Headline

யாழ்ப்பாணப் பொது நூலகம் - ஒரு வரலாற்றுத் தொகுப்பு


இது ஒரு பழைய பதிவின் மலரும் நினைவு

ஈழத்தமிழர்களின் பெரும் செல்வமாக விளங்கிய யாழ்ப்பாணப் பொது நூலகம் எரியூட்டிச் சிதைக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. 1981ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த அறிவுக்களஞ்சியம் காடையர்களினால் நெருப்பிடப்பட்டு நீறாகிப் போய்விட்டது.

அந்த நெஞ்சைப் பிளக்கும் செய்தியைக் கேட்ட மாத்திரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணமானார் பேரறிஞனும் ஆராய்ச்சியாளனுமாகிய வண. டேவிட் அடிகள்.

அந்த நூலக எரியூட்டலினால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு இலக்கியவாதி "சுஜாதா" 1981-ம் ஆண்டு டிசம்பர் மாத ஆனந்த விகடன் இதழில் "ஒரு இலட்சம் புத்தகங்கள்" என்கிற தலைப்பில் பாரதி நூற்றாண்டு சிறப்புச் சிறுகதை ஒன்றை எழுதியிருந்தார்.

அதே நிகழ்வில் பெரிதும் கவலையுற்ற வெளிநாட்டு ஆங்கிலேய அறிஞர் ஒருவர் யாழ்ப்பாண பொது மக்கள் நூலகம் எரிந்து கருகி நீறாகிக் கிடந்த சாம்பர் மேட்டிலே நின்ற வண்ணம் ஆங்கிலக்கவிதை ஒன்றை எழுதினார். இந்தக் கவிதையை பேராசிரியர் கைலாசபதியிடமிருந்து பெற்றுத் தமிழாக்கம் செய்து "கிருதயுகம்" என்ற ஈழத்து சிற்றிதழ்களிலே கைலாசபதியின் மறைவுக்குப் பின்னர் கவிஞர் சோ.ப. பிரசுரித்திருந்தார்.

இத்தகைய அறிவுலகச் சிறப்புக்கள் வாய்ந்த யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகம் எரியூட்டலின் 20 வது ஆண்டு நிறைவின்போது அதன் வரலாற்றுத் தொகுப்பை எழுதிப் பிரசுரித்திருக்கின்றார் திரு. என்.செல்வராஜா.

இந்த நூல் எரியூட்டலின் 20 வது வருடப் பூர்த்தியை நினைவு கூரும் வண்ணமாக வெளியிட்டு இருக்கின்றார். இது அவருடைய பிரசுராலயமாகிய அயோத்தி நூலக சேவைகள் என்ற நிறுவனத்தின் வெளியீடாக வெளிவந்துள்ளது.


அர்ப்பணிப்பும், வினையாற்றலும் உடைய உண்மையான நூலகர் ஒருவராலேயே இம்மாதிரி வரலாற்றுத் தொகுப்பு நூல் சாத்தியப்படும். மதிப்புக்குரிய என். செல்வராஜா யாழ்ப்பாணத்தின் தலைசிறந்த நூலகமாகிய "ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டியல் நிறுவனத்தின்" நூலகராகச் சேவை செய்தவர்.

நூற் பெறுமதி உணர்ந்தவர். நூற்பயன்பாடு அறிந்தவர். அதுமட்டுமன்றி பழம்பெரும் நூலகரும் அறிஞருமாகிய டாக்டர் வே.இ.பாக்கியநாதன் அவர்களின் நூலக நெறிப்படுத்தலின் ஊடாக பயிற்சியும் பக்குவமும் பெற்றவர். அத்தகைய நூலகவியல் அறிஞர் ஒருவர் தொகுத்து அளித்திருக்கும் வரலாற்றுத் தொகுப்பு ஆவணப் புதையலாக இந்த நூல் விளங்குகின்றது.
127 பக்கங்களைக் கொண்ட இந்த நூலில் யாழ்ப்பாணப் பொது நூலகம் பற்றியும் அதன் அழிவு பற்றியும் பொதுநூலகத்தின் சேவையின் சிறப்பும் பெருமையும் பற்றியும் கட்டுரைகள் காணப்படுகின்றன.

இந்தக் கட்டுரைகளை நூலகர் செல்வராஜா பல்வேறு சஞ்சிகைகளில் இருந்தும் பத்திரிகைகளில் இருந்தும் அன்புடனே தேடித் தொகுத்துள்ளார். இத்தொகுப்பில் 45 கட்டுரைகள் காணப்படுகின்றன. அவற்றிலே 14 ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளன. எச்.ஏ.ஐ.குணத்திலக்கா, நடேசன் சத்தியேந்திரா, பேராசிரியர் நேசையா, வீ.எஸ்.துரைராஜா என்பவர்களின் ஆங்கிலக்கட்டுரைகள் இந்நூலுக்கு அணி செய்கின்றன.


நூலுக்கு ஆசியுரையை மாநகர ஆணையாளர் வே.பொ.பாலசிங்கம் வழங்கியுள்ளார்.
1894-ம் ஆண்டு சிலோன் ஒப்சேவர் பத்திரிகையில் யாழ். பொதுநூலகம் பற்றிய குறிப்பை முதலிலே வைத்திருக்கின்றார் ஆசிரியர்.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகளும், யாழ்ப்பாணத்து அறிஞர்களும் சேர்ந்து இந்த நூலகத்தை அமைக்க முற்பட்டதனை சிலோன் ஒப்சேர்வர் குறிப்பிடுகின்றது. இக்குறிப்பிலே அரசாங்கத்திடமிருந்து மேலும் 50 ரூபா மானியமாகப் பெறப்பட வேண்டும் என்ற பிரேரணை கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது என்ற செய்தி காணப்படுகின்றது. 1954-ம் ஆண்டு புதிய நூலகத்திற்கு அத்திவாரக்கல் நாட்டப்பட்ட செய்தியை தினகரன் வெளியிட்டுள்ளது. இதற்குப்பின்னர் எரியூட்டலும் அதனைப்பற்றிய செய்திகளும் காணப்படுகின்றன.

இந்த நூலகம் பற்பல கிடைத்தற்கரிய பழம்பெரும் நூல்கள் மற்றும் தமிழ் ஓலைச் சுவடிகள் நாழிதழ்கள், வார மாத இதழ்கள் துண்டுப் பிரசுரங்கள் போன்றவற்றைத் தன்னகத்தே கொண்டு விளங்கியது.அவரவருக்குரிய நூல்களை, நூலக வரையறையை மீறாமல் தேர்ந்தெடுத்து வழங்குவதிலே யாழ். பொதுமக்கள் நூலகத்தினர் காட்டியுள்ள ஈடுபாட்டுணர்வு போற்றுதற்குரியது.

இது போன்ற பல செய்திகளையும் தகவல்களையும் அக்கால நூலகச் செயற்பாடுகளையும் எரியுண்ட நூலகத்தின் புனர்நிர்மாணச் செயற்பாடுகளையும் தெளிவாகவும் சுருக்கமாகவும் நுணுக்கமாகவும் விபரிக்கின்றது இத்தொகுப்பு நூல்.இந்நூலகத்தின் அதிதீவிர வாசகனும் படிப்பாளியுமாகிய எஸ். எம்.கமால்தீன் என்பவர் "நான் கண்ட யாழ்ப்பாணப் பொது நூலகம்" என்ற தலைப்பிலே எழுதியுள்ள கட்டுரையில்..

"எனது கண்களையே நம்ப முடியவில்லை. அந்த விசாலமான மண்டபத்தின் தரை முழுவதுமே சாந்தும் சாம்பலுமேயன்றி வேறெதுவுமே காணப்படவில்லை. ஓர் இடுகாட்டின் மத்தியில் நிற்பது போன்ற உணர்ச்சியே எனக்குள் மேலிட்டது. எமக்கு ஏன் இந்தக் கொடுமையைச் செய்தார்கள்? கலங்கிய கண்களோடு என் முன்நின்ற யாழ். பொது நூலகர் திருமதி ரூபவதி நடராஜா விடுத்த உருக்கமான கேள்வி இது.

நாட்டின் அனைத்துத் திசைகளில் இருந்தும் ஏன் உலக நாடுகள் எங்கணுமிருந்தும் ஆயிரமாயிரம் நல்லிதயங்களிலிருந்து எழும் கேள்வியும் இதுவே. யாழ்ப்பாணப் பொது மக்கள் நூலகத்தின் இரவல் வழங்கும் பகுதியின் நடுவே வெறுமையின் கோரத்தில் சிந்தையைச் செலத்தியவனாக நிற்கின்றேன் நான். முன்னர் எத்தனையோ தடவைகள் எனது சிந்தைக்கு விருந்தளித்த அந்த அறிவுக்களஞ்சியம் சிதைந்து சூனியமாகி விட்டிருந்தது. இதயமே அற்றோர் கடந்த ஜுன் மாதம் முதல்நாள் அதிகாலையில் மூட்டிய தீயினால்" என மிகுந்த கவலயுடன் கொதிப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இக்கட்டுரை 19.7.1981 திகதியிட்ட வீரகேசரி வார வெளியீட்டிலே பிரசுரமாயிற்று.


நீலவண்ணன் எழுதி வரதர் வெளியீடாக 1981 ஜுனில் பிரசுரமான "மீண்டும் யாழ்ப்பாணம் எரிகின்றது" என்ற சிறுநூல் யாழ் நூலகப்படுகொலை பற்றிக் குறிப்பிடுவதாவது:
"அன்று இரவு 10 மணி போல நூலகத்திற்குள் நுழைந்த கொடியவர்கள் காவலாளியைத் துரத்தியடித்து விட்டு நூலகப் பெருங்கதவைக் கொத்தித் திறந்து உள்ளே புகுந்து அட்டூழியங்கள் புரிந்தனர். 97ஆயிரம் கிடைத்தற்கரிய நூல்கள் மற்றும் ஓலைச்சுவடிகளுக்குப் பெற்றோல் ஊற்றிக் கொழுத்தி எரித்தழித்தனர். நூலகத்தினுள் சாம்பல் குவியல்களே எஞ்சிக் கிடந்தன. அந்தச் சாம்பல் குவியல்களுக்குள்ளே எரியாத நூல்கள் ஏதேனும் எஞ்சிக் கிடக்குமோ என்ற நப்பாசையில் நூலக உதவியாளர்கள் சு.யோ.இமானுவேலும் அ.டொன் பொஸ்கோவும் ச.கந்தையாவும் சாம்பல் குவியல்களைக் கிளறிக் கொண்டிருந்த நிலையைக் காண முடிந்தது. நூலகம் கருகிக் காரை பெயர்ந்து கிடந்தது ... கயவர்கள் நூலகத்தையே புகைத்து விட்டார்கள்."

அனேகமாக 1981 மே மாதம் 31-ம் திகதி நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் வெளியான 1981-ம் ஆண்டு நாழிதழ்கள், வார இதழ்கள் யவுமே (உலகம் முழுவதும்) யாழ்ப்பாண பொது நூலகத்தின் "படுகொலை"யைப் பற்றி விலாவாரியாக எழுதியிருந்தன. அவற்றைப் பற்றிய செய்திப்பதிவுகளும் அனுதாப அறிக்கைகளும் நூலகப்புனர்நிர்மாணத்திற்கான நன்கொடைகள், அன்பளிப்புகள் பற்றிய தகவல்களும் 1984-ம் ஆண்டு ஜுன் மாதம் நான்காம் திகதி வெளியிடப்பெற்ற புனர்நிர்மாணஞ் செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பொதுநூலகத் திறப்பு விழா மலரில் பிரசுரமான மிக முக்கியமான ஓரிரு கட்டுரைகளும்,

பழம்பெரும் நூலகர்கள் பற்பல துறைகளைச் சார்ந்தோர் எழுதிய கட்டுரைகளும் எரிமலை, நம்நாடு, புதமைப்பெண், புதினம் போன்ற பிறநாட்டுத் தமிழ் ஏடுகளில் பிரசுரமான கட்டுரைகளும் தமிழ் நேஷன், தமிழ் நெற், போன்ற இணையத்தளங்களின் செய்தி மற்றும் தகவல்களும் அடங்கிய ஆவணக்கருவூலப் பெட்டகமாக வெளிவந்திருக்கும் இந்த வரலாற்றுத் தொகுப்பு நூல் நூலகர் என். செல்வராஜாவின் பெயரைக் காலமெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டேயிருக்கும்.

ஏனெனில் புலம்பெயர்ந்து மேலைநாடுகளுக்குப் போன ஈழத்தமிழர்களிலேயே பெரும்பான்மையினர் தமிழனுக்கேயுரிய புறத்தையும் அகத்தையும் தொலைத்துவிட்டு சுயமுகம் இழந்து இரவல் முகம் வாங்கிவரும் இன்றைய சூழலிலே என். செல்வராஜா போன்றவர்களின் இத்தகைய செயற்பாடுகள் மனப்பூர்வமான போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்குமுரியவையே.

மகத்தான வரலாற்றுத் தொகுப்பு நூலுக்கான இந்தத் திறனாய்வுக் கட்டுரையை பேரறிஞர் அண்ணா அமெரிக்க யேல் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை மண்டபத்தின் வாயில் முகப்பிலே கண்டு சொன்ன மகுட வாசகத்துடன் நிறைவு செய்கிறேன். "வரலாற்றிடமிருந்து யாரும் பாடம் படிப்பதே இல்லை."

கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

--இயக்குனர் பாலு மகேந்திரா -- சென்னையில் நடந்த திரையிடும் நிகழ்வில்



நன்றி
-மருதம்


கடந்த 65 வருட கால சினிமா வாழ்க்கையில் என் மக்களுக்காக நான் என்ன செய்தேன் என சிந்தித்து பார்க்கின்றேன். இந்த நூலகத்தைப் பயன்படுத்தியவன் அதனை அனுபவித்தவன் என்ற காரணங்களிருப்பினும் அது குறித்து நான் எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. ஆனால் நூலகம் எரிக்கப்பட்டபோது பிறந்த குழந்தை அது தொடர்பான ஆவணப் படத்தை எடுத்து என் கைகளில் தரும் போது என் இயலாமையை உணர்கிறேன்.

--இயக்குனர் பாலு மகேந்திரா -- சென்னையில் நடந்த'எரியும் நினைவுகள்' திரையிடும் நிகழ்வில்.

கலாச்சார படுகொலை


0 comments: