Headline

17 ஆண்டு பழைய ரஜினி படம், இப்போது தமிழில்




ஒருபக்கம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா… இன்னொரு பக்கம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இடையில் 'அரசன்- தி டான்' என்ற வாசகங்கள் பொறித்த போஸ்டர்கள் சென்னை நகரம் முழுக்க கலக்கி வருகின்றன இந்த ஒரு வாரமாக...

ரஜினி எப்போது இந்த 'புதிய படத்தில்' நடித்தார் என்ற கேள்வியோடு ரஜினி ரசிகர்கள் பல இடங்களிலும் மேல் தகவலுக்காக விசாரித்த வண்ணமிருந்தனர். ஆனால் ஒருவருக்கும் விஷயம் தெரிந்தபாடில்லை. அந்த அளவு ரகசியம் காத்து வந்தார் இந்தப் படத்தின் 'தயாரிப்பாளர்' குளஞ்சியப்பன்.

அவரிடம் விசாரித்தோம். அவர் கூறியதிலிருந்து...

தொன்னூறுகளின் ஆரம்பத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளியான இந்திப் படமான 'கூன் கா கர்ஸ்' ('ரத்தத்தின் கடன்') தான் இந்த 'அரசன்-தி டான்'.

இந்தப் படத்தை அரசன்- தி டான் என தமிழில் வெளியிடுகிறோம். ரஜினி சாரின் மிகச்சிறந்த ஆக்ஷன் காட்சிகள் மக்களைக் கவரும் என்பதாலும், அவரது ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதாலும் இந்தப் படத்தை இப்போது வெளியிடுகிறோம்.

இந்தப் படத்துக்கு ஒரு பக்கம் ஒபாமா, மறுபக்கம் ரஜினி சார் படங்களை வைத்து பெரிய அளவில் போஸ்டர்கள் அடித்திருந்தோம். இன்னும் பிரமாண்டமாக பேனர்கள் வைக்கப் போகிறோம். ஒரு புதுப்படத்துக்கான அத்தனை ஏற்பாடுகளுடனும் இந்தப் படத்தை வெளியிடுகிறோம்.

சரி… இந்தப் படம் ஒரு மொழிமாற்றுப் படம் என்பதைச் சொல்லி விட்டீர்களா ரசிகர்களிடம்?

இது அவர்களுக்கே தெரியும் (!!!!). நாங்கள் ரசிகர்களை ஏமாற்றவில்லை. இந்தப் படத்தை அவரது தீவிர ரசிகர்கள் நிச்சயம் பார்த்திருப்பார்கள்.

இன்னொன்று விரைவில் பிரஸ் மீட் வைத்து இந்தப் படம் குறித்து அறிவிக்கப் போகிறோம். அப்போது விரிவாக சொல்லிவிடுவேன், என்றார். மார்ச் மாதம் படம் வெளியாகிறதாம்.

முகுல் எஸ் ஆனந்த் (குதா கவா போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தவர்) இயக்கியுள்ள இந்தப் படத்தில் ரஜினிகாந்த், வினோத் கன்னா, சஞ்சய் தத் என மூன்று ஹீரோக்கள். இந்திப் படம் என்பதால் வினோத் கன்னாவுக்கு கொஞ்சம் கூடுதல் முக்கியத்துவம் இந்தப் படத்தில்.

டிம்பிள் கபாடியா, கிமி கட்கர் மற்றும் சங்கீதா பிஜ்லானி என மூன்று நாயகிகள். வில்லனாக காதர் கான் நடித்திருந்தார். படத்தின் கதை பக்கா மசாலாவாக இருந்தாலும் சுவாரஸ்யமானது.

தளபதி படம் வெளியான காலத்தில் தயாரான படம் இது. எனவே ரஜினியின் லுக்ஸ் தளபதி படத்தில் இருந்ததைப் போலவே இந்தப் படத்திலுமிருக்கும்.

நன்றி
- தட்ஸ்தமிழ்

0 comments: