இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல் சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும் பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேளை அவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
மோதலின் போது ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தடிகள் மற்றும் சில பொருட்கள் வீசப்பட்டமையால் பிரித்தானிய பாராளுமன்ற முன்றலில் சற்று நேரம் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அருகில் உள்ள தேம்ஸ் பாலத்திற்குச் சென்றனர். இதனால் தேம்ஸ் நதியில் தமிழர்கள் கூட்டம் கூட்டமாக குதித்துத் தற்கொலை செய்து கொள்ளக் கூடும் என்ற அச்சம் நிலவியது.
இதையடுத்து மீட்புப் படகுகள் அங்கு வரவழைக்கப்பட்டன. அந்த சமயத்தில் இருவர் நதியில் குதித்து விட்டனர். உடனடியாக அங்கு விரைந்த மீட்புப் படகு அவர்கள் இருவரையும் மீட்டது. அவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து பிரதமர் கோர்டன் பிரவுன் தங்களுடன் பேச வேண்டும் என்று போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரியதாக பிபிசி செய்தி கூறுகிறது.இங்கிலாந்து இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். இனப்படுகொலை தொடர்பாக இங்கிலாந்து தனது மெளனத்தைக் கலைக்க வேண்டும். அதுவரை போராடுவோம் என தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழர்கள் பெரும் திரளாக திரண்டு நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து இலங்கைக்கான இங்கிலாந்து சிறப்புத் தூதரும், முன்னாள் பாதுகாப்பு செயலாளருமான டெஸ் பிரவுன் தனது விடுமுறையை ரத்து செய்து விட்டு லண்டன் விரைந்துள்ளார்.
அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு பொலிஸ் அதிகாரி கூறுகையில், இது சாதாரண பிரச்சினை போலத் தெரியவில்லை. அரசியல் பிரச்சினையாக தெரிகிறது. உயர் மட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் இதில் தலையிட்டாக வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்.
வெஸ்ட்மின்ஸ்ட் பகுதியில், கூடியுள்ள தமிழர்களை கலைக்க பொலிஸார் எடுத்துக் கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லையென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இதையடுத்து அங்கு அமர்ந்து போராட்டம் நடத்தியவர்களை பொலிஸார் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று வேறு பகுதிகளுக்கு திருப்பி விட்டனர். ஆனாலும், அங்கும் மக்கள் கலையாமல் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.நாடாளுமன்றத்திற்குள் தமிழர்கள் புகுந்து விடுவார்களோ என்ற அச்சம் காரணமாக அங்கு அதிரடிப்படை பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக ஸ்காட்லாந்துயார்ட் பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஒருவர் வன்முறையில் ஈடுபட்டதற்காகவும், இருவர் பொது ஒழுங்கை சீர்குலைத்ததற்காவும், ஒருவர் அமைதியை சீர்குலைத்ததற்காவும் கைது செய்யப்பட்டனர் என்றார்.
தற்போது நாடாளுமன்ற வளாகம் முன்பு 500க்கும் மேற்பட்டோர் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டுள்ளனர். அங்கேயே படுத்து போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர் என சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
போராட்டத்தில் பங்கேற்ற விஜய் மகாலிங்கம் என்ற தமிழ் இளைஞர் கூறுகையில், "எங்களது தாயகத்தின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு பிரிட்டிஷ் அரசையும், உலக நாடுகளையும நாங்கள் கேட்டுக் கொள்கிறோம். அதை வலியுறுத்தவே இந்தப் போராட்டம்.
கடந்த வாரம் உலகின் சக்தி வாய்ந்த பல்வேறு தலைவர்கள் இங்கு கூடினர். ஆனால் எங்களது தாயகத்தில் நடைபெற்று வரும் படுகொலை குறித்து யாருமே ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என்றார். பிரித்தானிய நாடாளுமன்ற முன்றலில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் ஒன்று திரண்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் நேற்று திங்கட்கிழமை முதல் ஈடுபட்டு வருகின்றனர். அதேவேளை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் 1000க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே மேற்படி மோதல் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
நன்றி
வீரகேசரி இணையம்
Headline
பிரித்தானிய பாராளுமன்ற முன்பு ஆர்ப்பாட்டத்தில் மோதல்-படங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment