Headline

ரேடார் மூலம் கண்டுபிடித்த ராணுவத்தினர்!!


அம்பலவன் பொக்கனை, வலைஞர் மடம், மாத்தளன், இரட்டை வாய்க்கால், இடைக்காடு, முள்ளிவாய்க் கால் ஆகிய ஆறு கிராமங்களும் கடல் பார்த்துக்கிடக்க... அதனைச் சுற்றிய ஐந்து முனைகளில் 40 ஆயிரம் சிங்கள ராணுவ வீரர்கள் குறி பார்த்து நிற்க...

மூன்று லட்சம் தமிழ் மக்கள் வானம் பார்த்து நல்ல செய்தி வராதா என்று நிர்க்கதியாக, நிராதரவாக அலைய... 'இன்னும் ஒரு வாரம்தானாமே' என்று கொழும்பு சந்தோஷக் காற்றைப் பரவவிட... தமிழ் ஈழம் தனது இறுதிக் கட்டத்தை நெருங்கிக்கொண்டு இருப்பது நிஜமா?
தமிழர்கள் தங்கள் தலைவிதியைத் தாங்களே நிர்மாணித்துக்கொள்ளும் தனித் தமிழீழமா அல்லது ஐக்கியப்பட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியா என்ற கேள்வி அப்புறம். அந்தப் பூமியில் உயிரை மட்டும் மிச்சமாக வைத்து காலம் கடத்திய கூட்டம், சில சொச்சமாவது மிஞ்சுமா என்ற கேள்விதான் ஐ.நா. வரை கேட்கிறது. யார் சொன்னாலும் கேட்கும் மனநிலையில் சிங்கள அரசாங்கம் இல்லை. இலங்கையைத் துண்டாடும் 'பயங்கரவாதிகளுக்கு எதிரான யுத்தமாக' ஆரம் பிக்கப்பட்ட மகிந்தாவின் தாக்குதலில், கடந்த இரண்டாண்டுகளில் மட்டும் 77 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டு இருப்பதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினம் சொல்கிறார்.


'புலிகளைத்தான் கொல்கிறோம், பயங்கரவாதிகளைத்தான் தாக்குகிறோம், இலங்கையில் அமைதியை ஏற்படுத்தப் போகிறேன்' என்று மகிந்தா சொல்வதன் அர்த்தம்... யாருமில்லாத மயான அமைதியா?

கடந்த அக்டோபர் 14-ம் தேதி 'போர் நிறுத்தம் தேவை' என்று தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் போட்டு தீர்மானம் நிறை வேற்றினார் முதல்வர் கருணாநிதி. அன்று முதல் இந்த வாரம் வரை மட்டும் 8 ஆயிரம் தமிழர்கள் குண்டு போட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். 15 ஆயிரம் பேர் ஊனமானார்கள். புலிகளைச் சண்டை போட்டுக் கொல்ல முடியாமல் வானத் தில் இருந்து குண்டுகள் போட்டு மக்களைக் கொல்வதை ஐ.நா. சபையில் ஆரம்பித்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் அத்தனையும் சொன்ன பிறகும் சாவும் நிற்கவில்லை... சண்டையும் நிற்கவில்லை.

கடந்த 8-ம் தேதி மட்டும் 189 பேர் கொல் லப்பட்டார்கள். போர் சூழ்ந்த புதுக்குடியிருப்புப் பகுதியில் இயங்கும் தொடக்கச் சுகாதார நிலையத்தில் பால் மாவு வாங்க நின்றிருந்த தமிழ்க் குடும்பங்கள் தலையிலும் குண்டு இறங்கியது. கற்பகநாதன் கஜீபன் என்ற ஒன்றரை வயதுக் குழந்தையும், யோசேப் மார்த்தம்மா என்ற 76 வயது பாட்டியும் பலியானார்கள். ஆர்ட்டிலறி எறிகணைகள், பல்குழல் வெடிகணை, மோட்டார் பீரங்கி, ஆர்.பி.ஜி. உந்துகணை, தொலை தூரத் துப்பாக்கி. ஆகிய ஐந்தும்தான் ஆரம்பத்தில்! கிளஸ்டரும் வெள்ளை பாஸ்பரஸூம் சில மாதங்களுக்கு முன் வந்தன. இப்போது... ரசாயன குண்டுகள். இதற்கு 'ஷாக்கிங் ஏஜென்ட்' என்று பெயராம்!

கடந்த 4-ம் தேதி மிகப் பெரிய தாக்குதலுக்குப் புலிகள் திட்டமிட்டு ஓர் இடத்தைத் தாண்டி இன்னோர் இடத் துக்கு இடம்பெயர்ந்துகொண்டு இருந்ததாகவும், அதை ரேடார் மூலம் கண்டுபிடித்த ராணுவத்தினர், அந்த இடத்தை நோக்கி இந்த ரசாயனப் புகையைக் கிளப்பியதாகவும் தகவல். புலிகள் அமைப்பின் கட்டளைத் தளபதிகளாக இருந்த தீபன், விதுஷா உள் ளிட்ட 127 பேர் இறந்துபோனார்கள். இதே தாக்கு தலில் 1,300 தமிழர்களும் பலியாகி இருக்கிறார்கள். தமிழர்களை இனி ஒட்டுமொத்தமாகக் கொல்லத் திட்டமிட்டிருக்கும் முறை இதுதான்.

"இந்த வகையான ரசாயனக் குண்டுத் துகள்கள் தோலில் பட்டதும், அந்த இடத்தில் கொப்புளம் வரும். உடனே அவை வெடிக்கும். உடம்பு முழுக்க இது போன்ற கொப்புளங்கள் வந்து வெடித்து ரசாயனங்கள் உள்ளே போய் உயிரைப் பறிக்கும்.

முன்பெல்லாம் ரசாயனக் குண்டுகளின் புகைகள் மூச்சுக்காற்று வழியாக உடம்புக்குள் போய் உயிரைப் பறித்துவிடுவதாக இருந்தது. ஆனால், அதிலிருந்து தப்பிக்க மாஸ்க் வந்துவிட்டது. அதையும் புலிகள் பயன்படுத்துகிறார்கள். எனவேதான் இப்போது தோலைத் தாக்கும் ரசாயன மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன" என்று தகவல்கள் சொல்லப்படுகின்றன. இந்த ரசாயன குண்டுகள் பயன்படுத்தப்படுவது குறித்து இலங்கை மனித உரிமை அமைப்புகள் தங்கள் கவலைகளைத் தெரிவித்துள்ளன.

பூநகரில் ஆரம்பித்து புதுக்குடியிருப்பு வரை சிங்கள ராணுவத்துக்கு இத்தனை பெரிய வெற்றியை வாங்கிக் கொடுத்தது 58, 59-வது படைப் பிரிவுகள்தான். அதிகமான அளவு பயிற்சியும் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இதில் இருந்தார்கள். ஆனால், மூன்று தாக்கு தல்களில் இதில் இருந்த 3,500 பேரைப் புலிகள் கொன்றுவிட்டதாகவும்... எனவே, ராணுவத் தரப்பு இனி போரில் வெல்ல முடியாத நிலை யில் ரசாயன குண்டுகளையே நம்பியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ரசாயனங்களை அதிகமாகப் பயன்படுத்தும்போது சாவுகளின் எண்ணிக்கை அதிகமாகும். இந்த ஐந்து கிராமங்களையும் குறிவைத்துத் தாக்கும்போது அங்கு வாழும் 3 லட்சம் மக்களின் கதியும் அதோ கதிதான்.

புதுக்குடியிருப்புக்கு தென்மேற்கு, வடக்குப் பகுதியில் புலிகள் அமைப்பு மையம்கொண்டு இருப்பதாக நினைத்து, ராணுவம் தாக்குதலைத் தொடுத்து வருகிறது. ஆனால், அது முழு உண்மைஅல்ல என்ற தகவல் இப்போது சொல்லப்படுகிறது. 'பூநகரியை ராணுவம் பிடித்ததுமே புலிகள் அமைப்பு 50, 100 பேர்களாகப் பிரிந்து, தமிழ்ப் பகுதியின் காடுகளுக்குள் பரவிவிட்டனர். யாழ்ப்பாணம், அம்பாறை, மட்டக்களப்புக் காடுகளுக்குள் இவர்கள் ஐக்கியமாகிவிட்டார்கள். மரபுவழி ராணுவ மாக இருந்தவர்கள் மீண்டும் கெரில்லாப் படை யாகப் பிரிந்துவிட்டார்கள். எனவே, புலிகள் அமைப்பை முழுமையாகத் துடைத்தெடுக்கப் போவதாகச் சொல்லி, சிங்கள ராணுவம் செய்யப் போவது தமிழ் மக்களைத் துடைத்தெறிவதாகத்தான் இருக்கும்' என்று செய்திகள்.

"அங்கிருப்பவர்களை அப்பாவி மக்களாக மட்டும் சொல்ல முடியாது. அவர்களும் ஏதோ ஒரு விதத்தில் பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள்தான். அவர்கள் காட்டுக்குள் இருந்து தப்பித்து வந்தாலும், பொது மன்னிப்பு வழங்க மாட்டோம்" என்று ராணுவச் செயலாளர் கோத்தபய ராஜபக்ஷே சொல்லிப் பல மாதங்கள் ஆகிவிட்டன. எனவே, ராணுவத்தின் பார்வையில், ஒன்றரை வயது கஜீபனும் 76 வயது மார்த்தம்மாவும் பயங்கரவாதிகள்தான். மக்கள் இப்போது அடர்ந்த பனைமரங்களுக்கு மத்தியில் டென்ட் அடித்தும், மேற்கூரை இல்லாமலும் பொழுதைக் கடத்துகிறார்கள். வெப்பக் காலத்தில் நிழலற்ற பனைமரத்துக்குக் கீழே வாழ்வதன் அவஸ்தை அவர்களுக்கு மட்டும் தெரியும். எல்லோருக்கும் ரசாயனக் குண்டு வீசாமலேயே கை, கால்களில் கொப்புளங்கள் வெடித்திருக்கின்றன. சோறு பொங்கிய தண்ணீரும், பருப்பு வேக வைத்த தண்ணீரும்தான் உணவு. பகல் முழுவதும் வெப்பக் காற்றில் உடல் கருக, நள்ளிரவோ பயங்கரமானதாக இருக்கிறது. துக்கம் தொண்டையை அடைப்பதால் தூக்கமில்லை. மிதமிஞ்சிய முழிப்பு அதிகாலையில் கண்ணை மயக்கும்போது, வெடிச் சத்தம் பலரை அப்படியே கொல்கிறது. சிலரை முழிக்க வைத்து அழச் சொல்கிறது.

இப்படியாக எழுதப்படும் இலங்கை வரலாற்றில்...

அரையாண்டுக்கு முன்னால் கிளர்ந்த அகிம்சைப் போராட்டம் பயனற்றுப்போனது. இளைஞர்கள் பலர் ஆயுதம் தூக்கினார்கள். அப்பாவி ஆண்களும் பெண் களும் கொல்லப்பட்டார்கள். ஒரு லட்சம் அபலைகள் தாய்த் தமிழகத்துக்குத் தப்பி வந்து, சிறுகுடிசைகளில் வசிக்க ஆரம்பித்தார்கள். மூன்று லட்சம் பேர் விட்டால் போதும் என்று வெளிநாடுகளுக்குத் தப்பிப் போனார்கள். யாழ்ப்பாணம் பகுதி மக்கள் ஊரடங்கு உத்தரவால் அமுக்கப்பட்டார்கள். கிழக்கு மக்கள் எந்த வசதியும் இல்லாமல் இரண்டாம் தரக் குடிமக்கள் ஆனார்கள்.

கொழும்புத் தமிழர்கள் அடையாளம் அனைத்தையும் இழந்து சிங்கள மக்களாக உருமாறினார்கள். 30 ஆயிரம் புலிகள் ஆயுதப் போராட்டத்தில் மடிந்து போனார்கள். ஆறு காலப் பூசை நடந்த கோயிலில் மணியடிக்க ஆளும் இல்லை; மனமுருகி வணங்கப் பக்தனும் இல்லை. விவசாய நிலங்கள் வீடுகளாக்கப்பட்டு சிங்களர்கள் குடியேற்றப்பட்டார்கள். சைவப் பெயர்கள் அனைத்தும் சிங்களம் ஆக்கப்பட்டன. கடலுக்கு மீன் பிடிக்க மட்டுமல்ல, காற்று வாங்கவும் யாரும் வரவில்லை. வடக்கு மாகாணத்தில் ஒரு லட்சம் பேர் கொல்லப் பட்டார்கள்; இரண்டு லட்சம் பேர் மனநிலை பாதிக் கப்பட்ட நிலையில் கம்பி வேலிக் கொட்டடிக்குள் அடைக்கப்பட்டார்கள்.

கடலுக்கு அடுத்த பக்கத்தில் எட்டுக் கோடித் தமிழ் மக்கள் செய்வதறியாது கையைப் பிசைந்துகொண்டு வேடிக்கை பார்க்கிறார்கள்!

-----நன்றி:விகடன்----
-----நன்றி செய்தி.காம்
நன்றி nowpublic.com

0 comments: