இலங்கை இனப் பிரச்சனையை தீர்க்க எங்களால் மட்டுமே முடியும் என்று பாஜகவின் தமிழ் மாலில துணைத் தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பேட்டையில் ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய எச்.ராஜா,
இலங்கை இனப்பிரச்சனையை தீர்க்க பாஜகவால் மட்டுமே முடியும். வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் சர்வத்சிங் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தார். அவர் இலங்கையில் மூன்று நாட்கள் தங்கி, பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தம் செய்தார்.
ஆனால் இப்போது உள்ள வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இலங்கைக்கு போனவுடனேயே திரும்பி வந்துவிட்டார். போன வேகத்தில் திரும்பி வந்தவர் தமிழர்கள் பற்றி என்ன பேசியிருக்க முடியும். போர் நிறுத்தம் செய்யப்படவே இல்லை.
மூன்று லட்சம் தமிழர்கள் வன்னி காடுகளில் பசி, பட்டிணியால் வாடுகிறார்கள். அவர்களை சந்தித்தாரா? ஏன் தமிழர்களை பார்க்காமல் திரும்பி வந்தார்.
வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், அவரது தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. அதில் போர் நிறுத்தத்திற்கு முடிவு செய்தார். அதில் காங்கிரஸ் தலைவர் சோனியாவும் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்து வெளியே வந்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்த வாஜ்பாய், தமிழர்களை அழிக்க இலங்கைக்கு ஆயுதம் அனுப்ப மாட்டோம் என்று உறுதியாக சொன்னார்.
அதன்படி கடைசி வரை ஆயுதம் கொடுக்கவில்லை. ஆனால் இப்போதுள்ள காங்கிரஸ் அரசு 760 பொறியாளர்களை இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ளது. அதில் இரண்டு பொறியாளர்கள் போரில் இறந்த பின்புதான் இந்த உண்மையே நமக்கு தெரியவருகிறது.
ஆகவேதான் இலங்கை பிரச்சனை தீர பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என்கிறோம் என்றார்.
நன்றி
நக்கீரன்
Headline
ஈழப்பிரச்சனையை தீர்க்க எங்களால் மட்டுமே முடியும்: பாஜக
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment