Headline

ஈழ ஆதரவு துண்டு பிரசுரத்தால் 13 மாணவர்கள் கைது!!


இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக ப.சிதம்பரத்திற்கு எதிராக துண்டு பிரசுரம் விநியோகித்த 13 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை சட்டக்கல்லூரியில் முதுகலை சட்ட படிப்பு படித்து வருபவர் ராஜீவ் காந்தி (வயது 28). இவர் முத்துக்குமார் எழுச்சி இயக்கத்தின் தலைவராக உள்ளார். சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மத்திய அமைச்சர் ப.சிரம்பரத்தை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக சிவகங்கை தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் 13 பேர் பிரசாரம் செய்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதையும், அதற்கு காரணமான காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக துண்டு பிரசுரத்தை விநியோகித்தனர். அப்போது அங்கு வந்த காங்கிரசார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் மீது கல்வீசி தாக்கினர். உடனடியாக போலீசார் பாதுகாப்பாக 13 மாணவர்களையும் அழைத்து சென்றனர்.

பின்னர் ஒவ்வொரு போலீஸ் நிலையமாக மாணவர்களை மாற்றி அழைத்து சென்றனர். நேற்று காலை மாஜிஸ்திரேட்டு வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர்கள் அனைவரும் 15 நாள் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். 13 பேர் மீதும் ஜாமீனில் வெளிவர முடியாத வழக்குகள் போடப்பட்டுள்ளது.

இதற்கிடையே வேட்பாளர் ராஜீவ்காந்தி வேட்பு மனுதாக்கல் செய்தபோது அவரது பெயருக்கு காங்கிரசார் ஆட்சேபம் தெரிவித்தனர். ஆனால் அவர்களது புகாரை தேர்தல் அதிகாரி நிராகரித்துவிட்டார். இதற்கிடையே ராஜீவ்காந்திக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் சென்னையில் இருந்து சிவகங்கை சென்றுள்ளனர்.

நன்றி
-நக்கீரன்

0 comments: