Headline

பெண்கள் கைதால் கொந்தளிப்பான சூழல் நிலவியது.!!!

/>
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 5 பெண்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து மருத்துவமனையில் மருத்துவத்திற்குச் சேர்த்துள்ளனர். காலை நேரத்தில் தங்களை கைது செய்ய வந்த காவல்துறையினருடன் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சிங்கள இனவெறி படையினரால் நச்சுக்குண்டுகள் வீசி கொல்லப்பட்டு வரும் அப்பாவித் தமிழ் மக்களை பாதுகாக்கவும், உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுத்தவும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த 20 பேர் கடந்த 13 ஆம் நாள் முதல் தொடர் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கைத் தமிழருக்காக உயிர்த் தியாகம் செய்த முத்துக்குமாரன் இல்லம் அருகே கொளத்தூரில் உண்ணாநிலைப் போராட்டத்தைத் தொடக்கிய இவர்கள், காவல்துறையின் கெடுபிடி காரணமாக ம.தி.மு.க. தலைமையகமான தாயகத்திற்கு வந்து அங்கு தொடர்ந்து உண்ணாநிலை மேற்கொண்டு வருகின்றனர்.
/>

10 ஆவது நாளாக நேற்றும் உண்ணாநிலைப் போராட்டம் தொடர்ந்தது.

கைது

நேற்றுக் காலை 5:30 நிமிடமளவில் மத்திய சென்னை காவல்துறை இணை ஆணையர் ரவிக்குமார், துணை ஆணையர் கணேசமூர்த்தி, உதவி ஆணையர்கள் இளங்கோ, சிறீதர்பாபு உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் தாயகம் அருகே குவிக்கப்பட்டனர்.

எழும்பூர் ஆதித்தனார் வளைவில் இருந்து இராஜரத்தினம் விளையாட்டுத்திடல் வரையிலான சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர். காலை 6:00 மணியளவில் தாயகத்திற்குள் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்தனர். இதனை அறிந்த ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் ஜீவன், எழும்பூர் பகுதிச் செயலாளர் நிசார் உள்ளிட்ட அந்தக் கட்சியினர் அங்கு விரைந்து வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.




பின்னர் காவல்துறை அதிகாரிகள் உண்ணாநிலை இருந்த பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்போவதாக கூறினர். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உயிர் போனாலும் பரவாயில்லை, போர் நிறுத்தம் வரும்வரை இந்த இடத்தை விட்டு செய்யமாட்டோம் என்று அவர்கள் உறுதியாகக் கூறினர்.

இதனையடுத்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி›மருத்துவமனை முதல்வர் கனகபை மற்றும் மருத்துவர்கள் உண்ணாநிலை இருந்த பெண்களை மருத்துவ ஆய்வு செய்தனர். அவர்களின் உடல்நிலை மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.


ஆனால், அந்தப் பெண்கள் மருத்துவமனைக்கு வரமாட்டோம் என்று உறுதியாகக் கூறிவிட்டனர். அப்போது அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் முயற்சித்தனர். இதனால் காவல்துறை அதிகாரிகளுக்கும் உண்ணாநிலை இருந்த பெண்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரம் கொந்தளிப்பான சூழல் நிலவியது. இதைத் தொடர்ந்து திருவான்மியூரையடுத்த பாலவாக்கத்தைச் சேர்ந்த தங்கமணி (வயது 45), கொளத்தூரைச் சேர்ந்த ஜெயமணி (வயது 42), லோகநாயகி (வயது 45), திருவண்ணாமலையைச் சேர்ந்த மதி (வயது 32), தேனியைச் சேர்ந்த சித்ராதேவி (வயது 43) ஆகியோரை காவல்துறை அதிகாரிகள் வலுக்கட்டாயமாக கைது செய்து ஊர்தியில் ஏற்றிச் சென்றனர்.


பின்னர் அவர்களை கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. 5 பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 15 பேர் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நன்றி
- புதினம்.காம்
-வக்தா.டிவி

2 comments:

வால்பையன் said...

இன்னொரு விசயம் இந்த பெண்கள் எந்த மீடியா விளம்பரமும் இல்லாமல் உண்ணாவிரதம் இருந்தார்கள்!
நடிகர் விவேக் சென்று பார்த்த பிறகு தான் மொத்த மீடியாவும் திரும்பியது!

ஒருநாள் உண்ணாவிரதம் என்று காலை மூச்சுமுட்ட தின்று வந்து விட்டு ஆறுமணிக்கு ஜூஸ் குடித்து உண்மையிலேயே நடிக்கும் நடிகர்களுக்கு இவர்கள் வானுயர மேல்

மக்களுக்கு எப்போ தான் புத்தி வருமோ!

puduvaisiva said...

"வால்பையன்
இன்னொரு விசயம் இந்த பெண்கள் எந்த மீடியா விளம்பரமும் இல்லாமல் உண்ணாவிரதம் இருந்தார்கள்!
நடிகர் விவேக் சென்று பார்த்த பிறகு தான் மொத்த மீடியாவும் திரும்பியது!

ஒருநாள் உண்ணாவிரதம் என்று காலை மூச்சுமுட்ட தின்று வந்து விட்டு ஆறுமணிக்கு ஜூஸ் குடித்து உண்மையிலேயே நடிக்கும் நடிகர்களுக்கு இவர்கள் வானுயர மேல்

மக்களுக்கு எப்போ தான் புத்தி வருமோ!"

வாங்க வாலு
இன உணர்வுக்காக அவர்களின் உண்ணமை போரட்டம் பாரட்ட கூடியதே.

நம்ப மக்கள் எல்லாத்துக்கும் நடிகர்கள் நடிகைகள் வந்து நாட்டு நிலை சொன்னால்தான் சீரியலில் சீரழிந்த கூட்டத்திற்கே செய்திகள் தெரிய வரும்.

வாழ்க கனவு உலகம்.