Headline

இயக்குநர் கண்டித்ததால் நடிகைகள் அதிசயா, சரண்யா போர்க்கொடி!



பேராண்மை படத்தில் நடிக்கும் நடிகைகள் இருவர் அந்தப் படத்தின் இயக்குநருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர். தங்களை சுகாதாரக் குறைவான இடங்களில் தங்க வைப்பதாகவும், மரியாதைக் குறைவாக நடத்துவதாகவும் நடிகர் சங்கத்தில் புகார் செய்துள்ளனர்.

வட்டாரம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிசயா. காலைப்பனி படத்தில் நாயகியாக நடித்தார். பிறகு வேறு படங்களில் வாய்ப்பு இல்லாமல் இருந்த அவருக்கு பேராண்மை படத்தில் வாய்ப்புக் கிடைத்தது.

அந்தப் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்து வருகிறார் அதிசயா (இதில் தனது சொந்தப் பெயரான வசுந்தரா என்ற பெயரில் நடிக்கிறார்). இயற்கை , ஈ போன்ற பிரபல படங்களைத் தந்த எஸ்பி ஜனநாதன் இப்படத்தை இயக்குகிறார்.

சமீபத்தில் பேராண்மை படப்பிடிப்பு தலக்கோணத்தில் நடந்தது. காட்டுப்பகுதி என்பதால் இரவில் அங்கு கொசுக்கடி அதிகம். நடிகர் நடிகைகளும் தொழில்நுட்ப கலைஞர்களும் பெரும் அவதிப்பட்டனர். அதிசயாவுக்கு ஒரு கட்டத்தில் காய்ச்சல் வந்துவிட்டதாம். திருப்பதி மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டிய அளவுக்கு போய்விட்டதாம் நிலைமை.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் கட்ட படப்பிடிப்பையும் தலக்கோணத்திலேயே நடத்த ஜனநாதன் முடிவு செய்தார். படப்பிடிப்பு குழுவினர் அங்கு சென்று முகாமிட்டனர்.

ஆனால் கொசுக்கடிக்கு பயந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள திருப்பதியில் தங்கினாராம் அதிசயா.

ஜெயம்ரவி உள்ளிட்ட இதர நடிகர் நடிகைகளும் திருப்பதியிலேயே தங்கினர். மறுநாள் காலை காரில் புறப்பட்டு தலக்கோணம் சென்று படப்பிடிப்பில் பங்கேற்றனர். படப்பிடிப்பு முடிந்து இரவு திருப்பதியில் தங்குவதற்காக புறப்பட தயாரானார் அதிசயா. இயக்குனர் ஜனநாதன் அதற்கு சம்மதிக்கவில்லை. தலக்கோணத்தில்தான் இரவு தங்க வேண்டும் என்று உத்தரவிட்டாராம். அதிசயாவின் மேக்கப் லக்கேஜூம் அவரிடம் தரப்படவில்லையாம்.

ஒரு கட்டத்தில் ஜனநாதனுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. மற்ற நடிகர்கள் திருப்பதியில் தங்கி காலையில் வருவதுபோல் நானும் வருகிறேன் என்று அதிசயா வாதிட்டாராம். அதை ஜனநாதன் ஏற்காததால் படப்பிடிப்பை புறக்கணித்து திருப்பதி சென்றார். இந்த நிலையில் கொசுக்கடியால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுவிட்டதாகக் கூறி மருத்துவமனையில் தங்கி குளுகோஸ் ஏற்றிக் கொண்டாராம் அதிசயா.

பின்னர் திருப்பதியிலிருந்து போனில் நடிகர் சங்கத்துக்கு தொடர்பு கொண்டார். இயக்குநர் ஜனநாதன் தன்னை தரக் குறைவாகப் பேசி அடிக்கப் பாய்ந்ததாக புகார் செய்தார். நேரில் வந்து எழுத்து பூர்வமாக தரும்படி நடிகர் சங்கத்தில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் சென்னை புறப்பட்டு வந்துவிட்டார் அதிசயா. தற்போது அவரிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இப்படத்தில் ஐந்து நாயகிகள் நடிக்கின்றனர்.

காதல் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்த சரண்யாவும் இந்தப் படத்தில் ஒரு நாயகியாக நடிக்கிறார். சரண்யாவின் தாயாரும் படப்பிடிப்பில் தகராறு செய்து பிரச்சனை கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து புகாரை முழுமையாகப் பார்த்த பிறகே இந்த விஷயத்தில் என்ன செய்யலாம் என முடிவு செய்யப்படும் என நடிகர் சங்கம் கூறியுள்ளது.

நன்றி
- தட்ஸ்தமிழ்

0 comments: