Headline

பி.பி.சீ- தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவானது - கோதபாய


பிரித்தானியாவின் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்ட் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பான வகையில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர்களின் இலங்கை விஜயம் நேரத்தை வீணடிக்கும் ஓர் செயலாகவே தாம் கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்திலிருந்து வெளியும் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த விசேட செவ்வியின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் பிரித்தானிய வெளிவிவகார அமைச்சருக்கும் தமக்கும் இடையில் நடைபெற்ற சந்தப்பு திருப்தியளிக்கும் வகையில் அமையவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

பேச்சுவார்த்தைக்கு இடை நடுவில் தேவையற்ற வகையில் அழுத்தத்தை பிரயோகிக்க மில்பாண்ட் முனைப்பு காட்டியதாக கோதபாய குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜனாதிபதியின் நடவடிக்கைகளை இந்த நாட்டு மக்கள் அங்கீகரித்துள்ளதாகவும், சர்வதேச சக்திகளின் கருத்துக்கள் முக்கியமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


மேற்குலக நாடுகளில் வசித்து வரும் புலம்பெயர் இலங்கைத் தமிழர்களை திருப்தி படுத்தும் நோக்கில் ஐரோப்பிய தலைவர்கள் தேவையற்ற வகையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்ப் பொதுமக்களை எவ்வாறு பாதுகாப்பதென்பதனை படையினர் நன்கு புரிந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அரசியல் தலைவர்களையும், பொதுமக்களையும் படுகொலை செய்த போது இந்த டேவிட் மில்பண்ட் என்ற உறங்கிக் கொண்டு இருந்தாரா என கோதபாய கேள்வி எழுப்பியுள்ளார்.

புலம்பெயர் தமிழ் மக்களை திருப்திபடுத்தும் நோக்கிலேயே ஐரோப்பிய இராஜதந்திரிகள் இலங்கைக்கு விரைவதாகவும், தமிழ் மக்கள் மீதான கரிசனை எதுவும் அவர்களுக்கு இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் பொதுமக்கள் மீது எறிகணைத் தாக்குதல் நடத்துவதாக பி.பி.சீயை மேற்கோள்காட்டி வெளிவிவகார அமைச்சர் மில்பாண்ட் வெளியிட்ட கருத்தின் காரணமாக கோதபாய ராஜபக்ஷவிற்கும் மில்பாண்டிட்ற்கும் இடையில் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.


பி.பி.சீ உலக சேவை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் பிரச்சாரம் செய்து வருவதாக கோதபாய குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுண், வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்பாண்ட், அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலரி கிளின்ரன், பிரான்ஸ் வெளிவிவகார அமைச்சர் பிரணர்ட் குச்னெர் மற்றும் ஜீ‐8 நாடுகளது அமைச்சர்கள் உள்ளிட்டோர் இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் காட்டும் கரிசனை வெறும் அரசியல் நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டது எனவும், மக்கள் தொடர்பான உண்மையான கரிசனை எதுவுமில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நன்றி
-உலக தமிழ் செய்தி

0 comments: