Headline

ஐ.நா காட்டிய படமும் .சீற்றத்தில் இலங்கையும்!


ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருப்பதையடுத்து சிறிலங்காவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கின்றது.
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செய்மதி ஒளிப்படங்கள் சில ஐ.நா.வினால் வெளியிடப்பட்டதையடுத்தே இந்தக் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது.

பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எனக் கூறி செய்மதி ஒளிப்படங்கள் சிலவற்றை ஐ.நா. சபை கடந்த வாரத்தில் கசிய விட்டதையடுத்து சிறிலங்கா அரசாங்கம் கடும் சீற்றமடைந்திருக்கின்றது.

இந்தச் செயற்பாட்டின் மூலமாக ஐ.நா. சபை தன்னுடைய வழமையான செயற்பாடுகளின் எல்லையைத் தாண்டிச் சென்றிருக்கின்றது என்ற குற்றச்சாட்டையும் சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்திருக்கின்றது.

உறுப்பு நாடு ஒன்றின் தகவல்களை இரகசியமான முறையில் பெற்று, அந்த நாட்டுக்கும் அரசாங்கத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் அந்தத் தகவல்களை பின்னர் ஏனைய நாடுகளுக்கும் ஊடகங்களுக்கும் கசிய விடுவதற்கான உரிமை ஐ.நா.வுக்கு உள்ளதா என இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட சிறிலங்கா அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

"ஐ.நா.வின் ஒரு பிரிவோ அல்லது ஐ.நா.வுடன் சம்பந்தப்பட்ட ஒரு தனிநபரோ உறுப்பு நாடு ஒன்றில் உறுதிப்படுத்தப்படாத தகவல்களைச் சேகரித்து பின்னர் அவற்றை தெரிவுசெய்யப்பட்ட சில தூதரகங்களுக்கு கசியவிடுவது அல்லது இணையத்தளத்தில் வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாததது" என வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருக்கின்றார்.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் மக்கள் செறிவாக வாழும் இடங்களில் மேற்கொள்ளப்பட்ட எறிகணை அல்லது வான் தாக்குதல்களை உறுதிப்படுத்தும் செய்மதி ஒளிப்படங்கள் எனக் குறிப்பிட்டு சில படங்களை ஐ.நா. சபை கடந்த வாரம் ஊடகங்களுக்குக் கசியவிட்டிருந்தது. இது தொடர்பாக ஏற்கனவே கொழும்பில் உள்ள ஐ.நா. தூதுவரை அழைத்த சிறிலங்கா அரசாங்கம் அது தொடர்பாக விளக்கம் கேட்டிருந்தது.

மக்கள் அடைக்கலம் புகுவதற்காக எனப் பிரகடனப்படுத்தப்பட்ட பாதுகாப்பு வலயத்தை நோக்கி கனரக ஆயுதங்களைத் தாம் பயன்படுத்துவதில்லை என சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் கூறிவரும் நிலையில், ஐ.நா. வெளியிட்ட இந்த ஒளிப்படங்கள் சிறிலங்கா அரசுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

உலகில் போர்ப்பகுதிகளாக பல இடங்கள் உள்ளன எனச் சுட்டிக்காட்டியிருக்கும் கோகன்ன, இந்த இடங்களில் எல்லாம் உளவு பார்ப்பதற்கான உத்தேசம் ஐ.நா. சபைக்கு உள்ளதா எனவும் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.

அரசாங்கத்துக்குச் சங்கடமான நிலைமை ஒன்றை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த செய்மதிப் படங்கள் வெளியிடப்பட்டுள்ளன எனக் குறிப்பிடும் கோகன்ன, இவ்வாறான நடவடிக்கை அனைத்துலக உறவுகளுக்கு ஒரு அச்சுறுத்தலாக இருப்பதுடன், சக்தியற்ற மூன்றாம் உலக நாடுகளுக்கு விடுக்கப்படும் ஒரு மிரட்டலாகவுமே கருத வேண்டும் எனச் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

நன்றி
-வன்னி.நெட்

0 comments: