Headline

கருணாநிதி காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிறவன் அல்ல:வைகோ
இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்படுகிறவர்கள் மீது தேசியபாதுகாப்பு சட்டம் பாயும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


தூத்துக்குடி வந்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு எதிராக கறுப்புக்கொடி காட்ட முயன்றதால் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கைதாகி ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.


இந்நிலையில் இன்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அவ்வறிக்கையில், இரண்டாம் உலகப் போரின் போது, யூத இனத்தையே கூண்டோடு அழிக்கத் திட்டமிட்டு, படு கொலைகள் நடத்தியது போல், இலங்கையில் சிங்கள இனவாத அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழ் இனத்தையே கருவறுக்க முனைத்து, ராணுவத்தின் மூலம் தமிழர்களைக் கொன்று குவிக்கிறார்.


இந்த தமிழர் இன அழிப்பு ராணுவத் தாக்குதலுக்கு முழுக்க, முழுக்க ஆயுத உதவி செய்தது இந்திய அரசுதான்.


1998-ம் ஆண்டில் அன்றையப் பிரதமர் வாஜ்பாய், டெல்லியில் தான் கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், இலங்கையில் தமிழினக்கொலை நடத்தும் சிங்கள அரசுக்கு இந்தியா எவ்விதமான உதவியும் செய்யாது என்றும், ஆயுதங் களைக் கொடுக்காது என்றும், ஆயுதங்களை இலங்கைக்கு விற்பனை செய்வதில்லை என்றும் ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவை அறிவித்தார். 2004-ம் ஆண்டு வரை இந்திய அரசு அதைக் கடைப் பிடித்தது.


சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, மத்தியில் மன்மோகன் சிங்கை பிரதமராகக் கொண்டு அரசு அமைத்த பின், வாஜ்பாய் அரசு எடுத்த முடிவை காற்றில் பறக்கவிட்டு இலங்கை அரசோடு, இந்திய - இலங்கை கூட்டு ராணுவ ஒப்பந்தம் செய்ய முடிவு எடுத்தது.கடந்த 2008 செப்டம்பர் 8-ம் தேதி இரவு, விடுதலைப்புலிகளின் வான்படை விமானத்தாக்குதல் சிங்கள ராணுவ முகாம் மீது நடத்தப் பட்டபோது, இந்திய ராடார்களை இயக்கிய இந்தியர்களான ஏ.கே.தாகூர், சிந்தாமணி ரவூட் எனும் இரண்டு பேர் படுகாயமுற்ற செய்தி வந்தவுடன், இந்தியப் பிரதமருக்கு இந்தியாவின் துரோகத்தைக் கண்டித்து, மறுநாள் செப்டம்பர் 9-ம் நாள் கடிதம் எழுதினேன்.


அதற்கு 2008 அக்டோபர்2-ம் தேதி பிரதமர் மன்மோகன்சிங் எனக்கு எழுதிய பதில் கடிதத்தில், இலங்கையின் ஒருமைப் பாட்டைப் பாதுகாக்க இந்தியா ராணுவ உதவி செய் துள்ளது என்று ஒப்புக் கொண்டு, கடிதம் எழுதியுள்ளார்.

இதற்கிடையில் இந்திய - இலங்கை கடற்படை தகவல் பரிமாற்ற ஒப்பந்தம் 2007-ம் ஆண்டிலேயே செய்யப்பட்டது. இந்தியக் கடற்படை இலங்கையில் நடைபெறும் போரில் விடுதலைப் புலிகளின் படகுகளையும் கப்பல் களையும் மூழ்கடிப்பதில் நேரடியாகவே ஈடுபட்டது.


தமிழ்மக்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படு வதைப் பற்றித் துளியும் கவலைப்படாமல் தமிழ் இனத்தையே அங்கே கருவறுத்துவிட்டு, மிஞ்சுகிற தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் தள்ளத் திட்டமிட்டவாறு புலிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதுதான் இந்திய அரசின் திட்டம் ஆகும்.


அதனால்தான் தமிழ்நாடு சட்டமன்றம் போர் நிறுத்தம் வேண்டும் என ஒரு மனதாக நிறைவேற்றிய தீர்மானத்தைக் காலில் போட்டு மிதித்துவிட்டு இன்று கருணாநிதியால் தூயவர் என்று புகழப்படும் பிரணாப் முகர்ஜி, சென்னையில் முதலமைச்சரின் வீட்டு வாசலில் நின்று, போர் நிறுத்தம் கேட்பது எங்கள் வேலை அல்ல என்று சொன்னார்.


கடந்த நான்கு மாதத்துக்கு முன்பே விடுதலைப்புலிகள் போர் நிறுத்தத்துக்குத் தாங்கள் தயார் என்று அறிவித்ததை சிங்கள அரசு ஏற்கவே இல்லை.


உண்மை இவ்வாறு இருக்க, பிரணாப் முகர்ஜி தமிழக மக்களை ஏமாற்றுவதற்காக, தூத்துக்குடி வந்து போர் நிறுத்தம் பற்றி மோசடியான வார்த்தைகளை உதிர்த்து விட்டுப் போனார். கருணாநிதி அதற்குப் பாராட்டுப்பத்திரம் வாசித்துவிட்டு, என் மீது புழுதிவாரித் தூற்றியுள்ளார்.


நான் கைது செய்யப்பட்ட மறுநாள் மார்ச் 1-ம் தேதி இலங்கை வெளிவிவகாரச் செயலாளர் பலித கோகனா, போர் நிறுத்தம் செய்யுமாறு எங்களை இந்த நிமிடம் வரை இந்திய அரசு கேட்கவில்லை என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார்.


பிரணாப் முகர்ஜி தமிழக மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் நயவஞ்சகமான அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளார். பாதுகாப்பு என்றும் சட்டம் என்றும் முதலமைச்சர் காட்டும் பூச்சாண்டிக்கெல்லாம் அஞ்சுகிறவன் அல்ல இந்த வைகோ’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி
நக்கீரன்

0 comments: