Headline

அதிரடி ராணுவம்: எதிரடி சர்தாரி:பாக்.பதட்டம்



பாகிஸ்தானில் பெனாசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சி ஆட்சி நடந்து வருகிறது. பெனாசிர் கட்சி ஆட்சி அமைத்தபோது அதற்கு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லிம் லீக் கட்சி ஆரவு தெரிவித்தது.


ஆனால் இடையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நவாஸ்ஷெரீப் ஆதரவை விலக்கி கொண்டார்.

அதன் பிறகு சர்தாரிக்கும், நவாஸ் ஷெரிப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. நவாஸ்ஷெரீப் மீது சர்தாரி பழி வாங்கும் நடவடிக்கைகளை தொடங்கினார்.

இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் அவரது தம்பியும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட தடைவிதித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.



அவரது தம்பி பஞ்சாப் மாகாணத்தில் முதல்-மந்திரியாக இருந்தார். அவரது வெற்றியும் செல்லாது என்று தீர்ப்பில் கூறப்பட்டது. இதனால் பஞ்சாப் மாகாண அரசை அதிபர் சர்தாரி டிஸ்மிஸ் செய்தார்.

சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு அதிபர் சர்தாரிதான் காரணம் என்று நவாஸ்ஷெரீப் குற்றஞ்சாட்டியுள்ளார்.



முன்பு நவாஸ் ஷெரீப் பிரதமராக இருந்தபோது ராணுவ புரட்சி மூலம் முஷரப் ஆட்சியை கைப்பற்றினார். அப்போது சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி உள்பட பலரை நீக்கி விட்டு புதிய நீதிபதிகளை நியமித்தார்.


அவர்கள்தான் இந்த ஆட்சியிலும் நீடித்து வந்தனர். அவர்களை நீக்கி விட்டு முன்பு இருந்த நீதிபதிகளையே நியமிக்க வேண்டும் என்று ஏற்கனவே நவாஸ் ஷெரீப் வற்புறுத்தி வந்தார்.


ஆனால் இதை சர்தாரி ஏற்கவில்லை. எனவே சர்தாரி தூண்டி விட்டுதான் இந்த நீதிபதிகள் அவருக்கு எதிராக தீர்ப்பு கூறியதாக குற்றஞ்சாட்டினார்.

சர்தாரியின் போக்கை கண்டித்தும், பழைய நீதிபதிகளையே மீண்டும் நியமிக்க வற்புறுத்தியும் கராச்சியில் இருந்து இஸ்லாமாபாத்துக்கு பேரணி நடத்த போவதாக நவாஸ்ஷெரீப் அறிவித்தார்.

பேரணியை இன்று கராச்சியில் தொடங்கி 16-ந்தேதி இஸ்லாமாபாத்தில் முடிவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. அங்கு பாராளுமன்றத்தை முற்றுகையிடப் போவதாகவும் அறிவித்து இருந்தனர். இந்த போராட்டத்துக்கு வக்கீல்களும் ஆதரவு தெரிவித்தனர்.

இதனால் பாகிஸ்தானில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் பதட்ட நிலை உருவானது. எனவே நிலைமையை 16-ந்தேதிக்குள் சீர் செய்யும்படி ராணுவ தளபதி ஹியானி சர்தாரியை சந்தித்து எச்சரித்தார். இல்லை என்றால் ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மிரட்டியுள்ளார். எனவே தளபதி ஹியானி ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் அதிபர் சர்தாரி ஈரானில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காக டெக்ரான் சென்றார். நவாஸ்ஷெரீப் போராட்டம் முடியும்வரை அவர் நாடு திரும்பமாட்டார். ஈரானில் இருந்து துபாய் சென்று அங்கு தங்கி இருக்க போகிறார் என்று கூறப்பட்டது.

சர்தாரியை நாடு திரும்ப கூடாது என்று ராணுவ தளபதி தடை விதித்து இருப்பதாக இன்னொரு தகவல் தெரிவித்தது. இதனால் பாகிஸ்தானில் உச்சகட்ட அரசியல் கொந்தளிப்பு நிலை ஏற்பட்டது.

நவாஸ்ஷெரீப் பேரணியின் தொடக்கமாக நேற்று அபோதாபாத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசினார். அப்போது சர்தாரி அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். இன்று பேரணி தொடங்குவதை அடுத்து நேற்று இரவோடு இரவாக எதிர்கட்சி தலைவர்கள் பலரை கைது செய்தனர். நவாஸ்ஷெரீப் கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.



நவாஸ் ஷெரீப்பையும் வீட்டுக் காவலில் வைத்து இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படவில்லை. அரசியல் கட்சி நடத்தும் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானை கைது செய்ய போலீசார் சென்றனர். அவர் தலைமறைவாகிவிட்டார்.

இதனால் நிலைமை இன்னும் மோசமானது. நாடு திரும்பமாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்ட அதிபர் சர்தாரி நேற்று இரவோடு இரவாக இஸ்லாமாபாத் திரும்பினார்.

அவர் உடனடியாக பிரதமர் கிலானியை அழைத்து தற்போதைய நிலைமை குறித்து ஆலோசனை நடத்தினார். முஷரப் ஆதரவு கட்சியான முஸ்லிம்லீக் (கியூ) தலைவர்களையும் அழைத்து பேசினார்.

நிலைமை மோசமாகி வருவதால் தளபதி ஹியானி ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றலாம் என்று சர்தாரி எதிர்பார்க்கிறார்.

இதற்கு இடம் கொடுக்காமல் நவாஸ் ஷெரீப்புடன் சமரசமாக சென்றுவிடவும் அவர் முயற்சித்து வருகிறார். பஞ்சாபில் கவர்னர் ஆட்சியை வாபஸ் பெற்று மறுபடியும் நவாஸ் ஷெரீப் தம்பி ஆட்சி அமைக்க உதவவும் அவர் தயாராக இருக்கிறார்.

இதை பிரதமர் கிலானி வெளிப்படையாகவே அறிவித்து உள்ளார். பஞ்சாபில் கவர்னர் ஆட்சி நீண்ட நாள் இருக்காது. யாருக்கு மெஜாரிட்டி இருக்கிறதோ அவர்கள் ஆட்சி அமைக்கலாம் என்று கூறினார். இதன் மூலம் நவாஸ்ஷெரீப்பை சமாதானப்படுத்தி விடலாம் என்று நினைக்கிறார்க்ள.

ஆனால் நவாஸ்ஷெரீப் திட்டமிட்டப்படி பேரணியை நடத்துவதிலேயே குறியாக இருக்கிறார். பேரணி இஸ்லாமாபாத் வரும்போது அங்கு பெரும் கொந்தளிப்பு ஏற்படலாம்.

இதை பயன்படுத்தி தளபதி ஹியானி ராணுவ புரட்சியை ஏற்படுத்திவிடுவார் என்றே பாகிஸ்தான் மக்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.

நன்றி
நக்கீரன்

0 comments: