Headline

எந்த இனத்துக்கும் வர வேண்டாம் ஈழத்தமிழர் நிலை


வன்னியிலிருந்து கிடைக்கும் காட்சியூடகங்கள் நம்மை அதிர்வுக்குள்ளாக்குகின்றன. குருதி தோய்ந்த மனித உடல்கள்.

ஆணாகவும் பெண்ணாகவும் சிறுவர்களாகவும் முதியவர்களாகவும் வயது வேறுபாடற்ற மனித உடலங்கள். சாவுக்காய் காத்திருக்கும் மனிதர்கள் பிணங்கள் போல நடமாடுவதாகப் படுகிறது. நிம்மதியாய்த் துயின்று எத்தனை நாட்களாகியிருக்கும்?

சாவகாசமாய் ஒரு கவளம் சோறுண்டு சற்றுத் திண்ணையில் சாய்ந்திருந்து மாதங்கள் இப்போது எத்தனையாகியிக்கும்? அன்று நாம் இருந்தோம். எமது வீட்டினிலே. எமது நிலத்தில். வாழ்வில் நம்பிக்கைகளுடன். என்று வாழ்ந்தவர்கள். ஆனால் இன்று? யாருடைய காதுக்கும் இவர்களுடைய குரல் எட்டவில்லை. யாருடைய இதயத்தையும் இந்த மக்களுடைய அவலம் பிழியவில்லை. யாருடைய மனச்சாட்சியையும் இவர்களுடை ஓலம் உலுப்பவில்லை.

ஆனாலும் காத்திருப்பு! எதற்காக? எவருக்காக? யாருக்காக? புரியாத காத்திருப்பு!

தீராத துயராகிப் போன இந்த நெஞ்சங்களின் ஆறாத காயங்களை ஆற வைக்க யாருமில்லாத நிலையில் ஏக்கங்களுடன் தூசிபடிந்த முகங்களுடனும் ஏதோவொரு நம்பிக்கையுடன் காத்திருக்கின்றார்கள் இந்த மக்கள்.

15 தடவைக்கும் மேலாக இடம்பெயர்ந்தவர்களும் இவர்களுள் அடக்கம். அவர்களுடைய வாழ்வு வெறும் எண்ணிக்கைகள் சார்ந்ததாக மாறிவிட்டுள்ளது. இன்று இத்தனை பேர் உயிரிழந்தார்கள், எத்தனை பேர் காயப்பட்டார்கள்? எத்தனை பேர் இருப்பிடங்களை விட்டு வெளியேறினார்கள் என்கிற எண்களாக நகருகிறது அவர்கள் வாழ்வு.


கிளிநொச்சி மாவட்ட செயலகம் தர்மபுரத்தில் ஒரு தற்காலிகக் கொட்டிலில் இயங்குகிறது. கிளிநொச்சி வைத்தியசாலையோ படையினரின் செல் வீச்சுக்கு மூச்சுத்திணறி தனது புதிய கட்டிடங்களையும் கைவிட்டு தர்மபுரத்திற்கு இடம் பெயர்ந்துள்ளது.

மன்னார் மாவட்டம் வவுனியா வடக்கு, கிளிநொச்சி மாவட்டத்தின் பிறபகுதிகள் என்று எல்லாப் பகுதிகளிவிருந்தும் இடம் பெயர்ந்தவர்களால் பிதுங்கி வழிகிறது தர்மபுரம்.
பரந்தன் முல்லைத் தீவு வீதி மிக மிக நெருக்கடியான ஒரு வீதியாக மாறிவிட்டுள்ளது. பஸ்கள், லொறிகள், மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்கள், உணவு லொறிகள், ட்ரக்டர்கள் பாடசாலை மாணவர்கள் என்று நிரம்பி வழிகிறது. மழைக்காலம் ஆனபடியால் வீதியின் உலர்ந்த பகுதிகளை மாடுகளும் நாய்களும் ஆக்கிரமித்து விட்டிருக்கின்றன.

இவற்றுக்கிடையில் சைக்கிள்களிலும், மோட்டார் சைக்கிள்களிலும், லான்ட் மாஸ்ரர்களிலும் வண்டில்களிலுமாய் அவரவர் தட்டுமுட்டுச் சாமான்களுடன் மக்கள் கூட்டம் நகர்ந்தபடி இருக்கிறது.




எங்கு போவது என்றும் அறியார், அவர் ஏது செய்வது என்றும் அறியார்? னாலும் போர் அரக்கன் அவர்களைத் துரத்துவதை விட்டானா?


ஜனவரி எட்டாம் திகதியிலிருந்து தர்மபுரம் நோக்கி தொடர்ச்சியாகச் செல் வந்து விழத் தொடங்கியது. மூன்று சந்தர்ப்பங்களில் இடம் பெயர்ந்த மக்கள் மத்தியிலேயே வந்து விழுந்து வெடித்தது.


இந்த ஐந்து நாட்களுள் ஆறு பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 32 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள். கொல்லப்பட்டவர்களுள் இரண்டு பேர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் என்று சொன்னால் நம்புவீர்களா? 60 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர் ஒருவரையும் செல் கொன்று போட்டிருக்கிறது. 15 வயதுக்குட்பட்ட 6 சிறுவர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்ட 11 வயோதிபர்களும் கூட படுகாயமடைந்திருக்கிறார்கள். படுகாயமடைந்த 38 பேரில் 19 பேர் பெண்கள் என்கிறது ஒரு கணிப்பீடு.




ஓடிக்களைத்து சற்று ஓய்வாக முன்னரே தர்மபுரத்திலிருந்தும் சிறிலங்கா இராணுவத்தின் செல் இவர்களைத் துரத்த ஆரம்பித்தது.


ஜனவரி 11ஆம் திகதியிலிருந்து தர்மபுரத்திலிருந்தும் ஓட ஆரம்பித்தார்கள். இடம் பெயர்ந்து தர்மபுரத்தில் இருந்த வைத்தயசாலைக்கருகிலும் செல் வந்து விழ ஆரம்பித்தது. சுமக்க முடியாமல் வீட்டுத் தளபாடங்களைச் சுமந்து போன ட்ராக்டர்கள் வீதியின் சீரற்ற நிலை காரணமாக பழுதடைந்து நகரமுடியாமல் ஆங்காங்கே நின்று விட்டன. இதுவும் அந்த வீதியின் சனநெரிசலை இரட்டிப்பாக்கி விட்டுள்ளது.

வன்னி முழுவதும் வந்து விழும் செல்களால் தாக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்கத் தொடங்கி விட்டுள்ளது. அவர்களை ஏற்றிச் சென்ற அம்புலன்ஸ்கள் தெருவின் நெரிசல் காரணமாக நகர முடியாமல் ஊரந்து ஊர்ந்து தான் செல்ல வேண்டிய நிலை.


தர்மபுரத்தையும் தாண்டிச் சென்ற மக்கள் மரங்களின் கீழும் வெறும் தற்காலிக கூரையின் கீழும் மீளவும் குடியமர்ந்துள்ளனர். 2008 ஆரம்பத்தில் மன்னர் தட்சணாமடுவிலிருந்து இடம் பெயர ஆரம்பித்த செல்வராசா செல்வி அங்கிருந்து பெரியமடு, கணேசபுரம், வன்னேரிக்குளம் முறிப்பு, கல்மடு, தர்மபுரம் என்று தொடர்ந்து இடப் பெயர்வுக்குள்ளாகி வருகிறார். தற்போது தர்மபுரத்திலிருந்தும் புறப்பட வேண்டியதாயிற்று.



2008 ஜனவரியில் தட்சிணாமடுவில் பஸ் ஒன்றுக்கு ஆள ஊடுருவும் அணி வைத்த கிளைமோரில் 15 வயதேயான மில்ரன்கொல்லப்பட்டது பற்றி அவர் நினைவுகூர்கிறார். அவருடைய மருமகள் அனிற்றா 16 வயது அந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்தாள். அவருடைய உறவினரான தம்பையா தர்மலிங்கம்(45) விமானப்படையினரின் குண்டுவீச்சில் சில நாட்களுக்கு முன்னர் பலியானாh. அந்த மரண வீட்டிற்குப் போகமுடியவில்லை என்கிற துயர் செல்வியை வாட்டி வதைக்கிறது.



பாலசுப்ரமணியம் கமலேஸ்வி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் 1996இல் குடும்பத்துடன் கிளிநொச்சிக்கு இடம் பெயர்ந்து வந்தார். மல்லாவியில் வசிக்க ஆரம்பித்த இவர்களிடம் ஏராளமான பசுமாடுகள் எருதுகள், கோழி தாரா போன்ற வளர்ப்புப் பறவைகள் இருந்தன. அண்மைய இராணுவத் தாக்குதல்களுடன் இவர்கள் ஸ்கந்தபுரத்திற்கு இடம் பெயர்ந்தார்கள். பின்னர் கிளிநொச்சி அங்கிருந்து தர்மபுரம் இப்போது அங்கிருந்தும் புறப்பட்டாயிற்று. மரணத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள அவர்கள் மேற்கொண்ட இடப் பெயர்வினால் அவர்களுடைய மாடுகளும் எருதுகளும் கொல்லட்டுப் போயின. பல செல்லடியிலும் எஞ்சியவை வெள்ளத்திலுமாக அள்ளுண்டு போய் விட்டன.

திருக்கெதீஸ்வரன் திரேசா பாரதிபுரத்தைச் சேர்ந்தவர். 1996இல் அக்கராயனுக்கு இடம் பெயர்ந்தவர். அண்மைய இராணுவத் தாக்குதலில் கல்மடு பின்னர் நெத்தலியாறு என்று இடம் பெயர்ந்தவர். நெத்திலியாறு அரசினர் தமிழ் பாடசாலையில் தங்கியிருந்த போது ஜனவரி 11ஆம் திகதி பாடசாலை வளவில் வந்து விழுந்த செல்லினால் அவருடைய அன்ரி ஏழுமலை மனோன்மணி படுகாயங்களுக்குள்ளானார். இப்போது மரநிழலில் எதிர்காலம் பற்றிய ஏக்கத்துடனும் அச்சத்துடனும் நகர்கிறது அவரது வாழ்வு.




நம்பிக்கைகள் எதுவுமற்ற கையறு நிலை அவர்களுடையது. அடுத்த நேர உணவுக்கு ஏது செய்வது? காயமடைந்தவருக்கு மருந்துபோட போதிய மருந்து இல்லை. சன நெருக்கடியும், குண்டுகளின் கந்தக நெடியும் தலையை கிறுகிறுக்க வைக்கின்றன. காற்றிலும் நீரிலும் பருவும் வியாதிகளைத் தடுப்பதற்கு வகையேதுமில்லை. தொழில் ஏதுமற்ற நிலை. நிவாரணத்திற்காகக் காத்திருக் வேண்டிய அவலம்.

அதுவும் எப்போதாவது ஒரு முறை கிடைக்கும் போது

நீண்ட நாட்களுக்குப் பிறகு கிடைத்த

கொஞ்ச அரிசியை பானையிலிட்டுச்

சோறு பொங்கும் என்று

ஓளித்தபடி காத்திருந்த போது

பிடுங்கி எறிபட்ட என் பெண்ணே,

உடைந்த பானையையும்

நிலத்தில் சிதறி

உலர்ந்த சோற்றையும்

நான் எப்படி மறக்க?

நன்றி
குளோபல்தமிழ்

0 comments: