Headline

மக்கள் பாதுகாப்பு வலயமே இறுதிச் சமருக்கான களம்விடுதலைப் புலிகளுக்கு எதிரான சமரின் இறுதிக் கட்டத்துக்கு வந்திருப்பதாக படைத்தரப்பு கூறுகிறது.

இதுவரை புதுக்குடியிருப்பு நகரின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளில் இடம்பெற்று வந்த சமர் இப்போது பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை நெருங்கியிருக்கின்றது.

பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே, புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கடைசிப் பிரதேசத்தையும், கடந்த புதன்கிழமை அரசபடையினர் கைப்பற்றியதை அடுத்தே சண்டைக் களம் சற்று இடம் மாறத் தொடங்கியிருக்கிறது. புதுக்குடியிருப்புச் சமர் மிக மோசமானதாகவும் படையினரால் விரைவாக முன்னேற முடியாததாகவும் இருந்து வந்தது. இதற்கு முன்னர் புலிகள் நடத்திய வழிமறிப்புச் சமர்கள் எல்லாவற்றையும் விட இது மூர்க்கம் நிறைந்ததாக இருந்தது.

காரணம், இது அவர்களின் கடைசிக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தைத் தக்க வைப்பதற்கான வாழ்வா சாவா என்ற நிலையிலானதொரு சமராகவே இருந்தமையாகும். இதனால் படையினர் இரணைப்பாலை, ஆனந்தபுரம் போன்ற புதுக்குடியிருப்பின் சில பகுதிகளைக் கைப்பற்ற பலநாட்களாகத் தொடர்ந்து கடுமையாக சண்டையிட நேரிட்டது.


இந்தச் சமரில் புதுக்குடியிருப்பின் பெரும்பாலான வளங்கள் அழிக்கப்பட்டு விட்டன. மிகக் கோரமான ஷெல் தாக்குதல்கள் விமானத் தாக்குதல்களில் வீடுகள், கட்டடங்கள், மரங்கள் பெரும்பாலானவை நாசமாகிப் போக வெறும் சுடுகாடாகக் கிடந்த பிரதேசத்தையே படையினர் கைப்பற்றியிருக்கின்றனர்.

போர் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்ட நிலையிலும், கடுமையாகப் போரிட்டு வந்த புலிகளை புதிய தந்திரோபாயத்தின் அடிப்படையில் மடக்குவதற்குப் படைதரப்பு கடந்தவாரம் முயற்சியொன்றை மேற்கொண்டிருந்தது. விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் சிலரை உயிரோடு பிடிக்கும் திட்டம் அது.

படைத்தரப்பு மிக இரகசியமாக இந்தத் தாக்குதல் திட்டத்தை நடைமுறைப்படுத்திய போதும் அவர்கள் தப்பிவிட்டனர். புதுக்குடியிருப்பு மற்றும் இரணைப்பாலைக் களமுனையில் புலிகளின் அணிகளை வழிநடத்திக் கொண்டிருந்த புலிகளின் மூத்த தளபதி கேணல் பானுவையும், மற்றொரு தளபதி லோறன்ஸ் மற்றும் சிலரையும் பிடிப்பதே படைத்தரப்பின் திட்டமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இவர்கள் பச்சைப்புல்மோட்டைச் சந்தி இரணைப்பாலை கிழக்கு, ஆனந்தபுரம் பகுதிகளில் இருந்த புலிகளின் அணிகளைக் கொண்டு கடந்த சில வாரங்களாகப் படையினர் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தி வந்தனர். அவ்வப்போது ஊடறுப்புத் தாக்குதல்களை நடத்துவது, முன்னேறும் படையினர் மீதான வழிமறிப்புச் சண்டைகளைச் செய்வதென்று புலிகளின் இந்த அணிகள் படையினருக்குப் பெரும் சவாலாக இருந்து வந்தன.

கடந்த ஞாயிற்றுக்கிழமையும் கூட சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் பெரியதொரு அணியைக் கொண்டு தளபதி கேணல் பானு ஒரு ஊடறுப்புத் தாக்குதலை மேற்கொண்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதன் பின்னர் சில கிலோமீற்றர் நீளமான முன்னரங்கை விட்டுப் படையினர் பின்வாங்க நேரிட்டதாகவும் கூறப்பட்டது. படையினருக்குத் தொடர்ச்சியாகத் தொல்லை கொடுத்து வந்த கேணல் பானு, தளபதி லோறன்ஸ் போன்றோரை பிடிக்கும் நோக்கில் படைத்தரப்பு அதிரடியானதொரு சுற்றிவளைப்புத் தாக்குதலை நடத்த முடிவு செய்தது.

இதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்துக்கு மேற்காக புலிகளிடம் எஞ்சியிருந்த ஆனந்தபுரம் மற்றும் இரணைப்பாலையின் ஒரு பகுதி ஆகியவற்றில் நின்று போரிட்ட புலிகளைச் சுற்றிவளைக்கும் வகையில் மூன்று முக்கிய இராணுவ டிவிசன்கள் தயாராகின. பிரிகேடியர் சவீந்திர சில்வாவின் 58ஆவது டிவிசன், கேணல் ரவிப்பிரியவின் 68ஆவது டிவிசன், மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவின் 53ஆவது டிவிசன் ஆகியனவே புலிகளை குறிப்பிட்ட பிரதேசத்துக்குள் சுற்றிவளைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டன.

முதற் கட்டமாகப் பாதுகாப்பு வலயப் பகுதிக்கான விநியோகப் பாதைகள் குறிவைக்கப்பட்டன. பொதுமக்கள் பாதுகாப்பு வலயத்தை உள்ளடக்கிய சுமார் 20சதுர கி.மீ பிரதேசத்துக்கு நான்கு பிரதான பாதைகள் உள்ளன. முதலாவது புதுக்குடியிருப்பில் இருந்து பழையமாத்தளன் நோக்கிச் செல்கிறது. இது பல வாரங்களுக்கு முன்னரே 58ஆவது டிவிசனால் கைப்பற்றப்பட்டு விட்டது. அடுத்தது இரணைப்பாலை வழியாக புதுமாத்தளன் நோக்கிச் செல்கிறது.

இந்த விநியோகப் பாதையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கடந்த சில வாரங்களாவே இரு தரப்பும் கடுமையாகச் சண்டையிட்டன. அண்மையில் தான் இந்தப் பாதையை 58ஆவது டிவிசனின் 20ஆவது கஜபா றெஜிமென்ட் கைப்பற்றியது. இவற்றுக்கு அடுத்தது, பரந்தன் முல்லைத்தீவு வீதி. இந்த வீதியையும் கடந்தவாரம் கேணல் ரவிப்பிரியவின் 68ஆவது டிவிசன் கைப்பற்றியது.

அப்போது புலி களுக்கு எஞ்சியிருந்தது புதுக்குடியிருப்பிலிருந்து அம்பலவன்பொக்கணை நோக்கிய வீதி மட்டுமே. இரணைப்பாலை, பச்சைப்புல்மோட்டை வழியாகச் செல்கிறது இந்த வீதி. பச்சைப்புல்மோட்டைச் சந்தியைக் கைப்பற்றினால் ஆனந்தபுரம் பகுதிக்குள் நிற்கும் புலிகளுக்கான விநியோகங்கள் தடைப்படும்.

இதனைக் கருத்தில் கொண்டு 58ஆவது டிவிசனின் இரண்டு பற்றாலியன்கள் வடக்கேயிருந்து தெற்கு நோக்கி முன்னேறி வந்தன. இந்த அணியில் லெப்.கேணல் கீத்சிறி ஏக்கநாயக்கவின் தலைமையிலான 11ஆவது இலகு காலாற்படை மற்றும் லெப்.கேணல் குமார் பீரிஸின் 20ஆவது கஜபா றெஜிமெனட் ஆகியன இடம்பெற்றிருந்தன. அதேவேளை 53ஆவது மற்றும் 68ஆவது டிவிசனின் இரண்டு பற்றாலியன்கள் தெற்கேயிருந்து வடக்கு நோக்கி முன்னேறின.

இதில் 5 ஆவது விஜயபா காலாற்படை, 6ஆவது கஜபா றெஜிமென்ட் ஆகியன இடம்பெற்றிருந்தன. இந்தநிலையில் கடந்த புதன்கிழமை 11ஆவது இலகு காலாற்படையணி பச்சைப்புல்மோட்டைச் சந்தியைக் கைப்பற்றியது. இதற்கான சண்டைகள் சுமார் 15 மணிநேரம் வரை நீடித்திருந்தது. இதன்மூலம் புலிகளின் கடைசி விநியோகப் பாதை துண்டிக்கப்பட்டது.

53 ஆவது டிவிசனின் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண விடுமுறையில் கொழும்பு திரும்பியதால் 53ஆவது டிவிசனின் பதில் கட்டளை அதிகாரியாக பிரிகேடியர் ஷாஜி கல்லகே நியமிக்கப்பட்டிருந்தார். அவரே தற்போது 53ஆவது டிவிசன் மற்றும் 68ஆவது டிவிசனை உள்ளடக்கிய சண்டையை வழிநடத்துகிறார்.

அதேவேளை தெற்குப் புறமாக முன்னேறிய 53ஆவது டிவிசனின் 5ஆவது விஜயபா காலாற்படைப்பிரிவு 11ஆவது அலகு காலாற்படையுடன் இணைப்பை ஏற்படுத்தியது. இப்போது சுமார் ஒரு சதுர கிலோ மீற்றர் பிரதேசத்துக்குள் புலிகள். அதனைச் சுற்றிய பகுதிகளில் படையினர். அதாவது படையினரின் சுற்றிவளைப்புக்குள் புலிகள் சிக்கிக் கொண்டனர்.

சுமார் 200 புலிகள் வரை இந்தப் பகுதிக்குள் சிக்கியிருக்லாம் என்று படைத்தரப்பு கணிப்பிட்டது. உள்ளே சிக்கியிருந்த புலிகளை சரணடையுமாறு தொடர்ச்சியாகப் படையினர் தொலைத்தொடர்பு சாதனம் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் அதற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து சண்டையிட்டனர்.

இதேவேளை படையினர் சுற்றிவளைக்கின்ற நிலை உருவானபோது படைத்தரப்பு யாருக்காகப் பொறி வைத்ததோ அவர்கள் அங்கிருக்கவில்லை. கேணல் பானு மற்றும் லோறன்ஸ் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் இராணுவத்தினரின் முற்றுகையில் இருந்து தப்பிக் கொண்டனர். இதனிடையே படைத்தரப்பு 200 புலிகள் வரை தமது முற்றுகைக்குள் சிக்கியிருக்கலாம் என்று கணிப்பிட்டிருந்தது. ஆனாலும் அவர்களில் குறைந்த அளவிலானோரின் சடலங்களே படையினரால் மீட்கப்பட்டிருக்கின்றன.

எஞ்சியோர் எங்கே? அவர்கள் தப்பிச் சென்றார்களா அல்லது இராணுவப் பிரதேசங்களுக்குள் ஊடுருவி விட்டார்களா என்று அறிவதற்குத் தேடுதல்கள் இடம்பெற்று வருகின்றன. முற்றுகையில் சிக்கிய புலிகளை மீட்கப் புலிகள் பெரியளவிலான ஊடறுப்புத் தாக்குதலை நடத்தலாம் என்று படைத்தரப்பு காத்திருந்தது. ஆனால் புலிகள் எதுவும் செய்யாமல் இருந்து விட்டனர்.

இதிலிருந்து முற்றுகைக்குள் பெருமளவு புலிகள் சிக்கவில்லை என்று கருதப்படுகிறது. இதற்கிடையே கடந்த புதன்கிழமை கடும்மோதல்கள் நடந்து கொண்டிருந்த போது 50 கலிபர் துப்பாக்கி பொருத்தப்பட்ட புலிகளின் பிக்கப் வாகனம் ஒன்று வழிமாறி இரணைப்பாலை படைநிலைகளுக்குள் புகுந்து விட்டது.

அதன் மீது படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தச் சம்பவத்தில் அதில் வந்த புலிகள் கொல்லப்பட அந்த வாகனத்தையும் 50 கலிபர் துப்பாக்கியையும் படையினர் கைப்பற்றினர். இதற்கிடையே பச்சைப்புல்மோட்டைப் பகுதியில் தாக்குதல் நடத்துவதற்காக 130மி.மீ ஆட்டிலறி ஒன்றைப் புலிகள் கொண்டு சென்றபோது விமானப்படையின் கிபிர் போர் விமானங்கள் தாக்கியழித்தன. இந்த ஆட்டிலறியைச் சேதமடைந்த நிலையில் படையினர் பின்னர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த ஓரிரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் சண்டைகள் மிகவும் உக்கிரமானதாகவும் பலத்த இழப்புகளை ஏற்படுத்துவதாகவும் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே புலிகளின் ஊடுருவல் அணிகளைத் தேடியழிக்கின்ற நடவடிக்கையில் படைத்தரப்பு தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.

கடந்த 31ஆம் திகதி கொக்காவில் பகுதியில் 63ஆவது டிவிசன் படையினருக்கும் புலிகளின் அணியொன்றுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் படையினர் தரப்பில் இழப்புகள் ஏற்பட புலிகள் தப்பிவிட்டனர். அதேவேளை விசுவமடுவை அடுத்த பிரமந்தனாறு பகுதியில் கடந்த வியாழக்கிழமை காலை 11.45 மணியளவில் புலிகளின் அணியொன்றின் நடமாட்டத்தை அவதானித்த 57ஆவது டிவிசன் படையினர் பதுங்கியிருந்து தாக்கினர்.

இந்த மோதலின் பின்னர் புலிகள் சிலர் தப்பிவிட தேடுதல் நடத்திய படையினர் 3 புலிகளின் சடலங்களைக் கைப்பற்றினர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது பிரதான சண்டைகள் பாதுகாப்பு வலயத்தை அண்டியதாக நடைபெறத் தொடங்கியுள்ளன.

59, 53, 68, 58, 55 ஆகிய டிவிசன்கள் பாதுகாப்பு வலயத்துடன் நெருங்கி நிற்கும் நிலையில் அடுத்த கட்டச் சமர் பாதுகாப்பு வலயத்துக்குள்ளே தான் நடக்க வேண்டும். படைத்தரப்பு அடுத்தாக பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் தாக்குதல் நடத்தப் போகிறதா? அல்லது பாதுகாப்பு வலயத்தை முற்றுகையிட்டு ஒரு நீண்ட முற்றுகைச் சமரின் மூலம் புலிகளைத் தோற்கடிக்கப் போகிறதா? என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.

பாதுகாப்பு வலயத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினால் அது மிகப்பெரும் மனித அவலங்களைத் தோற்றுவிக்கும். சர்வதேச ரீதியாக அரசாங்கத்துக்கு பெரும் நெருக்கடியாக உருவெடுக்கும்.

அதேவேளை நீண்ட முற்றுகைச் சமர் என்பது அரசாங்கத்தின் அடுத்த தெரிவாக இருக்கும் என்று நம்ப முடியவில்லை. காரணம் புலிகளுக்கு மூச்சுவிடக் கூட நேரக் கொடுக்காமல் முற்றாக அழிக்க வேண்டும் என்பதே அரசதரப்பின் நோக்கம்.

பாதுகாப்பு வலயத்துக்கு வெளியே புலிகளைச் சண்டைக்கு இழுத்து முற்றாக அழிப்பதும் சாத்தியமில்லை. ஆக, இப்போது பாதுகாப்பு வலயமே உக்கிரமான இறுதிச் சண்டைக்கான கொலைக்களமாக மாறும் நிலை உருவாகியிருக்கிறது.

நன்றி
வீரகேசரி வாரவெளியீடு

2 comments:

உலவு.காம் (ulavu.com) said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ....

இவண்
உலவு.காம்

♠புதுவை சிவா♠ said...

உலவு.காம் வணக்கம்

தங்கள் தளத்தில் இனைந்து விட்டேன்
தங்கள் ஆதரவுக்கு நன்றி.