Headline

புலிகளின் ஆயுததொழிற்சாலை: 10அடி உயர ராட்சத ராக்கெட் குண்டுகள்: மிரளும் ராணுவம்!




முல்லைத்தீவில், புதுக்குடியிருப்பு பகுதியில் இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே உச்ச கட்ட போர் நடைபெற்று வருகிறது.



புதுக்குடியிருப்பு பகுதியில் மேலும் முன்னேறிச்சென்று தாக்குதல் நடத்தி வருவதாக ராணுவம் அறிவித்துள்ளது.



கடந்த 3 நாட்களில் உடையார்கட்டு, சுந்தரபுரம், விஷ்வமடு பகுதியில் இலங்கை ராணுவத்தினர் நடத்திய தேடுதல் வேட்டையில் விடுதலைப்புலிகள் தயாரித்த ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை கைப்பற்றியதாகவும், அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் ஆயுத தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



கைப்பற்றப்பட்ட பல்வேறு வகையான வெடிகுண்டுகளில், 10 அடி உயரம் உள்ள ராட்சத ராக்கெட் குண்டுகள் இரண்டு பிரம்மிக்க வைப்பதாக உள்ளன.



இந்த குண்டுகளை ஏவினால் ஏறத்தாழ 300 மீட்டர் தூரம் வரை உயரே எழும்பிச்செல்லும் என்று ராணுவ வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.



அத்துடன், ஒவ்வொரு குண்டுக்குள்ளும் 200 கிலோ `சி-4' வெடிமருந்துகளை திணிக்க முடியும் என்றும், ஏறத்தாழ 1 சதுர கிலோமீட்டர் பரப்பளவு இடத்தை தீப்பற்றி எரிய வைத்து அழிக்கும் சக்தி கொண்டவை என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.



மேலும் குட்டி போர் விமானம் ஒன்றும், பீரங்கியில் பொருத்தும் 122 மி.மீ. ரக துப்பாக்கியும் தயாரித்து முடிவடையும் நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளன.



மேலும் ஆயுத தொழிற்சாலையில் பீரங்கி குண்டுகள், டாங்கி எதிர்ப்பு குண்டுகள், பல்வேறு வகையான கண்ணிவெடிகள், வெடிபொருள்
கருவிகள், ஆயுதங்களை தயாரிப்பதற்கான லேத் இயந்திரங்கள், மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

நன்றி
நக்கீரன்

0 comments: