Headline

சிதம்பரத்தின் மீது ஷூ வீசியவருக்கு "லயன் ஆப் டெல்லி" - விருது !



டெல்லியில் இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து சீக்கியர்கள் மீது காங்கிரஸார் நடத்திய வெறியாட்டத்தில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மீது ஷூ வீசி எதிர்ப்பைக் காட்டிய சீக்கிய பத்திரிக்கையாளர் ஜர்னைல் சிங்குக்கு கனடாவில் சீக்கியர்கள் அமைப்பு விருதளித்து கெளரவித்துள்ளது.

டெல்லியில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது ப.சிதம்பரம் மீது தனது இரண்டு ஷூக்களையும் கழற்றி அடுத்தடுத்து வீசினார் ஜர்னைல் சிங். இருப்பினும் அது ப.சிதம்பரம் மீது படவில்லை.


இந்த சம்பவம் நடந்தபோது அவர் டைனிக் ஜாக்ரன் என்ற இந்தி நாளிதழில் பணியாற்றி வந்தார். இச்சம்பவத்திற்குப் பின்னர் அவர் அதிலிருந்து விலகி விட்டார். தற்போது ஐ அக்யூஸ்ட் என்ற நூலை ஜர்னைல் சிங் எழுதியுள்ளார்.

ப.சிதம்பரம் சம்பவத்திற்குப் பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசி வருகிறார் ஜர்னைல் சிங்.

சமீபத்தில் அவர் கனடா சென்றிருந்தார். அங்கு நடந்த சீக்கியர்கள் குறித்த திரைப்படங்கள் கலந்து கொண்ட வீல்ஸ் திரைப்பட விழாவின்போது, ஜர்னைல் சிங்குக்கு லயன் ஆப் டெல்லி என்ற விருதினை சீக்கியர்கள் வழங்கிக் கெளரவித்தனர்.

இதுகுறித்து ஜர்னைல் சிங் கூறுகையில், தொடர்ந்து பல கூட்டங்களில் பங்கேற்று வருகிறேன். சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் 25வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி வான்கூவரில் நடந்த மெழுகுவர்த்தி நிகழ்ச்சியில் தலைமையேற்றேன்.

இந்தூர், லூதியானா, சஹரன்பூர், டெல்லியில் நடந்த கூட்டங்களில் நீதி கேட்டுப் பேசினேன்.

எனக்கு அரசியல் ஆர்வம் கிடையாது. அதற்காக நான் இவ்வாறு பேசி வரவில்லை. 1984ம் ஆண்டு நடந்த சம்பவத்திற்கு இதுவரை சீக்கியர்களுக்கு நீதி கிடைக்கவில்லை. அதற்காகத்தான் குரல் கொடுத்து வருகிறேன்.

இந்த அநாகரீகச் சம்பவத்திற்குக் காரணமான குற்றவாளிகளை குற்றம் சாட்டி தற்போது நூல் எழுதியுள்ளேன். அரசியல் ரீதியாக அவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவர்கள் மீதான வழக்குகளை விட்டு விடக் கூடாது. சட்ட ரீதியாக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார் சிங்.

நன்றி
- தட்ஸ்தமிழ்

சார்லி சாப்ளின் ஷூ சாப்பிடும் சிரிப்பு

0 comments: