Headline

சந்திராசாமி மீது காங்கிரஸ் அரசு குறி ?


ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் திடீர்த் திருப்பமாக பிரபல சாமி யாரான சந்திராசாமி மீது உச்ச நீதி மன்றத்தில் திடீர் பாய்ச்சல் காட்டியிருக் கிறார், அரசுத் தரப்பு வழக்கறிஞரான வாசீம் அகமது கதாரி.

வெளிநாடு செல்ல தனக்கு அனுமதி வழங்கும்படி கடந்த 26-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சந்திரசாமி அனுமதி கேட்க, 'இவர் ராஜீவ் காந்தி கொலைக்கு நிதியுதவி செய்ததாக வழக்கு இருக்கும் நிலையில், இவரை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது!' என்று வாதிட்டிருக்கிறார்,

அமலாக்கப் பிரிவின் வழக்கறிஞரான கதாரி . ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த ஜெயின் கமிஷன், சந்திராசாமி,

சுப்ரமணியன் சுவாமி ஆகியோரை விசாரிக்க வேண்டுமென்று சி.பி.ஐ-க்கு உத்தரவிட்டிருந்தது. ஆனாலும், இதுவரை பெயரளவுக்குக் கூட சந்திராசாமியை சி.பி.ஐ. விசாரிக்கவில்லை. அதை வைத்து ராஜீவ் கொலை வழக்கில் எப்படியும் சந்திராசாமி தப்பிவிடுவார் என பரபரப்பு கிளம்பிய நிலையில் திடீரென அரசுத் தரப்பு, சந்திராசாமி மீது கடுமை காட்டத் தொடங்கியிருப்பதை சட்ட நிபுணர்கள் ஆச்சர் யத்தோடு பார்க்கிறார்கள்!

தற்போது ராஜீவ் கொலை குறித்து விசாரணை நடத்திக்கொண்டு இருக்கும் பல்முனை நோக்கு விசாரணைக் குழு அதிகாரிகள் சிலரிடம் நாம் பேசினோம். ''ராஜீவ் கொலை வழக்கை ஜெயின் கமிஷன் விசாரித்தபோது, சந்திராசாமியின் ஆசிரமத்துக்கு நெருக்க மான ரமேஷ் தனால் என்பவர் முக்கியமான சாட்சியம் ஒன்றை வழங்கினார். 'தாய் இறந்ததைப் போலவே பையனுக்கும் முடிவு வரும். துண்டு துண்டாகி இறந்துபோவான்!' என்று ராஜீவ் காந்தி பெயரைக் குறிப்பிட்டு சந்திராசாமி சொல்வார். அவர் ஏன் அப்படிச் சொல்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. ராஜீவ் கொலையாவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு ஆசிரமத்தில் இருந்த பலரையும் மிகுந்த சந்தோஷத்துடன் அழைத்த சந்திராசாமி, எல்லோருக்கும் இனிப்பு கொடுத்தார்' என ரமேஷ் தனால் சொல்லி யிருக்கிறார். சி.பி.ஐ. விசாரணைக்கு வந்த பிறகு, இதை மிக முக்கிய மான சாட்சியமாக நாங்கள் பதிவு செய்தோம். ஆனாலும், மேற் கொண்டு எங்களால் சந்திரசாமிக்கு எதிரான சாட்சியங்களை வலுப்படுத்த முடியவில்லை.

அதேசமயம், அந்நியச் செலாவணி விவகாரத்தில் அமலாக்கப் பிரிவு மூலம் சந்திராசாமி மீது ஒன்பது வழக்குகளைப் பதிவு செய்தது அரசுத் தரப்பு. இதுநாள் வரை எப்படியோ... இன்றைய சூழலில் அவரை விசாரிக்க வேண்டிய கட்டாயத் தில் இருக்கிறோம். விசாரணைக்குப் பிறகு சந்திராசாமியின் அனைத்து விதமான தொடர்புகளும் கண்டிப்பாக வெளியே வரும்!'' என்றார்கள் விசாரணைக் குழு அதிகாரிகள்.

ராஜீவ் கொலை விவகாரத்தைத் தொடக்கத்திலிருந்து கவனித்துவரும் அரசியல் புள்ளிகள் சிலரோ, ''ராஜீவ் கொலை விவகாரத்தில் சந்திராசாமிக்கு மிக முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதனால்தான் சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதிக்கக் கூடாது என்று கறாராகச் சொன்ன அரசுத் தரப்பு வழக்கறிஞர், 'சட்டத்தை மதிக்கவே தெரியாத ஒருவரை... கோர்ட்டில் ஆஜராக முடியாத ஒருவரை... வெளிநாடுசெல்ல அனுமதிப்பது நல்லதல்ல...' என கடுமையான வார்த்தைகளை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்திருக்கிறார். இதிலிருந்தே சந்திராசாமி மீது தற்போது காங்கிரஸ் அரசு குறி வைத்திருப்பதாக எண்ணத் தோன்றுகிறது. ஒருவேளை, கடந்த ஆட்சியில் தனி மெஜாரிட்டி இல்லாததால், சந்திராசாமிக்கு எதிராகக் காய் நகர்த்த முடியாமல் போயிருக்கலாம். இப்போது மற்ற அரசியல் கட்சிகளின் குடைச்சல் இல்லாமல் சி.பி.ஐ. குடைந்தெடுக்கத் தொடங்கிவிடும்!'' என்று சொல்லும் அந்தப் புள்ளிகள், இன்னொரு விஷயத்தையும் குறிப்பிடுகிறார்கள்.

''இன்றைக்கு வேண்டுமானால் அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் நல்ல உறவு இருக்கலாம். ஆனால், ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது, அமெரிக்காவுக்குத் தலைவணங்காத கம்பீர சக்தியாக விளங்கினார். அவருடைய கொலை வழக்கில் அமெரிக்க உளவு நிறுவனத்துக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சர்ச்சைகள் எழுந்ததை மறந்துவிட முடியாது. அமெரிக்காவைச் சேர்ந்த யாரு டைய ஏற்பாட்டின்படியோ நம்மூர் தேசிய அரசியலில் இருந்த முக்கியப் புள்ளி ஒருவர், இலங்கையில் இருந்த ஸ்ரீகாந்தா என்பவர் மூலமாக சிவராசனை தொடர்புகொண்டு கொலைத் திட்டம் குறித்துப் பேசியதாகவும் சர்ச்சைகள் உண்டு. சந்திராசாமி மீதான பார்வை இறுகும் நிலையில் அந்த சர்ச்சைகள் மறுபடி கிளறப்படவும் வாய்ப்புள்ளது...'' என்றார்கள்.

ராஜீவ் கொலை சதி குறித்து எப்பவும் ஏதேனும் சர்ச்சைகள் எழுப்பிவரும் திருச்சி வேலுச்சாமி, ''உத்த மர்கள் போல வேடமிடும் சில பொய் முகங்கள் இனியாவது தோலுரிக்கப்பட்டால்தான் ராஜீவ் காந்தியின் ஆன்மாவும் சாந்தியடையும். சி.பி.ஐ. தரப்பு இப்போதாதவது தெளிவான விசாரணையை மேற் கொள்ள வேண்டும்!'' என்கிறார்.

இதற்கிடையில், டெல்லி உயர் நீதிமன்றம் சில நிபந்தனைகளின் பேரில் சந்திராசாமியை வெளிநாடு செல்ல அனுமதித்திருக்கிறது. இந்த அனுமதியை எதிர்த்து அமலாக்கப் பிரிவு உச்ச நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தாலும், சந்திராசாமிக்கு அனுமதி கிடைத்துவிட்டது.

''சந்திராசாமியின் மீதான எங்கள் குற்றச்சாட்டை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வில்லை. இத்தனை வருடங்களாக நடந்த விசாரணையில், விடுதலைப் புலிகளுக்கும் சந்திராசாமிக்கும் உள்ள தொடர்புகளுக்கான ஆதாரங்களை சி.பி.ஐ. கண்டு பிடிக்கவில்லை. இப்போது விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டி ருக்கிறார். இதனால் நீதிமன்றம், அமலாக்கப் பிரிவு கோரிக்கையை ஏற்றுக்கொள்ளாமல் சந்திரா சாமிக்கு வெளிநாடு செல்ல அனு மதி அளித்துவிட்டது!'' என்கிறார், இந்த வழக்கில் அமலாக்கப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாசீம் அகமது கதாரி.

'சட்ட விரோதம்!'

ராஜீவ் கொலை தொடர்பான சதியை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் உத்தரவின் பேரில் அமைக் கப்பட்ட 'பல்முனை நோக்கு விசாரணைக் குழுவை, பிரபாகரன் மறைந்துவிட்ட சூழ்நிலையில் கலைத்துவிடப் போகிறோம்' என்று அறிவித்திருக்கிறார் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம். இது தொடர்பாக வழக்கறிஞர் கருப்பன் பேசும்போது, ''ராஜீவ் கொலை யில் தொடர்புடைய சிவராசன், ராஜீவை கொல்வதற்கு முன்பாக சுவீடன் நாட்டுக்குச் சென்று வந்திருக்கிறார்.

சுவீடனில்தான் ஃபோபர்ஸ் நிறுவனம் இருக்கிறது. அந்நிறுவனத்தில் ஏற்பட்ட பிரச்னையின் காரணமாக, அந்நாட்டுப் பிரதமரையே கொன்றிருக்கிறார்கள். எனவே, ராஜீவ் கொலைக்கு முன்பாக சிவராசன் அங்கு போகவேண்டிய அவசியம் என்ன? ராஜீவ் கொலையில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ., இஸ்ரேலின் உளவு நிறுவனமான மொஸாட் ஆகியவற்றுக்குத் தொடர்பிருப்பதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது.

மேலும், சோனியா, அவருடைய தாயார், அர்ஜுன்சிங் மற்றும் மார்க்ரெட் ஆல்வா ஆகியோருக்கும் பங்கு இருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி நேரடியாகவே குற்றம் சாட்டியிருக்கிறார். இதன் அடிப்படையில் சோனியாவை விசாரிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஜெயின் கமிஷன் தன்னுடைய தீர்ப்பில், 'சந்திராசாமி, சுப்பிரமணியன் சுவாமி உட்பட மேலும் இருபது பேரை இவ்வழக்கு தொடர்பாக தீவிரமாக விசாரிக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறது.

இதனடிப்படையில், அமைக்கப்பட்ட சி.பி.ஐ&யின் பல்முனை நோக்கு விசாரணைக் குழு, பத்தாண்டுகளுக்கும் மேலாக விசாரித்து வருகிறது. பல்நோக்கு விசாரணைக் குழு இத்தனை காலம் விசாரணையில் ஈடுபட்டு எதை கண்டறிந்தது? எதை விசாரித்தது? எதுவுமே வெளிப்படையாக அறிவிக்காமல் திடுமென, விசாரணைக் குழுவை கலைக்கப் போகிறோம் என்று சொன்னால், அது சட்டவிரோதம் மட்டுமல்ல... குற்றவாளிகளைத் தப்பிக்கச் செய்வதற்காக இந்திய அரசு திட்டமிட்டு செயல்படுகிறதோ என்கிற சந்தேகத்தையும் எழுப்புகிறது...'' என்கிறார்.
& பாலா

நன்றி:விகடன்
-தமிழ்ஸ்கை

0 comments: