Headline

தீபாவளி திருடர்கள் - பொது மக்களே உஷார் !

Doggy man mask Pictures, Images and Photos
தீபாவளி சீசன் திருடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் பொருட்கள் வாங்கச்செல்லும் பொதுமக்களை உஷாராக இருக்கும்படி போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதனால் தீபாவளி பண்டிகை இப்போதே களைகட்ட தொடங்கி விட்டது. தீபாவளி போனஸ் பணத்தில் பொதுமக்கள் புத்தாடைகளும், நகைகளும் வாங்கி குவித்தவண்ணம் உள்ளனர். இதனால் கடைகளில் தினமும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் கூட்டத்தில் புகுந்து பொருட்களையும், நகைகளையும் திருடும் தீபாவளி சீசன் திருடர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை நகருக்குள் ஊடுருவி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Thief Pictures, Images and Photos
பஸ்களிலும், ரெயில்களிலும் பயணம் செய்யும் பொதுமக்களிடம் பணத்தை அபேஸ் செய்யும் `பிக்பாக்கெட்' கொள்ளையர்களும் அதிகளவில் நடமாடுகிறார்கள். இதனால் சென்னை நகரில் மக்களின் உடைமைகளை காப்பாற்றுவதற்காக போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளார். தியாகராயநகர், புரசைவாக்கம், பூக்கடை, மைலாப்பூர், வண்ணாரப்பேட்டை போன்ற மக்கள் கூடும் இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தியாகராயநகரை பொறுத்தமட்டில் தீபாவளி பண்டிகையையொட்டி பாதுகாப்புக்காக 600 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கமாண்டோ படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 100 பெண் போலீசார் கூட்டத்தோடு கூட்டமாக மாறுவேடத்தில் சுற்றுவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசேஷ போலீஸ் கட்டுப்பாட்டு அறையும் திறக்கப்பட்டுள்ளது. 23 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 9 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

துணை கமிஷனர் சம்பத்குமார், உதவி கமிஷனர் கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் ரோந்து படை ஒன்றும் ரோந்து சுற்றி வருகிறது. தீபாவளி திருடர்களின் புகைப்படங்கள் சென்னை நகரில் முக்கியமான இடங்களில் பொதுமக்களின் பார்வைக்காக டிஜிட்டல் பேனரில் வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு வாங்கும் நகை போன்ற பொருட்களை திருடர்களிடம் பறிகொடுத்துவிடாமல் பொதுமக்கள் உஷாராக இருக்க வேண்டும் என்று போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர். இதுவரை தீபாவளி திருடர்கள் 15 பேரை போலீசார் வேட்டையாடி பிடித்துள்ளனர். அவர்களில் 4 பேர் பெண்கள் ஆவார்கள்.

பிக்பாக்கெட் கொள்ளையர்களில் அதிகளவில் பெண்களும் இடம் பெற்றுள்ளனர். சிலர் கைகுழந்தைகளோடு சுற்றுகிறார்கள். பஸ்சில் பயணம் செய்யும்போது கைக்குழந்தையோடு நிற்கும் பெண்களிடம் இரக்கம் காட்டாமல் உஷாராக இருப்பது நல்லது.

நன்றி
-தினதந்தி

வடிவேலுவின் பிக்பாக்கெட்

0 comments: