Headline

விடுதலைப்புலிகள் புதிய சங்கேத சொற்களால் - ராணுவம் பீதி!!!


photo file copy

தமிழீழ விடுதலைப் புலிகளின் அணி ஒன்று கொக்குத்தொடுவாய் பகுதியில் தரையிறங்கியிருக்கலாம் எனவும் இந்த அணியின் நகர்வின் போதே அலம்பில் பகுதியில் கடற்சமர் இடம்பெற்றதாகவும் 'லக்பிம' வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக 'லக்பிம' ஆங்கில வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு:

முல்லைத்தீவு கடற்கரையில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த படையினர் கடந்த சனிக்கிழமை (04.04.09) இரவு 11:45 நிமிடமளவில் கடற்புலிகளின் 15 படகுகளை அவதானித்துள்ளனர்.

இந்த படகுகள் வெல்லாமுனையில் இருந்து முல்லைத்தீவுக்கு வடக்காக நோக்கிச் சென்று கொண்டிருந்தன.

படகுகள் மீது வயர் மூலம் வழிநடத்தப்படும் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருந்தது. இதன் போது இரு படகுகள் சேதமடைந்த போதும் ஏனைய படகுகள் ஏவுகணையின் தூரவீச்சில் இருந்து விலகிச் சென்றுள்ளன.

அதன் பின்னர் நாயாறு கடற்பரப்பில் நின்ற கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கு பெரும் கடற்சமர் இடம்பெற்றிருந்தது.

முதற்கட்ட சமரின் பின்னர் கடற்புலிகளின் படகுகள் திருகோணமலை நோக்கிச் செல்வதாக கடற்படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டதால் அவர்கள் திருகோணமலை நோக்கி தமது கவனத்தை திருப்பியிருந்தனர்.

ஆனால் விடுதலைப் புலிகளின் படகுகள் கொக்குத்தொடுவாயில் தரையிறங்க முயற்சித்தன.

கொக்குத்தொடுவாயில் இறங்கி இராணுவ அணிகளை பின்புறமாக தாக்குவதே விடுதலைப் புலிகளின் உத்தி.

இதனிடையே வேறு ஒரு நோக்கத்திற்காக விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான கேணல் ஜெயம் 100-க்கும் அதிகமான போராளிகளுடன் 20 படகுகள் சகிதம் கடற்கரையில் நின்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயத்தின் அணியின் நோக்கம் என்ன என்பது குறித்து எதுவும் தெரியவில்லை. எனினும் ஏதோ ஒரு சிறப்பு திட்டத்துடன் அவர்கள் அங்கு வந்திருந்தது உறுதியானது.

ஜெயத்தின் கட்டளைகளுக்கு அமைவாக செயற்படுமாறு அவர்களுக்கு பணிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜெயத்தின் நோக்கம் என்ன என்பது குறித்து பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ள போதும், விடுதலைப் புலிகளின் தொலைத்தொடர்பு சாதனங்கள் அதிகளவில் இயங்கியதை இராணுவத்தின் புலனாய்வுபிரிவு அவதானித்துள்ளது.

எனினும் விடுதலைப்புலிகள் புதிய சங்கேத சொற்களை பயன்படுத்தியதனால் அதன் அர்த்தங்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

மேலும் ஒரு பாரிய கடல் நடவடிக்கை ஒன்றை அவர்கள் அன்று மேற்கொண்டிருக்கலாம் என தெரிகின்றது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி
புதினம்.காம்

0 comments: