Headline

தேர்தல் வந்தது..உண்ணாவிரதமும் வந்தது-கருணாநிதி



மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வந்ததால் தான் தா.பாண்டியன் பக்க மேளம் வாசிக்க, நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர, இலங்கை பிரச்சனைக்காக ஜெயலலிதா உண்ணாவிரதம் இருக்கிறார் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய அரசில் அங்கம் வகித்து அதன் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இருக்கும் திமுகவும்- பாமகவும் தமிழகத்தில் மட்டும் இலங்கைப் பிரச்சினை விஷயத்தில் நீலிக் கண்ணீர் வடிப்பது ஏன்? என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், அக்கட்சியின் தேசிய செயலாளருமான ராஜா பேசியிருக்கிறார்.

என் செய்வது; திமுக- பாமக ஆகிய இரண்டு கட்சிகளின் ஆதரவு பெற்று ராஜ்ய சபாவுக்குள் நுழைந்தவர்; இதுவும் பேசுவார் -இன்னமும் பேசுவார்!.

மத்திய அரசுக்கு திமுகவும், பாமகவும் ஆதரவு கொடுப்பது பற்றி ஆதங்கப்பட்டுள்ளார். தோழமைக் கட்சிகளுக்கு துரோகம் விளைவிப்பது எப்படி என்பதை இவரிடம் கற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஜெயலலிதாவின் மேடையில்- கையாலாகாத கருணாநிதி ஆட்சித் திறமையின்மை என்றெல்லாம் திட்டிய வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

இதிலிருந்து என்ன தெரிகிறது? ஜெயலலிதாவிற்கும், அவருடைய கட்சியினருக்கும் கோபம் என் மீதுதான் என்றும்- இலங்கைத் தமிழர் பிரச்சினை பற்றியோ, சிங்கள அரசைப் பற்றியோ, மத்திய அரசைப் பற்றியோ அவர்களுக்கு கவலையோ கோபமோ இல்லை என்றும் தெரிகிறது அல்லவா?.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் வெளியாகும் என்பார்கள், அம்மையாரின் புளுகு ஒரே நாளில் வெட்ட வெளிச்சமாகி விட்டது; அதுவும் அந்த உண்ணாவிரத மேடையிலேயே!.

உண்ணாவிரதம் இருக்கும் ஒவ்வொரு மேடையிலும் இலங்கைத் தமிழர்களுக்காக நிதி திரட்ட உண்டியல் வைக்கப்படும். அவரவர் சக்திக்கு ஏற்ப தங்களால் முடிந்த நிதி உதவியை அந்த உண்டியலில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்-ஜெயலலிதா அறிக்கை.

தமிழக அரசின் சார்பில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு நிதிக்காக என்று உண்டியல் மூலமாக அல்ல- காசோலையாக மட்டுமே பெற்றுக் கொள்ளப்படும் என்று கூறி- ஒவ்வொரு காசோலையை வழங்கியவரின் பெயரும் ஏடுகளில் அறிவிக்கப்பட்டு- அந்தத் தொகை முழுவதும் அரசின் நிதித்துறை மூலமாக வரவு வைக்கப்பட்டு- ரசீதுகளும் வழங்கப்பட்டபோது- அந்த நிதியை நான் என் குடும்பத்திற்குச் சொந்தமாக்கி விட்டதாக அறிக்கை விடுத்தது இதே ஜெயலலிதாதான்.

'ஜகா' வாங்கிய ஜெ:

அதை எதிர்த்து வழக்கறிஞர் மூலமாக நோட்டீஸ் அனுப்பப்பட்டபோது நான் அவ்வாறு கூறவில்லை, மக்கள் பேசிக் கொண்டதைத்தான் சொன்னேன் என்று தன் வழக்கறிஞர் மூலமாக ஜகா வாங்கியதும் இதே ஜெயலலிதாதான்.

மனிதாபிமான அடிப்படையில் இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக உதவி புரிய நடவடிக்கை எடுக்கத் தவறியதைத்தான் மாபெரும் தோல்வி என்று சுட்டிக் காட்டுகிறேன். மத்திய அரசும், மாநில அரசும் தமிழ் மக்களின் மேல் உண்மையான அக்கறை செலுத்தவில்லை- உண்ணாவிரதத்திற்கு முன் ஜெயலலிதா விடுத்த அறிக்கை.

15-10-2008 அன்று ஜெயலலிதா இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக ஒரு அறிக்கை விடுத்தார். அந்த அறிக்கையில் இலங்கையில் தற்போது நடக்கும் உள்நாட்டுப் போரை நிறுத்துவதற்கான அதிகாரம், இந்திய அரசிடம் இல்லை என்றும், இலங்கை உள்நாட்டு விஷயத்தில் இந்திய அரசு தலையிட்டால் பின்னர் நம் நாட்டு உள் விவகாரத்தில் அண்டை நாடுகள் தலையிடுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டு, அது இந்திய இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பதாக அமையும், அடுத்த நாட்டின் உள்விவகாரத்தில் தலையிடுவதை உலக நாடுகள் ஏற்றுக் கொள்ளாது என்று முழங்கினார்.

தா.பாண்டியன் பக்க மேளம்:

ஆனால் அப்போது தேர்தல் ஒன்றுமில்லை; அதனால் பாண்டியன் பக்க மேளம் வாசிக்க- நல்லகண்ணுக்கள் நால்வகைப் படையுடன் உடன்வர; இப்போது இலங்கை மீது ஜெயா பாய்வதற்குக் காரணம் நாடாளுமன்றத் தேர்தல் வந்துவிட்டது என்ற அறிவிப்பு அல்லவா!.

வைகோ மீது தாககு:

இலங்கைத் தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு மத்திய அரசை வழி நடத்தும் சோனியா காந்தியே காரணம். இதற்கு முதல்வர் கருணாநிதியும் உடந்தை- நாஞ்சில் சம்பத் பேசியதில் எந்தத் தவறும் இல்லை- இது வைகோ.

உலகில் எந்தவொரு நாட்டின் விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத வகையில் போர்க்களத்தில் பெண்கள் ஆயுதம் ஏந்தி போராடுவது பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் இயக்கத்தில்தான் என்றெல்லாம் பேசியிருப்பவர், சோனியா காந்தி மீதும் என் மீதும் குற்றம் சாட்டுவதில் எந்தவிதமான வியப்பும் இல்லை.

பரதனுக்கு டோஸ்:

கூட்டணி தொடர்பாக காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைமுக அழைப்பு விடுத்து காங்கிரஸ், திமுக இரண்டுக்குமே கலக்கத்தை ஏற்படுத்தி விட்டார் என்கிறார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி. பரதன். காங்கிரசுக்கு அழைப்பே விடவில்லை என்று ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளார்.

ஆனால் அவருடைய கூட்டணியிலே உள்ள நண்பர் பரதனோ மறைமுக அழைப்பு விடுத்ததாக சொல்கிறார். ஆனால் அந்த அறிக்கையால் காங்கிரசுக்கும், திமுகவிற்கும் கலக்கத்தை ஏற்படுத்தி விட்டதாக அவர் சொல்வதுதான் தவறு.

எங்களுக்கொன்றும் அவரது அழைப்பால் கலக்கம் இல்லை. உண்மையான கலக்கம் பரதனுக்குத்தான். காங்கிரசுக்கு எதிராக அவர்கள்தான் ஜெயலலிதா பக்கம் சென்றார்கள். அவர்களிடம் பேசிய பிறகுதான் ஜெயலலிதா காங்கிரசுக்கு அழைப்பு விடுத்தார். எனவே கலக்கம் அவர்களுக்குத்தானே தவிர எங்களுக்கு அல்ல.

கார்கில் போரில் உயிரிழந்த 11 தமிழர்களின் குடும்பத்தையும் நேரில் சென்று பார்த்த ஒரே தமிழ் தலைவராக உள்ளேன்- இது வைகோ.

கார்கில் போர் நடைபெற்றபோது தமிழகத்தின் சார்பில் 50 கோடி ரூபாயை வசூலித்து, அன்றைய பிரதமர் வாஜ்பாய் அவர்களின் கையில் ஒப்படைத்தது திமுக அரசுதான். அந்தப் போராட்டத்தில் இறந்த தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களின் குடும்பங்களுக்கு தமிழக அரசின் சார்பில் தலா இரண்டு லட்ச ரூபாய் நிதியும், அது தவிர அவர்களுக்கு வீடும் வழங்கப்பட்டது. ஆனால் அதைப் பெருமையாக கருதி திமுக சொல்லிக் கொள்வதில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி.

நன்றி
-தட்ஸ்தமிழ்

0 comments: