை இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது. தினமும் 10 பேராவது பசியால் இறக்கிறார்கள் என்று நேரில் பார்த்துச் செய்திகள் வெளியிட்ட 'சேனல் 4' என்கிற பிரிட்டன் டி.வி. நிருபர்கள் நான்கு பேர் மறுநாளே வெளிநாட்டுக்கு அனுப்பப் பட்டுவிட்டார்கள் கட்டாயமாக.


இந்த முகாமில் உள்ளவர்களில் பத்தில் ஒரு பங்கினர் ஊனமானவர்கள். கால், கை இழந்து உட்கார்ந்திருக்கிறார்கள். பிரன்ஸ் என்ற சர்வ தேசக் கருணை இல்லம், மட்டக்களப்பில் இருக்கிறது. இவர்கள், இங்குள்ள மக்களுக்குச் செயற்கைக் கால்கள், கைகள் செய்து வழங்குவதற்காக சிறு தொழிற்சாலையை ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் இம்முகாம்களுக்குள் வந்து செயல்பட முறையான ஒத்துழைப்பு தரப்படவில்லை. ''செயற்கைக் கால், கை பொருத்துவது மிகுந்த சிரமமான விஷயம். அளவெடுப்பது, அதைப் பொருத் திப் பார்ப்பது, சரியாக இருக்கிறதா என்று கண்காணிப்பது, வேறு பிரச்னை வராமல் கவனிப்பது என்று பல அடுக்குகளைக்கொண்ட மருத்துவம் இது. நான் போய்ப் பார்த்தபோது பலரும் உடல் ஊனமானவர்களாகத் தெரிந்தார்கள். செயற்கைக் கால்கள், சக்கர நாற்காலிகள் இல்லாமல் பலரால் வாழ முடியாது. ஓர் ஆண் வந்தார். அவருக்கு ஒரு கால் இல்லை. தன் மனைவியைக் கொண்டுவந்தார். அவருக்கு இரண்டு கால்களும் இல்லை. அவர்களது எட்டு மாதக் குழந்தைக்குத் தலையில் குண்டுக் காயம் இருந்தது. இதுதான் அங்கு வாழும் மக்களின் நிலை. யுத்த நாடுகளை கடந்த 20 ஆண்டுகளாக நான் பார்த்து வருகிறேன். அதில் இந்த மே மாதம்தான் மிக மோசமானது'' என்கிறார் இந்த நிறு வனத்தின் இணைப்பாளர் சரீஷ் மிஸ்ரா.

வவுனியாவில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ள செட்டிக்குளம் பகுதியில் 1,600 ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட்ட இடத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கு ராமநாதன் நகர், கதிர்காமர் நகர், அருணாசலம் நகர் என்று பெயர். ஜோன் 1, 2, 3 என்று சொல்கிறார்கள். இப்படி முகாமில் அடைக்கப்பட்டவர் களில் புலி இளைஞர்கள் என்று சந்தேகப்படுபவர்களை மட்டும் பிரித்து, நெல்லுகுளத்தில் அடைத்துவைத்து இருக்கிறார்களாம். பெண் புலிகள் கண்டி அம்பே புத்ச என்ற இடத்தில் தனியே அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். சிறுவர்கள், கிழக்கு மாகாணத்துக்குக் கடத்தப்பட்டுள்ளதாக 'சிறார் போராளி கள் ஒழிப்பு முன்னணி' என்ற அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள், இளம் பெண்கள், சிறுவர்கள் என இதுவரை 13 ஆயிரம் பேரைக் காணவில்லை என்கிறது ஒரு புள்ளிவிவரம்.

வவுனியா ஏற்கெனவே வெப்பப் பிரதேசம். காடுகளை அழித்த இடத்தில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டு இருப்பதால், வெப்பம் இன்னும் அதிகமாக இருக்கிறது. பலருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளதாம். மேலும் பலருக்கு சின்னமுத்து எனப்படும் அம்மைக் கொப்புளங்கள் வந்திருக்கின்றன. இவர்களைத் தனியாகப் பிரித்து பூவரசங்குளம் என்ற இடத்தில் வைத்திருக் கிறார்கள். இவர்கள் அங்கும் சாதாரண கொட்டடிகளில்தான் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.

மொத்தத் தமிழனும் டென்ட்டுகளில் கிடக்க, அவன் வாழ்ந்த பூநகரி, கிளிநொச்சி, புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, வவுனியா, மாங்குளம் பகுதி வீடுகளில் மனித நடமாட்டங்கள் இல்லை. ராணுவம் மட்டுமே எப்போதாவது ரோந்து போகிறது. வீடுகள், கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டு, விவசாய நிலங்கள் சிதைக்கப்பட்டு, கோயில்கள் இடிக்கப்பட்டு, மொத்த நிலப்பரப்பும் நாசமாக்கப்பட்டுவிட்டது. ''இவர்களை எப்போது அவர்களது வீட்டுக்குக் கொண்டுபோய்க் குடியேற்றப்போகிறீர்கள்?'' என்று சீரியஸாகக் கேட்கிறார் ஐ.நா-வின் பான் கீ மூன். ''180 நாட்களுக்குள் இவர்கள் அவரவர் வீட்டுக்குப் போய்விடுவார்கள்'' எனச் சிரிக்காமல் சொல்கிறார் ராஜபக்ஷே.

பதற்றம் இல்லாமல் கொலைகள் செய்யவும், கூச்சம் இல்லாமல் பொய்கள் சொல்லவும் ராஜபக்ஷேவுக்குச் சொல்லித்தர வேண்டுமா!

நன்றி:விகடன்

நன்றி
-tamilskynews

0 comments: