Headline

இலங்கையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜெயலலிதா உண்ணாவிரதம்



சென்னை: இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தமிழக அரசைக் கண்டித்தும் வருகிற 10ம் தேதி சென்னையில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இலங்கைத் தமிழர் விவகாரம் தொடர்பாக கிட்டத்தட்ட அனைத்துக் கட்சிகளும் பல்வேரு விதங்களில் போராடி வருகின்றன.

திமுக மற்றும் பாமக தலைமையிலான பல்வேறு கட்சிகள் தனித் தனியாக அமைப்புகளைத் தொடங்கி பல கட்டப் போராட்டங்களை நடத்தியுள்ளன.

ஆனால் அதிமுக பெரிய அளவில் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாக போராட்டம் எதையும் நடத்தாமல் அமைதியாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் திடீரென அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்காத மத்திய அரசு மற்றும் அதற்கு உறுதுணையாக இருந்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் ஏற்பட நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும், இலங்கைத் தமிழர்களுக்கு நமது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகின்ற வகையிலும், வருகிற 10-ந்தேதி அ.தி.மு.க. சென்னை மாநகரிலும், கழக அமைப்பு ரீதி யாக செயல்பட்டுக் கொண் டிருக்கும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் உண்ணாவிரத அறப்போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிதி திரட்ட உண்டியல்:

சென்னையில் நடைபெறும் உண்ணாவிதப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். மற்ற மாவட்டத் தலை நகரங்களில் நடைபெற உள்ள உண்ணாவிரத அறப் போராட்டத்தில் தலைமைக்கழக நிர்வாகிகள் பங்கேற்பார்கள். ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும்.

அதில் முதலில் எனது சார்பில் இலங்கைத் தமிழர்களுக்கு நிதியை அளித்து தொடங்கி வைக்க உள்ளேன். அந்தந்த மாவட்டங்களில் வைக்கப்படும் உண்டியலில் செலுத்தப்படும் நிதிகளை சம்பந்தப்பட்ட மாவட்டக் கழகச் செயலாளர்கள் பின்னர் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நன்றி
- தட்ஸ்தமிழ்

0 comments: