Headline

நல்ல செய்தி விரைவில் கிடைக்கும்: பா.நடேசன் நம்பிக்கை!


தமிழ்நாட்டு மக்கள் எதிர்வரும் புதன்கிழமை (13.05.09) நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு தெளிவான செய்தியை தெரிவிப்பார்கள் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் வலுவான நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இந்தியாவில் இருந்து வெளியாகும் 'த வீக்' ஆங்கில இதழின் ஊடகவியலாளர் கவிதா முரளிதரனுக்கு பா.நடேசன் வழங்கிய நேர்காணலின் தமிழ் வடிவம் வருமாறு:

தற்போதைய நிலமை தொடர்பாக நீங்கள் தெரிவிக்கும் கருத்து என்ன?

உலகின் சில பெரிய சக்திகளின் துணையுடன் இராணுவ ரீதியாக விடுதலைப் புலிகளைப் பலவீனப்படுத்த முயல்வது, இந்தத் தீவில் அமைதியையும், உறுதித்தன்மையையும் ஏற்படுத்தாது. எமது மக்களின் உரிமைகள் பெறப்படும் வரை எமது போராட்டம் தொடரும்.

இப்போது - தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் விரைவுபடுத்தப்பட்ட இன அழிப்பு போருக்கு இலக்காக்கப்பட்டுள்ளனர். சிறிலங்கா அரசு தமிழ் மக்களை அவர்களின் தாயகத்தில் இருந்து தொடர்ந்து வெளியேற்றி வருவதன் தொடர்ச்சியே இது.

விடுதலைப் புலிகளின் தலைவருக்கு சுகவீனம், விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் கொல்லப்பட்டுவிட்டனர் என வெளியாகும் தகவல்கள் உண்மையா?

இன்றைய போரானது பல மட்டங்களில் நடைபெற்று வருகின்றது. தமிழீழ மக்களின் மனிதாபிமான அவலங்களுக்கு இந்திய மக்களிடத்தில் இருக்கும் ஆதரவை மழுங்கடிக்கும் செயல்களில் சில ஊடகங்கள் ஈடுபட்டுள்ளன. களமுனை தகவல்களை பொறுத்தவரையில் கூட, இராணுவத்தால் பரப்பப்படும் வதந்திகளுக்கு சில ஊடகங்கள் நம்பகத்தன்மையை ஊட்ட முனைகின்றன.

இலங்கையின் தற்போதைய நிலமையில் இந்திய தேர்தலின் தாக்கம் எவ்வாறு இருக்கும்?

வரலாற்று ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் - ஈழத் தமிழ் மக்கள் இந்திய மக்களின் மிக நெருங்கிய நண்பர்களே. யார் ஆட்சி அமைத்தாலும் இது உறவு எப்போதுமே இப்படித்தான் இருக்கும். ஆனால் தற்போது வன்னியில் எற்பட்டுள்ள மனிதப் பேரவலத்தை இன்றைய இந்திய மத்திய அரசு புறக்கணித்து வருவது வேதனையானது.

இதற்கிடையில் - இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் வலுவான இராணுவ ஒத்துழைப்பு உள்ளதாக உறுதியான தகவல்கள் வெளிவந்தவண்ணம் உள்ளன. தமிழ் மக்களின் அரசியல் அவாக்களை நிறைவுசெய்யும் ஒரு மாற்றத்தை இந்த தேர்தல் கொண்டுவரும் என நாம் நம்புகின்றோம்.

இலங்கை தமிழ் மக்களின் பிரச்சனை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்ற கருணாநிதியின் வாதத்தை நீங்கள் ஏற்றுக்கொள்கின்றீர்களா?

நான் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்கள் தான் தமிழீழ மக்களின் நம்பிக்கையும், பலமும். தமிழக மக்கள் இதனை நன்கே அறிவார்கள். காங்கிரஸ் கட்சி தலைமையிலான இந்திய அரசு சிறிலங்கா அரசுக்கு இராணுவ ஒத்துழைப்புக்களை வழங்கி அதன் தமிழின அழிப்பு போருக்கு உதவி வருவதையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.

எதிர்வரும் மே 13 ஆம் நாள் நடைபெறப்போகும் தேர்தலில் ஈழத்தமிழ் மக்களோடு தாம் சேர்ந்திருக்கும் செய்தியை தமிழக மக்கள் தெளிவாகத் தெரிவிப்பார்கள் என்பது எனது வலுவான நம்பிக்கை.

தனி ஈழம் தான் தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு என செல்வி ஜெ. ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உங்களின் பார்வை என்ன?

இதனைத்தான் ஈழத் தமிழ் மக்களும் உலகு எங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களும் கேட்பதற்கு வேண்டி நின்றார்கள். தற்போது ஜெயலலிதா அவர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் சிறிலங்கா அரசிற்கும், அனைத்துலக சமூகத்திற்கும் தெளிவான செய்தியை வழங்கியிருக்கும். அதாவது, ஈழத் தமிழ் மக்கள் தனித்து விடப்படவில்லை என்பதே அந்த தகவல்.

ஈழத் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து உங்களின் கருத்து என்ன?

ஈழத் தமிழ் மக்கள் சந்தித்துவரும் அழிவுகள் கடந்த சில மாதங்களாக மோசமடைந்து வருகின்றன. தி.மு.க.வும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் மக்களின் மீது அக்கறை உள்ளவர்கள் தான். ஆனால், அறிக்கைகளும், பேச்சுக்களும், தேர்தல் வாக்குறுதிகளும் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையையும் செய்துவிடவில்லை. இதுவரை காலத்தில் - தன்னால் ஆக்கபூர்வமான காரியங்களைச் செய்திருக்க முடியும் என்பது கலைஞருக்கு நன்றாகவே தெரியும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.

போர் நிறுத்தம் வேண்டி கருணாநிதி மேற்கொண்ட உண்ணாநிலைப் போராட்டம் தொடர்பான உங்களின் பார்வை என்ன?

ஏப்ரல் 27 ஆம் நாள் இரவில் இருந்து மறுநாள் காலை வரை சிறிலங்கா இராணுவம் 5,000-க்கும் அதிகமான பீரங்கிக் குண்டுகளை மக்கள் வாழும் 'பாதுகாப்பு வலய' பகுதி மீது வீசித் தாக்கியது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் இதில் கொல்லப்பட்டுள்ளதுடன், 1,500-க்கும் அதிகமானோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

ஆகவே, இது தொடர்பில் நான் வேறு எதுவும் கூறுவதற்கு இல்லை.

தமிழ் மக்களை சிறிலங்கா இன அழிப்புக்கு உட்பட்டுத்துவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த தமிழ் பொப் பாடகி எம்.ஐ.ஏ. வெளிப்படையாக ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். உங்கள் கருத்து என்ன?

அவர் எமது மண்ணின் குழந்தை, உலகு எங்கும் பரந்து வாழும் புலம்பெயர் தமிழ் மக்களில் மிகவும் திறமையுள்ள இளம் உறுப்பினர்களில் ஒருவர். அவர் தொடர்பாக நாம் பெருமையடைகின்றோம். அவரின் ஆதரவு ஈழத் தமிழ் மக்களுக்கு பலம் சேர்க்கும் வலுவான காரணிகளில் ஒன்று.

சிறிலங்கா அரசின் வலிமை மிக்க எல்லா பிரச்சார சாதனங்களும் தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பவர்களை அழிப்பதிலேயே முனைப்பாக செயற்படுகின்றன. இருந்த போதும் மனிதநேயம் கொண்ட அவரின் இதயம் தான் தமிழ் மக்கள் படும் துன்பம் தொடர்பாக அவரை பயமின்றி பேசவைத்துள்ளது என்றார் பா.நடேசன்.

நன்றி
-புதினம்

0 comments: