Headline

தடுப்பு முகாம்கள் ஒரு "தேசிய வெட்கக் கேடு" - மனித உரிமைகள்


முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 300,000 பொதுமக்களை விடுவிக்குமாறு அரசாங்கத்தை பல்வேறு தரப்புகள் வலியுறுத்தி வருகின்ற நிலையில், இலங்கை அரசினால் நடத்தப்பட்டு வருகின்ற இந்த தடுப்பு முகாம்கள், "தேசிய வெட்கக் கேடு" என அமெரிக்காவை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

சர்வதேச சட்டங்களை மீறி, ஒரு வருடத்திற்குள் அதிகமாக தடுப்பு முகாம்களை நிறுவி, மோதல்களால் பாதிக்கப்பட்ட பொது மக்களை அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாக அது தெரிவித்துள்ளது.


அங்குள்ள ஆண்கள் பெண்கள் மற்றும் சிறுவர்கள் அனைவரையும், தமிழீழ விடுதலைப் புலிகளாக அரசாங்கம் கருதுவதாக அதன் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதிக்குள் பொது மக்கள் அனைவரையும் மீள் குடியேற்றுவதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது. இந்த நிலையில் அரசாங்கம் முகாம்களில் உள்ள விடுதலைப் புலி போராளிகளை அடையாளம் கண்டு அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில் அரசாங்கத்தினால் நிவாரணக் கிராமங்கள் என அழைக்கப்படும் இடங்களிலும் பொது மக்களுக்கான நடமாட்ட சுதந்திரம் மீறப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மோதல்களினால் இடப்பெயர்வுகளுக்கு உள்ளாக்கப்பட்ட 300,000 தமிழ் பொது மக்களை சட்ட விரோதமாக தடுத்து வைத்திருக்கும் அரசாங்கத்தின் செயற்பாடு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

முகாம்களில் உள்ள பொது மக்கள் தாம் தங்குவதற்கு வேறு இடங்கள் இன்றி முகாம்களில் வசிப்பதில்லை எனவும், அங்கிருந்து அவர்கள், வெளியேற அரசாங்கம் அனுமதிக்காத நிலையிலேயே முகாம்களில் தங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


அத்துடன் முகாம்களில் அதிகரித்த சன நெரிசல் காரணமாக, முகாம்கள் பொது மக்கள் தங்குவதற்கான வசதியான சூழ்நிலையை கொண்டிருக்கவில்லை எனவும் எதிர்கால பருவ பெயர்ச்சி மழை காரணமாக மிகவும் பாதிக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உறவினர்களுடனும், நண்பர்களுடனும் இணைந்து வாழ விரும்பும் பொது மக்களை, சட்டத்தையும் மனித உரிமைகளையும் மீறி அரசாங்கம் தடுத்து வைத்துள்ளதாகவும் பிரட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளமையையும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் எடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி
-தமிழ்செய்தி
* Net photo

0 comments: