Headline

திரையுலகில் அரசியல் வேண்டாம்!-ரஜினி



பெங்களூர்: தமிழர்- கன்னடர் என திரையுலகில் அரசியலைக் கலந்து விடாதீர்கள். நாம் அனைவரும் சகோதரர்களாக இருப்போம் என்று ரஜினிகாந்த் கூறினார்.

கன்னடத் திரையுலகின் 75 வது ஆண்டு விழாவையொட்டி, அம்ருத மகோத்ஸவம் எனும் பெயரில் 3 நாள் பிரம்மாண்ட திருவிழா நடைபெற்று வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை முதல் நாள் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றுப் பேசினார். அதில் ரஜினி பங்கேற்கவில்லை. ஹைதராபாத்தில் நடந்த தனது நண்பர் மோகன்பாபு மகன் திருமணத்துக்குச் சென்றுவிட்டு, நேற்று இரண்டாவது நாள் விழாவில் பங்கேற்றார்.

அப்போது ரஜினி பேசியதாவது:

நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எல்லோருமே அண்ணன் தம்பிங்க மாதிரிதான். இந்த அண்ணன் தம்பிங்க அடிச்சிக்கிறதுனால எந்த நன்மையும் இல்லே.

பாருங்க... அரசியல் என்பது மிகப்பெரிய சமுத்திரம் மாதிரி. நம்ம சினிமா ஒரு சின்ன குளம் மாதிரி. ஒரு சமுத்திரத்தாலேயே தன்னோட பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியாத போது, அதை இந்த சின்னக் குளம் தீர்த்து வெச்சிட முடியுமா?

அதனால அரசியலை விட்டுடுங்க... சினிமாக்காரங்க சினிமாக்காரங்களா ஒத்துமையா இருப்போம். இதை சாக்கா வெச்சிக்கிட்டு ஜனங்க பாவம் சண்டை போட்டுக்கக் கூடாது. அவங்க கஷ்டப்படக் கூடாது. அதுதான் முக்கியம்.

கன்னட திரையுலகுக்கு நான் சொல்லிக்க விரும்பறதெல்லாம், நல்ல சினிமா, நாவல்களை அடிப்படையாகக் கொண்ட சினிமா எடுங்க. தா ரா சு, இந்திரா போன்ற இலக்கியவாதிகளின் படைப்புகளை மையமா வச்சி எவ்வளவோ நல்ல படங்கள் தர முடியும். முயற்சி பண்ணுங்க.

குவெம்பு, ஷிவ்ராம் காரத் மற்று பெண்ட்ரே போன்ற சிறந்த இலக்கியவாதிகளின் படைப்புகளை நல்ல படங்கள் எடுக்க பயன்படுத்திக்குங்க. இத்தனை வருஷமா இதையெல்லாம் ஏன் நீங்க செய்யலேன்னு புரியல. அதுல எனக்கு கொஞ்சம் வருத்தம்தான்.

ஒரு ரசிகனா, கலைஞனா எல்லா மொழிகள்லேயும் உள்ள சிறந்த இலக்கிய படைப்புகளை திரைப்படங்களாக எடுக்கப்படணும் என்று விரும்புகிறேன்.

எனக்கும் ஒரு கன்னடப் படத்துல நடிக்கணும்னு ஆசையிருக்கு. அப்படி நடிச்சா, தளவாய் முத்தன்னா பாத்திரத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன். எனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும் அந்த கேரக்டர். எனக்கு ரொம்ப பிடிச்ச பாத்திரமும் கூட. ஆனால் இந்தப் படத்தை எப்போ பண்ணுவேன், எந்த நேரத்தில் அதற்கு கடவுள் உத்தரவு வரும்னு தெரியல... பார்க்கலாம் என்றார் ரஜினி.

விழா நிகழ்ச்சிகள் அனைத்தும் முடியும் வரை கிட்டத்தட்ட 3 மணி நேரம் அரங்கிலேயே இருந்தார் ரஜினி. விழாவில் நடிகை லட்சுமி, நடிகர் பிரபு தேவா உள்ளிட்ட கலைஞர்களை ரஜினி கெளரவித்தார்.

நன்றி
- தட்ஸ்தமிழ்

0 comments: