Headline

தென்காசி அருகே நர மாமிச மனிதன் பீதி?



தென்காசி அருகே மனித மாமிசம் சாப்பிடும் நபர்கள் நடமாடுவதாக பீதி கிளம்பியுள்ளது.

தென்காசி அருகேயுள்ள ஆய்க்குடியில் இருந்து சுரண்டைக்கு செல்லும் வழியில் கம்பிளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் யாரோ மர்ம மனிதன் இரவில் நடமாடுவதாகவும், அவன் மனிதர்களை கடித்து தின்பவன் எனவும் பொதுமக்கள் இடையே சில நாட்களாக பேசப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கடந்த வாரம் கம்பிளி பள்ளி வாசல் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து ஊருக்கு வடக்கே உள்ள சப்பாணி முத்து கோவில் அருகில் இரவில் சென்றுக் கொண்டிருந்தபோது 40 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் அவரது கையை பிடித்துக் கடிக்க முயன்றானாம். உடனே பேச்சிமுத்து அங்கிருந்து தப்பியோடி வந்துவிட்டார்.

அடுத்த நாள் பகலில் அதே இடத்தில் ஆய்க்குடியை சேர்ந்த கோழிக்கடை மாரிமுத்து மகன் மூர்த்தி என்பவரது கையை பிடித்து மர்ம மனிதன் கடிக்க முயற்சி செய்தானாம்.

இதுகுறித்து ஆய்க்குடி போலீசார் சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு சென்று விசாரணை நடத்தினர். ஆனால் யாரும் பிடிபடவில்லை. வடமாநிலத்தை சேர்ந்த ஒருவரை போலீசார் இரவில் பிடித்து விசாரித்தனர். இதில் அவருக்கு தொடர்பு இல்லை என தெரிந்ததால் அவரை அனுப்பிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பேச்சிமுத்து கூறியதாவது, எனக்கு சொந்த ஊர் கம்பிளி. நான் டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வருகின்றேன். ஒருநாள் நான் நெல் மூட்டைகளை ஏற்றுவதற்காக மல்லராமக்குளக்கரையில் சென்று கொண்டிருந்தேன்.

அப்போது இரவு 9 மணி இருக்கும். ஒரு ஆலமரம் அருகே சென்றபோது ஒரு மர்ம ஆசாமி திடீர் என்று வந்து எனது கையை பிடித்து கடிக்க முயன்றான். அவனிடம் நீ யார் என்று கேட்டேன். அவன் பதில் கூறவில்லை. மேலும் எனது கையை பிடித்து இழுத்தான். நான் அவனை குளத்துக்குள் தள்ளிவிட்டு ஓடிவந்துவிட்டேன்.

இப்போது அதை நினைத்தாலும் பயமாக இருக்கிறது. இந்த சம்பவம் நடந்த மறுநாளே ஆய்க்குடியை சேர்ந்த மூர்த்தி என்பவரையும் இதே போல் தாக்கி உள்ளான். எனவே போலீசாருக்கு தகவல் கொடுத்தோம்.

அவர்கள் வந்து தேடினர். ஆனால் அவன் சிக்கவில்லை. அவன் மனித மாமிசத்தை உன்பவனாக இருக்கலாம் என்றார்.

இந்த சம்பவம் ஆய்க்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சிலர் இது வெரும் வதந்தியாக இருக்கும் என்று கூறுகின்றனர். இருப்பினும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இரவில் தனியாக வெளியில் வர பயப்படுகின்றனர்.

நன்றி
-தட்ஸ்தமிழ்

0 comments: