Headline

உணவுப்பற்றாக்குறை நோய்களால் சிறுவர்கள் அவதி



போதிய உணவின்மையால் சிறுவர்கள் ஊட்டச்சத்துகுறைபாடு நோய்களுக்கு உள்ளாவது, முன்பு கணிப்பிட்டிருந்ததைவிட, மிக அதிகமாகவுள்ளது என மனிதாபிமான அமைப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.



தடுப்பு முகாம்களில் உள்ள தமிழர்களில் 13 விகிதமானோர் 5 வயதுக்கு உட்பட்டோர் என்றும், இதில் 10,000 குழந்தைகளும் சிறுவர்களும் தீவிர போஷாக்கு குறைபாட்டால் அவதிப்படுகிறார்கள் என்றும் கணிப்பிடப்பட்டுள்ளது.




மார்ச் மாதத்தில் கொழும்பில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தால் நடாத்தப்பட்ட கருத்தாய்வின்படி, 6 முகாம்களில், 25.5 விகிதமான சிறுவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதிப்பட்டார்கள், இதில் 5.2 விகிதமானோர் தீவரமான நிலைமையில் இருந்தார்கள், மற்றும் அவர்களுக்கு உடனடியான மருத்துவம் தேவைப்பட்டிருந்தது.

இருப்பினும், இப்போது தடுப்பு முகாம்களின் எண்ணிக்கைகள் கூடியநிலையில், இன்னும் அதிகமான சிறுவர்கள் இந்நிலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
“இது தொடர்பாக நாம் மிக அக்கறையாக உள்ளோம், ஆனால் முகாம்களுக்குள் செல்வதற்கு எமக்கு போதிய அனுமதி இல்லாமையால், இப்பிரச்சினையின் அளவைத் அறிய முடியாமல் உள்ளோம்”, என ஒரு சர்வதேச உதவிப் பணியாளர் தெரிவித்துள்ளார்.



நீண்ட நாட்களுக்கு உணவு மற்றும் நீர் இல்லாமல் யுத்தப் பிரதேசத்தில் இருந்து இறுதியாக வந்த மக்களே கூடுதலாக உணவுப்பற்றாக்குறை நோய்களால் அல்லல்படுகிறார்கள் என சிறிலங்காவில் உள்ள மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ.நா. அலுவலகம் (O.C.H.A) அறிவித்துள்ளது.

உணவுக்காக 10 மணித்தியாலங்கள் வரை வரிசையில் காத்திருக்க இயலாமையால் வயோதிபர்கள், காயமடைந்தோர்கள், நோயாளிகள் மற்றும் சிறுவர்களே உணவின்மையால் கூடுதலாக அவதிப்படுகிறார்கள், என ஒக்ஸ்வாமினது துணை இணைப்பாளர், டேவிட் வைற், கொழும்பில் தெரிவித்துள்ளார்.



உதவிப் பணி அமைப்புகள் முகாம்களுக்குச் செல்ல உள்ள பல தடைகள் காரணமாகவே, சிறுவர்கள் எதிர்நோக்கும் தீவிர உணவுப்பற்றாக்குறைக்கு எம்மால் உதவி செய்ய முடியாமல் உள்ளது என, யுனிசெவ் நிறுவனத்தின் சிறிலங்கா பேச்சாளர், ஜேம்ஸ் எல்டர், தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமில்லாமல் முக்கியமாக சிறுவர்களைப் பாதித்துள்ள, சுகாதாரம், சத்துணவு, பாதுகாப்பு மற்றும் கல்வி தொடர்பான எதுவித தேவைகளையும் தம்மால் செய்ய முடியாமல் உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


நன்றி
-பதிவு

0 comments: