Headline

புலிகளிடம் இன்னும் இரு விமானம் - புலனாய்வு தகவல்


*net photo
இரண்டு பேர் செல்லக்கூடிய உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு வானூர்தியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் வசம் இப்போதும் இருப்பதாக பாதுகாப்பு வட்டாரங்களை ஆதாரம் காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று இன்று செய்தி வெளியிட்டிருக்கின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமது கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட பகுதியில் இவற்றை அவர்கள் வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் வசம் மற்றொரு வானூர்தி இருப்பதாக இப்போதும் இருப்பதாக சில செய்திகள் தெரிவித்த போதிலும், இராணுவ மற்றும் புலனாய்வு வட்டாரங்களை அதனை மறுத்தே வந்தன. அவர்களிடம் இருந்த இரு வானூர்திகளும் கடந்த பெப்ரவரி மாதத்தில் கொழும்பில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் இழக்கப்பட்டு விட்டதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்து வந்தன.

இருந்தபோதிலும், முல்லைத்தீவில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் மற்றும் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களிடம் சிறிலங்கா புலனாய்வுத்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, உலங்குவானூர்தி ஒன்றும் மற்றொரு வானூர்தியும் புலிகளிடம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டதாக இந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1990-களின் தொடக்க பகுதியிலேயே விடுதலைப் புலிகள் உலங்குவானூர்தி ஒன்றைக் கொள்வனவு செய்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் உள்ள பிரபல கோவில் ஒன்றின் திருவிழாவின் போது இந்த உலங்குவானூர்தி முதல் தடவையாகப் பறந்ததை ஆயிரக்கணக்கான மக்கள் பார்த்துள்ளார்கள்.

இதனையடுத்து 1998 நவம்பர் மாதம் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் முல்லைத்தீவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லம் ஒன்றில் இந்த உலங்குவானுர்தி மலர்களைச் சொரிந்தமையையும் பலர் கண்டுள்ளார்கள்.

இதேபோல 2004 ஆம் ஆண்டு மாவீரர் நாளின்போது விசுமடுவில் உள்ள மாவீரர் துயிலும் இல்லத்திலும் இந்த வானூர்தி மலர்களைத் தூவியது.

படையினரின் நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின் உறுப்பினர் ஒருவர், புலிகளிடம் நான்கு வானூர்திகளும், ஒரு உலங்கு வானூர்தியும் இருப்பதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகளின் போது தெரிவித்திருந்தார்.

இதில் இரண்டு வானூர்திகள் கொழும்பில் இடம்பெற்ற தாக்குதலின்போது அழிந்துவிட்டது.

மற்றையதில் ஒன்றை புலிகள் இப்போதும் தம்வசம் வைத்திருக்கின்றார்கள். மற்றைய வானூர்தி எங்கே என்பது தனக்குத் தெரியவில்லை என அவர் குறிப்பிட்டிருக்கின்றார்.

2004 ஆம் ஆண்டில் இரணைமடுவில் அமைந்திருந்த விடுதலைப் புலிகளின் பிரதான வானூர்தி ஓடுபாதையில் சரக்கு வானூர்தி ஒன்று வந்து இறங்கிச் சென்றதாகக் கூறப்படுகின்றது.

இதில் இருந்து பெருமளவு பொருட்கள் இறக்கப்பட்டதாகத் தெரிவிக்கும் புலனாய்வுத்துறையினர் இவ்வாறு கொண்டுவரப்பட்ட பொருட்கள் என்ன என்பதை அறிய முடியாதிருப்பதாகவும் தெரிவித்தனர்.

இதேவேளையில் விளாத்திக்குளம் பகுதியில் சிறிலங்கா வான் படைக்குச் சொந்தமான புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபடும் ஆட்களின்றிச் செல்லும் வானூர்தி (UAV) ஒன்று விடுதலைப் புலிகளின் வானூர்திகளில் ஒன்றினாலேயே சுட்டுவீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமது வானூர்தியில் பொருத்தப்பட்டிருந்த பல்நோக்கு இயந்திரத் துப்பாக்கி ஒன்றைப் பயன்படுத்தியே சிறிலங்கா வான்படையின் உளவு வானூர்தியை புலிகள் சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நன்றி
-வன்னி.நெட்

0 comments: