Headline

இந்தியாவின் நிலை பற்றி - மகிந்தவின் செயலாளர்


சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இந்திய உயர்மட்டக்குழு நடத்திய பேச்சுக்களின் போது போர் நிறுத்தம் தொடர்பாக பேசப்படவே இல்லை என சிறிலங்கா அரச தலைவரின் செயலாளரும் இந்தப் பேச்சுக்களில் கலந்துகொண்டவருமான லலித் வீரதுங்க தெரிவித்திருக்கின்றார்.
வன்னி நிலை தொடர்பாக அவசரப் பேச்சுக்களை நடத்துவதற்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் தனது சிறப்புப் பிரதிநிதிகளாக இந்திய வெளிவிவகாரத்துறைச் செயலாளர் சிவ்சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை நேற்று கொழும்புக்கு அனுப்பிவைத்தனர்.

வன்னியில் தொடரும் போரால் அப்பாவிப் பொதுமக்கள் அதிகளவில் கொல்லப்படுவது தொடர்பான இந்தியாவின் கவலையை சிறிலங்காவிடம் வெளிப்படுத்தும் இவர்கள், உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என சிறிலங்கா அரசுக்கு அழுத்தம் கொடுப்பார்கள் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில் நேற்று சுமார் 90 நிமிட நேரம் நடைபெற்ற இந்த உயர்மட்டப் பேச்சுக்களின் விபரங்கள் எதுவும் அதிகாரபூர்வமாக வெளியிடப்படாமையால், இந்தியா போர் நிறுத்தத்துக்கான அழுத்தத்தைக் கொடுத்ததா என்பது கேள்விக்குறியாகவே இருந்தது. இந்தியத் தரப்பினர் இது தொடர்பாக எதனையும் கூறவில்லை.

இந்நிலையில் இன்று சனிக்கிழமை கொழும்பில் உள்ள ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் செயலாளர் லலித் வீரதுங்க, இந்தியத் தரப்பினர் போர் நிறுத்தம் தொடர்பாக பேசக்கூட இல்லை எனத் தெரிவித்திருக்கின்றார்.

இப்பேச்சுக்களில் அரச தலைவர் மகிந்தவுக்கு உதவியாக லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவுப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து வந்துள்ள மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்குவது போன்ற விடயங்கள் தொடர்பாகவே இந்தியத் தூதுக்குழுவினருடன் முக்கியமாகப் பேசப்பட்டதாகவும் அதற்கான வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியத் தரப்பினர் அக்கறை காட்டியதாகவும் லலித் வீரதுங்க மேலும் தெரிவித்தார்.

நன்றி
- புதினம்.காம்

0 comments: