Headline

இறுதி யுத்த நாளில் நடந்தது என்ன ?


வன்னியில் இறுதி யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை மிகுந்த பாதுகாப்புடன் அவரது தளபதிகள் வெளியேற்றிவிட்டதாகவும், அவருடன் முக்கியமான தலைவர்கள் சென்றுள்ளதாகவும் அருட்தந்தை ஜெகத் கஸ்பர்ராஜ் நக்கீரன் இதழில் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இறுதிநாளில் யுத்தத்தை நிறுத்த கனிமொழி எம்பி, சுப வீரபாண்டியன் ஆகியோருடன் தானும் முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக நடேசன் மற்றும் புலித்தேவன் சமாதானம் பேசச் சென்றது இந்திய அரசில் முக்கியப் பங்கு வகிக்கும் ஒருவர் அளித்த உறுதிமொழியின்பேரில்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெகத் கஸ்பர்ராஜ் எழுதியுள்ள கட்டுரையின் ஒரு பகுதி:

ராஜபக்சேக்களுக்கு லாவணி பாடும் ஆனந்தசங்கரிகளே… இருக்கிறவரை ஏதேனும் நாற்காலியில் இருந்துவிட்டுப் போங்கள். தங்க முலாம் பூசிய கக்கூஸ் வாளிகளுக்கும் கருணை செய்து ஓய்வூதியம் தர வேலுப்பிள்ளை பிரபாகரன் விரைவில் வருவான். உங்களுக்காக வரவில்லையென்றாலும் முல்லைத்தீவு முற்றுகையின் கடைசி நாள் நடந்த மன்னிக்க முடியா துரோகத்திற்கு நீதி செய்யவேனும் அவன் வருவான்.

கடைசி நாளில் -அதாவது கடந்த சனிக்கிழமை நடந்தது இதுதான்.

வேலுப்பிள்ளை பிரபாகரனும் எதிர்காலத்தில் போராட்டத்தையும் இயக்கத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதற்கு முக்கியமானவர்களான சில தளபதியர்களும் பாதுகாப்பாக அகன்றபின் களத்தின் இறுக்கம் தணிகிறது.

இறுதி யுத்தம்… என்ன நடந்தது?

கை ஒடிந்து, கால் முறிந்து, உடலின் சில பகுதிகள் சிதைந்து ரத்தம் வழிந்தே பாதி செத்துப் போன சுமார் 12,000 அப்பாவி மக்களையும், அவ்வாறே காயமுற்ற சுமார் 3,000 போராளிகளையும் எப்படியேனும் அப்புறப்படுத்திக் காப்பாற்றும் முடிவினை விடுதலைப்புலிகள் எடுக்கிறார்கள். கடற்புலித் தளபதி சூசை மதுரையில் ஒருவரோடு தொடர்பு கொண்டு காயமுற்ற மக்களையேனும் பாதுகாப்பாய் வெளியேற்ற 48 மணி நேர சண்டை நிறுத்தம் வேண்டுகிறார்.

மதுரை தமிழரோ உணர்வாளர் சுப.வீ. என்ற சுப.வீரபாண்டியன் அவர்களை மன்றாட சுப.வீ. அவர்கள் கனிமொழி அவர்களின் கருணையை கேட்கிறார். கனிமொழி அவர்கள் காங்கிரஸ் கட்சியின் முக்கியமான ஒருவரோடு பேச ‘அதிகாரப்பூர்வமற்ற’, ஆனால் யதார்த்தமான முடிவொன்று தரப்பட்டது.

“விடுதலைப் புலிகளின் அனைத்துலக பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாபன் கொழும்பிலுள்ள இந்திய தூதுவருக்கு ஆயுதங்களை ஒப்படைக்க தயாராக உள்ளோம் என்ற முடிவினை எழுத்துப்பூர்வமாய் தொலைநகல் (பேக்ஸ்) வழி உடனே தெரிவிக்க வேண்டும். மற்றவையெல்லாம் இந்தியா பார்த்துக் கொள்ளும்”.

இரவு 10 மணி ஆயிற்று.

இந்தக் கட்டத்தில் நானும் இணைந்தேன். லண்டனிலுள்ள எனது நண்பர்கள் மூலம் செல்வராஜா பத்மநாபன் அவர்களுக்கு தகவல் சொல்லப்பட அவரும் மின்னல் வேகத்தில் இயங்கினார்.

“இந்தியாவிடமே நாங்கள் ஆயுதங்களை ஒப்படைக்கத் தயாராக இருக்கிறோம். அது சாத்தியமில்லையென்றால் ஐ.நா. ஏற்பாட்டில் ஒப்படைக்கிறோம்” என்ற முடிவை விடுதலைப் புலிகள் இரவு 11.50-க்குத் தெரிவித்தார்கள். கனிமொழி தயக்கத்துடன் காங்கிரஸ்பெரியவரை தொடர்பு கொள்ள அவரும் விழித்தே இருந்தார். “கால அவகாசமில்லை. இந்தியாவிடம் சரணடைவதற்கான சாத்தியப்பாடுகள் இப்போது இல்லை. இலங்கை ராணுவத்திடமே சரணடைவதுதான் இப்போதைய நெருக்கடி நிலையில் ஆகக் கூடியது” என்கிறார் அப்பெரியவர்.

மக்களை காக்க வேண்டி இலங்கை ராணுவத்திடமே ஆயுதங்களை ஒப்படைக்கும் முடிவினை சனி நள்ளிரவு புலிகள் எடுத்தார்கள். ஞாயிறு காலை கொழும்பு இந்திய தூதரகத்தின் உதவியுடன் இலங்கைத் தமிழர் பாராளுமன்ற உறுப்பினர் கஜன் பொன்னம்பலம், ராஜபக்சேவோடு பேச்சுவார்த்தைகள் நடத்த முடிவொன்று ஏற்படுகிறது.

“முல்லைத்தீவு களத்தில் நிற்கும் புலிகளின் தளபதிகள் வெள்ளைக்கொடி பிடித்துக் கொண்டு இலங்கை தளபதிகளிடம் வரட்டும். ஆயுதங் ஒப்படைப்பது, காயமுற்றோரை அப்புறப்படுத்துவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகளை அவர்களே கலந்து பேசி முடிவு செய்யட்டும்’ என்பதாக அந்த ஏற்பாடு.

இம்முடிவினை ராஜபக்சே அலுவலகம் ராணுவத் தலைமைக்கும், முல்லைத் தீவு கட்டளைத் தளபதிகளுக்கும் அறிவிக்கிறது. இந்த ஏற்பாடுகள் முடியவே ஞாயிறு இரவாகி விடுகிறது.

ராஜபக்சேவுடன் நடந்த விவாதங்களையும் முடிவுகளையும் கஜன் என்ற கஜேந்திரன் பொன்னம்பலம், செல்வராஜா பத்மநாபனுக்குத் தெரிவிக்க முல்லைத்தீவு களத்தில் நின்ற விடுதலைப் புலிகளின் அரசியற் பிரிவுப் பொறுப்பாளர் நடேசனுடன் இவற்றை திங்கள் அதிகாலை 2.30 மணிக்கு விவாதிக்கிறார் பத்மநாபன்.

வெள்ளைக் கொடிகளுடன் வந்தவர்களை சுட்டுத்தள்ளிய இன வெறியர்கள்…

யுத்தம் 500 மீட்டர் அருகில் வந்த போதும் கூட உலகோடு உரையாடும் செயற்கைக்கோள் வசதிகளை விடுதலைப்புலிகள் கொண்டிருந்தார்கள் என்பது ஒரு ராணுவ அரசியல் இயக்கமாக எத்துணை ஆழமாக வளர்ந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றாகத் தெரிந்தது.

விடிந்ததும் நடேசன், சிறப்புத் தளபதி ரமேஷ் -இவர் முன்பு கருணாவின் துணை தளபதியாக இருந்தவர், புலிகளின் சமாதானச் செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் மூவரும் வெள்ளைக் கொடி ஏந்தி சிங்களத் தளபதியர்களை சந்திக்கச் செல்வதாய் ஏற்பாடு.

வெடிபொருள் புகை கவிந்த முல்லைத் தீவு பரப்பு விடிந்தது. வெள்ளைக் கொடி ஏந்தி மூவரும் நடந்தார்கள். சிங்களத் தளபதியர்களின் கூடாரம் அருகே வந்தார்கள். ஏன், என்னவென்ற பேச்சின்றி சுட்டுக் கொல்லப்பட்டார்கள். பின்னர்தான் தெரிய வந்தது அவர்களைச் சுட்டுக் கொல்லும் உத்தரவை ராஜபக்சேவின் சகோதரனும் ராணுவ அமைச்சருமான கோத்தபய்யா ராஜபக்சே பிறப்பித்திருந்த சதி.

சர்வதேச போர்க் குற்றம்…

வெள்ளைக் கொடியேந்தி சரணடையவோ, பேச்சுவார்த்தை நடத்தவோ வருகிறவர்களுக்குத் தீங்கிழைப்பது யுத்தக் குற்றம். அனைத்துலக சட்டதிட்டங்கள் இதனை கடுமையாக வலியுறுத்துகின்றன. ஆனால் சிங்கள இனவெறி பிடித்தாடும் கோத்தபய்யாவை பொறுத்தவரை தமிழருக்காகப் பேச எவருமே உயிரோடு இருக்கக்கூடாது.

நடேசனும், புலித்தேவனும் சரணடைந்து கைது செய்யப்பட்டாலும் அவர்கள் யுத்தக் கைதிகளாகவே நடத்தப்பட வேண்டும். நாளை அனைத்துலக ஏற்பாட்டில் அரசியல் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கும் போது புலிகள் தரப்பிலும் பிரதிநிதிகள் இருக்க வேண்டுமென உலக நாடுகள் நிச்சயம் வலியுறுத்தும். அத்தகு சூழலில் தகுதியோடு தமிழரை பிரதிநிதித்துவப்படுத்த எவருமே இருக்கக்கூடாதென்பதுதான் கோத்தபய்யாவின் கணக்கு. முக்கிய செய்தி என்னவென்றால் இந்தியா சொல்வதையோ, அண்ணன் ராஜபக்சே சொல்வதையோ கேட்பதற்கு கோத்தபய்யா தயாராக இல்லை என்பதுதான்.

புல்டோஸர்கள் ஏற்றி மக்களைக் கொன்ற சிங்களர்கள் ராணுவம்...

கொடுமை அத்தோடு முடியவில்லை காயமுற்று பாதி உயிரோடு முனகிக் கிடந்த பத்தாயிரத்திற்கும் மேலான அப்பாவி மக்களை புல்டோசர்கள், செயின் புளக்-கள் ஏற்றிக் கொன்றுவிட்டு ஆதாரங் கள் ஏதுமின்றி அதிநவீன ரசாயனக் கலவைகள் ஊற்றி எரித்திருக்கிறார்கள். அவ்வாறே காய முற்றிருந்த சுமார் 3,000 போராளிகளையும் கருணை இரக்கமின்றி சுட்டுக் கொன்று வெறி தீர்த்திருக்கிறார்கள். வேறெதற்கும் இல்லையெனினும் கோத்தபய்யாவிற்கு நீதி சொல்லவேனும் வேலுப்பிள்ளை பிரபாகரன் வருவான், நிச்சயமாய் வருவான்.

மரணத்தில் நிழலில் வளர்ந்த அதிசயப் பிறவி பிரபாகரன்

மரணத்தின் நிழலில் வளர்ந்த அதீதப் பிறவி பிரபாகரன் . மாத்தையா அவரது வாகனத்திற்கு அடியிலேயே வெடிகுண்டு பொருத்தினார். ஆனால் வெடிக்கவில்லை. ஏன் வெடிக்கவில்லை என்பதற்கு மனித அறிவு சார்ந்த விளக்கம் எதுவுமில்லை. சாவகச்சேரி நகர் வளைவு திறக்கும் நிகழ்வின் போது அவரோடு மூத்த தளபதிகள் யாவரதும் கதை முடிக்க மாத்தையா ஏற்பாடு செய்திருந்தார்.

விழாவுக்குப் புறப்படும் போது மோசமான வயிற்று நோவு வர விழாவிற்கு அவர் வரவில்லை. வந்திருந்தால் அன்றே அவர் வரலாறு முடிந்திருக்கும். திருநெல்வேலி தாக்குதலின் போது அவரது துப்பாக்கியில் ரவை தீர்கிறது. குனிந்து ரவை நிரப்புகிறார். புறத்தே மின்னல் தெரிகிறது. சக தோழர்களின் பறக்கிற ரவைகள் என நினைக்கிறார். காலையில் பார்த்தால், தான் குனிந்தபோதுதான் நின்ற இடத்திலேயே எதிரியின் ரவைகள் பாய்ந்து வந்திருக்கின்றன. அக்கணம் குனிந்திராவிட்டால் அன்றே அவர் முடிந்திருப்பார்.

“கடவுள் காத்து வருகிறார் எனக் கருதலாமா?” என 2002-ல் அவரிடம் கேட்டேன்.

“இன்னும் நான் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கிறதென இயற்கை நினைக்கிறது போலும்…” என்றார்.

தமிழர்களே, நண்பர்களே, முல்லைத்தீவில் கதை முடியவில்லை. புதிய கதை தொடங்குகிறது. உலகத் தமிழினம் இனி நடக்கப் போவது புதிய தடங்களில்…

நன்றி
-தட்ஸ்தமிழ்

0 comments: