Headline

இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித்தானே ஆக வேண்டும்:கலைஞரின் டைரி குறிப்புகள்


ராமச்சந்திரா மருத்துவமனையில் முதல்வர் கருணாநிதிக்கு அளிக்கப்பட்ட சிசிச்சைகள், அனுபவங்களை முதல்வர் தொடர்ந்து எழுதி வருகிறார்.


அவர் வெளியிட்ட மருத்துவமனை டைரி குறிப்புகள்:


6-2-2009: மாயவரம் காந்தி என் இளமைக் கால நண்பர். கழகத் தோழர். அவர் இப்போது இல்லை. காந்திக்கு சம்பத், கருணாநிதி என்று இரண்டு புதல்வர்கள்.


சம்பத் இப்போது பால் வளத் துறை அமைச்சரின் உதவியாளர். அவர் மகளுக்கு என் இல்லத்தில் இன்று திருமணம் செய்து வைப்பதாக ஒப்புக் கொண்டிருந்தேன். மணமக்களுடன் மருத்துவமனைக்கே வந்து திருமணத்தை நடத்தி வைக்கக் கேட்டுக் கொண்டார். படுக்கையில் இருந்தவாறே நடத்தி வைத்தேன்.


என் துணைவியர் தயாளு, ராஜாத்தி ஆகியோரும், மகள்களும் செவிலியர்களாக இருந்து கவனித்துக் கொண்டார்கள். செல்வி பெங்களூரையே மறந்து விட்டு இரவு முழுவதும் தூங்காமல் மருத்துவமனையிலேயே தங்கி என் கோபத்தையெல்லாம் தாங்கிக் கொண்டது.


கனி நேரம் கிடைக்கின்ற போதெல்லாம் எனக்குத் துணையாக இருந்தது. என் மருமகள்கள் பகல் நேரங்களில் மருத்துவமனை வந்து மாமியாருக்கு உதவியாய் இருந்தனர். மு.க. அழகிரி, மு.க. ஸ்டாலின், மு.க. தமிழரசு ஆகியோரும் மருத்துவமனையிலே தங்கியிருந்தனர்.


முதுகுத் தண்டில் ஊசி போடுவதற்காக இடையில் நிறுத்தப்பட்டிருந்த மாத்திரையை மீண்டும் கொடுக்கத் தொடங்கினார்கள். மதியம் 2 மணி அளவில் கடுமையான வலி. பொறுத்துக்கொள்ள இயலவில்லை. மீண்டும் ஒரு முறை எம்.ஆர்.ஐ. எம்.ஆர்.ஐ. எடுக்கப்பட்டது.


எல்.2 எல்.3 இடையே விலகியிருந்த டிஸ்கின் நீளம் மேலும் அதிகமாகியிருந்தது. அதுதான் வலி அதிகமானதற்குக் காரணம் என்று மருத்துவர்கள் விளக்கினர். அதனை குணம் ஆக்குவதற்கு முதுகுத் தண்டில் அறுவை சிகிச்சை ஒன்றுதான் வழி என்றார் டாக்டர் மார்த்தாண்டம். டாக்டர் மோகன்தாசை அழைத்து கேட்டபோது, அவரும் அதையே சொன்னார்.


குடும்பத்தாரை அழைத்து என் வயதை எண்ணிடும்போது இந்த அறுவை சிகிச்சை மிகவும் அபாயகரமானது. ஆனால் வலியைப் போக்க வேறு வழியில்லை என்று மருத்துவர்கள் கூறினர். குடும்பத்தார் இந்த விஷயங்களையெல்லாம் என்னிடம் சொல்லாமல், அறுவை சிகிச்சை மிகவும் சாதாரணமானது; பயப்படுவதற்கு ஒன்றுமில்லை; செய்து கொள்ளலாம் என்று என்னை சமாதானப்படுத்தினர்.


குறிப்பாக கலாநிதி மாறன் ‘இதிலே பயப்படுவதற்கு ஒன்றுமில்லை தாத்தா; செய்து கொள்ளலாம்’ என்று அவருடைய தந்தையைப் போலவே கூறினார். அவர்களின் வாய்கள்தான் எனக்கு சமாதானம் கூறின. என்றாலும் அத்தனை பேருடைய முகங்களையும் ஒரு முறை பார்த்தவுடனேயே உண்மையைப் புரிந்து கொண்டேன்.


நான் ஏதாவது விசாரித்தால், ஒவ்வொருவருடைய விழிகளிலிருந்து விழ கண்ணீர் காத்திருந்ததை புரிந்து கொள்ள முடிந்தது. சாதாரண அறுவை சிகிச்சைதானே, ஏன் பயப்படுகிறீர்கள் என்று நானே அவர்களுக்கு ஆறுதல் கூறியதோடு, ‘அறுவை சிகிச்சைக்குத் தயார். எப்போது வைத்துக் கொள்ளலாம்?’ என்றும் கேட்டேன்.


நரம்பியல் டாக்டர் ஏ.வி. சீனிவாசன், டெலி-மெடிசின் மூலமாக அமெரிக்காவில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனையுடன் தொடர்பு கொண்டு அறுவை சிகிச்சை பற்றிய விவரங்களை அறிந்தார். இறுதியாக, டெல்லியிலே உள்ள டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வாலை வரவழைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.


தயாநிதி மாறன் உடனடியாக, மத்திய அமைச்சர் அன்புமணியிடம் தொடர்பு கொண்டு, டாக்டர் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைக்க கேட்டுக் கொண்டார். அடுத்த நாளே டாக்டர் ஜெய்ஸ்வாலை சென்னைக்கு அனுப்பி வைப்பதாக அன்புமணி தகவல் அனுப்பினார்.


7-2-2009: அன்று மாலை டெல்லியிலிருந்து டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் ராமச்சந்திரா மருத்துவமனை வந்தார். அவரும் டாக்டர் மார்த்தாண்டமும் வலி எதுவரை பரவியுள்ளது என்று கேட்டனர். இது தை மாதம் அல்லவா, எனவே என் தை (தொடை) வரை நீடிக்கிறது என்று சிரித்துக் கொண்டே கூறினேன்.


டாக்டர் மார்த்தாண்டம் தலைமையில் டாக்டர் தணிகாசலம் (இருதய நிபுணர்), டாக்டர் அரவிந்த் ஜெய்ஸ்வால் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் கோபால் (குடும்ப டாக்டர்), டாக்டர் கார்த்திக் கைலாஷ் (முதுகெலும்பு நிபுணர்), டாக்டர் ஏ.எஸ். நாயுடு (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் மகேஷ் வகாமுடி (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் ஏ.வி. சீனிவாசன் (நரம்பியல் நிபுணர்), டாக்டர் கே.ஆர். பழனிசாமி (குடல் மற்றும் இரைப்பை நோய் நிபுணர்), டாக்டர் ராஜ் பி. சிங் (நுரையீரல் நிபுணர்), டாக்டர் மயில்வாகனன் (எலும்பு சிகிச்சை நிபுணர்), டாக்டர் சண்முகம் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் பாஸ்கர் (மயக்க மருந்து நிபுணர்), டாக்டர் சவுந்தரராசன் (சிறுநீரகவியல் நிபுணர்) ஆகிய 14 பேரைக் கொண்ட மருத்துவர்கள் குழு அமைக்கப்பட்டது.


அறுவை சிகிச்சையை ராமச்சந்திரா மருத்துவமனையிலே 11ம் தேதி செய்யலாம் என்றும், ஜெய்ஸ்வால் 10ம் தேதியே சென்னை வந்துவிட வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.


மத்திய உள் துறை அமைச்சர் ப. சிதம்பரம் மருத்துவமனைக்கு இன்று வந்திருந்தார். சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவுக்கு ஏற்கனவே என்னிடம் தேதி பெற்றிருந்தார். மருத்துவமனையில் இருந்தவாறே வீடியோ கான்பரன்ஸ் மூலம் நான் அடிக்கல் நாட்டவேண்டு மென்று கூறினார். நானும் ஒப்புதல் அளித்தேன்.


8-2-2009 : இலங்கைப் பிரச்சினையிலே மட்டுமாவது ஒற்றுமையாக இருக்க வேண்டுமென்று எழுதியிருந்தேன். அந்த வேண்டுகோளை அலட்சியப்படுத்தியதோடு, என்னை சிலர் மிகவும் இழிவுபடுத்தி பேசியும், எழுதியும் இருப்பதை காலை ஏடுகளில் காண நேர்ந்தது. அவர்கள் தூற்றியிருப்பதை என் உடல் தாங்குகிறதோ இல்லையோ இலங்கைத் தமிழர் வாழ்வில் பள்ளம் ஏற்படாமலிருக்க, என் உள்ளம் தாங்கித் தானே ஆக வேண்டுமென்று எழுதினேன்.


ஜெயலலிதா விடுத்த நீண்ட அறிக்கையில் விவசாயிகளுக்காக கழக ஆட்சியில் குறிப்பாக நான் எதுவும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியிருந்தார். ஜெயலலிதாவின் அறிக்கைக்கு விரிவாக பதில் எழுதி, ஏடுகளுக்கெல்லாம் அனுப்பச் செய்தேன்.


இதற்கிடையே, ஜெய்ஸ்வால் அறிவுரைப்படி, நரம்பின் செயல் திறனைக் கண்டறிவதற்கான சோதனை யை நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் இன்று மேற்கொண்டார். இதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேலானது.


தஞ்சை சுல்தான் மறைந்த செய்தி கேட்டு மிகவும் வருந்தி, என் கைப்பட இரங்கல் செய்தி எழுதிக் கொடுத்தேன்.


மத்திய அமைச்சர் அன்புமணி வந்து உடல் நலம் விசாரித்தார்.


9-2-2009: தொடர்ந்து 24 மணி நேரத்திற்கு இதயத் துடிப்பு எவ்வாறு உள்ளது என்பதைக் கண்டறிவதற்காக ஒரு இயந்திரத்தை என் உடலிலேயே பொருத்திவிட்டார்கள். அது மறுநாள்தான் அகற்றப்பட்டது. இதயத் துடிப்பு சீராக இருக்க மாத்திரை தரப்பட்டது.


நிதித் துறை செயலாளரையும் அதிகாரிகளையும் மருத்துவமனைக்கு அழைத்து நிதிநிலை அறிக்கை தயாரிப்பது குறித்து அன்று விவாதித்தேன். காலை 10.45 மணிக்கு தொடங்கிய கூட்டம், நண்பகலைத் தாண்டியும் நீண்டது. டாக்டர்கள் வந்து பரிசோ தனைகளைச் செய்யவும் மாத்திரைகள் சாப்பிடவும் நேரமாகி விட்டது என்பதை நினைவூட்டினர்.


நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் மாலையிலும் தொடர்ந்தது. முக்கிய கோப்புகளை வரவழைத்து கையெழுத்திட்டேன்.


10-2-2009: காலை ஏடுகளை படித்தேன். ஆட்சியை விட்டே விலகினால்தான் இலங்கை பிரச்னையில் யன் ஏற்படும் என்று என்மீது மிகுந்த அக்கறையோடு வழக்கம்போல் ஒரு தலைவர் அறிக்கை விட்டிருந்தார். அதே தலைவர், தி.மு.க. ஆளுங்கட்சியாக இருந்தபோது இல்ங்கை தமிழருக்காக எதையும் செய்யவில்லை என்றும் எழுதியிருந்தார். ஆளுங்கட்சியாக இருந்தபோது தி.மு.க. செய்தது பற்றிய பட்டியலை ஏடுகளுக்கு அனுப்பச் செய்தேன்.


மலையில், சோனியா காந்தி தொலைபேசியில் என்னை தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். விரைவில் நலம் பெற வாழ்த்தினார்.


மாலையில் மயக்க மருந்து நிபுணர், டாக்டர் மகேஷ் வகாமுடி தலைமையில் மருத்துவ குழுவினர் என்னைப் பரிசோதனை செய்தனர். கிருமி தொற்று வராமல் இருப்பதற்காக அன்று மாலையிலிருந்தே நரம்பு மூலம் செலுத்தப்படும் ஊசி மருந்து ஆரம்பிக்கப்பட்டது. மறுநாள் அறுவை சிகிச்சை என்பதால், வீட்டாரும், மருத்துவர்களும் கூட முகமூடி அணிந்த பிறகே என் அருகே வர அனுமதிக்கப்பட்டனர்.


விடிந்தால் அறுவை சிகிச்சை என்பதால் மதுரையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருந்த நிலையிலும் என் மகன் அழகிரி சென்னை வந்து மருத்துவமனையிலேயே தங்கினார். ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் எல்லாம் அங்கேயே தங்கிவிட்டனர்


நன்றி
நக்கீரன்

3 comments:

Anonymous said...

இந்த மருத்தவமனை கதையை எல்லாம் நமக்கு சொல்வதன் மூலம் இந்தாள் என்னதான் சொல்ல வருகிறார் என்றே புரியவில்லையே?

இலங்கை பிரச்சனையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் உடல்நிலையை பார்த்தாவது ஓட்டுக்களை தனக்கே போட வேண்டும் மறைமுகமாக தந்திரமாக கேஞ்சுகிராரா?

puduvaisiva said...

"இந்த மருத்தவமனை கதையை எல்லாம் நமக்கு சொல்வதன் மூலம் இந்தாள் என்னதான் சொல்ல வருகிறார் என்றே புரியவில்லையே?

இலங்கை பிரச்சனையெல்லாம் புறந்தள்ளிவிட்டு தன் உடல்நிலையை பார்த்தாவது ஓட்டுக்களை தனக்கே போட வேண்டும் மறைமுகமாக தந்திரமாக கேஞ்சுகிராரா"

வாங்க விவேக்

கலைஞரின் அறிக்கை இப்பொழுது எல்லாம் குழப்பத்தின் உச்ச நிலை பெற்று இருக்கிறது.

1.அண்ணா காலத்தில் செய்ததை சொல்வது.
2.தவறு என்றால் அது ஜெயலலிதா இருந்த பொது நடந்தது என்பார்.

puduvaisiva said...

newspaanai.com

தங்கள் தகவளுக்கு நன்றி
விரைவில் இனைகிறேன்