Headline

கலைஞர் டைரி:- என் படத்தை எரிக்கிற அளவுக்கு என்ன வஞ்சனை செய்தேன்?
ராமச்சந்திரா மருத்துவமனை அனுபவம் குறித்து முதல்வர் கருணாநிதி எழுதி வைத்துள்ள டைரி குறிப்புகளை ஐந்தாவது நாளாக வெளியிட்டுவருகிறார்.


18-2-09:


அரசின் நிதி நிலை அறிக்கை குறித்து ஏடுகளில் பாராட்டுகள் வந்திருந்தன. எதிர்க்கட்சிகள் ஏதாவது குறை சொல்ல வேண்டுமே என்பதற்காக ஒன்றிரண்டை சிரமப்பட்டு தேடி அறிக்கையாக கொடுத்திருந்தார்கள். சிலர் குறை கூற முடியாமல், தேர்தலுக்காக தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறி, மறைமுகமாக அது நல்ல அறிக்கைதான் என்பதை ஒப்புக்கொண்டார்கள். ஜெயலலிதா நீண்ட அறிக்கை விடுத்திருந்தார். அவரும் தேர்தலை மனதிலே கொண்டு தயாரிக்கப்பட்ட நிதி நிலை அறிக்கை என்று கூறியிருந்தார்.


‘திருமணத்திற்காக எடுத்த பட்டுப் புடவைதான்’ என்ற தலைப்பில் எதிர்க்கட்சியினர் தெரிவித்திருந்த குறைபாடுகளுக்கு விளக்கங்களை எழுதினேன்.


டெல்லி சென்ற இலங்கை தமிழர் நல உரிமை பேரவை துணைக் குழுவினர் சோனியா காந்தியை சந்தித்து மனு கொடுத்துவிட்டு, அங்கிருந்து தொலைபேசி மூலமாக தகவல் கூறினர்.


மக்களவையில் அமைச்சர் பிரணாப் முகர்ஜி அறிக்கை தாக்கல் செய்திருப்பதாகவும், முல்லைத்தீவு பகுதியில் சிக்கியுள்ள 70 ஆயிரத்திற்கு மேற்பட்ட தமிழர்களை பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்ல அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; அதற்கான உதவிகளை செய்ய இந்தியா தயாராக இருப்பதாக கூறியதாகவும் எனக்கு தகவல் கூறினார்கள்.


ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, நீதி மன்றத்தில் தாக்கப்பட்டது குறித்து காவல்துறை தலைமை இயக்குநர் கே.பி. ஜெயினை தலைமை நீதிபதி பொறுப்பில் இருந்த முகோபாத்யாயாவிடம் வருத்தம் தெரிவிக்கக் கூறினேன்.


அந்த சம்பவம் குறித்து காவல்துறை அதிகாரிகளை அழைத்து கேட்டபோது, சம்பவம் தொடர்பாக சட்டக் கல்லூரி போலீசார் 20 வழக்கறிஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்களை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும், இரவு 10.30 மணி அளவில் வழக்கறிஞர் கினிலியோ இம்மானுவேல் என்பவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்கள்.


புலனாய்வுத் துறை ஐ.ஜி.யை அழைத்து, சுவாமியை தொடர்பு கொண்டு, உயர்நீதிமன்ற சம்பவத்திற்காக நான் வருத்தம் தெரிவித்ததாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறச் செய்தேன்.


சில நாட்களாக சரியான உறக்கம் இல்லாததாலும், வலது காலில் எரிச்சல் இருந்ததாலும் நரம்பியல் நிபுணர் ஏ.வி. சீனிவாசன் வரவழைக்கப்பட்டார். அவர் பழைய மருந்துகள் சிலவற்றை மாற்றி விட்டு புதிய மருந்துகள் கொடுத்தார்.
மார்த்தாண்டம் குழுவினர் அறுவை சிகிச்சை புண்ணை பரிசோதித்து விட்டு நன்றாக ஆறி வருவதாக கூறினர்.


19-2-09:


இன்று காலையிலிருந்து உடல் நிலை நன்றாக இருந்தது. டெல்லியிலிருந்து வரவழைக்கப்பட்ட முதுகுத்தண்டு கவசத்தை பொருத்தி சரி பார்த்தார்கள். அதற்காக முதன் முதலாக உட்கார வைக்கப்பட்டேன்.


பிற்பகலில் மருத்துவமனைக்கு வந்த செய்திகள் சரியாக இல்லை. உயர்நீதிமன்றத்தில் காவல் துறையினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல். தொலைபேசி வாயிலாக தொடர்ந்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.


சுப்பிரமணியன் சுவாமி தாக்கப்பட்ட சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 20 வழக்கறிஞர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டதை தவிர மீதமுள்ள வழக்கறிஞர்கள் சரண் அடைவதாக கூறி, காவல் நிலையத்திற்கு வந்த பிறகு ‘நாங்கள் கைதாக தயாராக இருக்கிறோம். ஆனால் வழக்கறிஞர்களை தாறுமாறாக பேசிய சுவாமி மீதும், அவருடன் வந்த ராதாராஜன் மீதும் நாங்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.


காவல் துறையினர் அதற்கு ஒப்புக்கொள்ளவே, வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் புகார் கொடுத்துள்ளார். போலீசார் அதனை பெற்று வழக்கு பதிவு செய்து நகல் கொடுத்துள்ளனர்.


‘உங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றி விட்டோம். இப்போது கைதாக வேண்டியவர்கள் ஒத்துழைக்க வேண்டும்’ என காவலர்கள் கேட்டபோது, ‘சுவாமியை வன் கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்தால்தான் நாங்கள் கைதாவோம்’ என்று புதிய கோரிக்கை வைத்திருக்கிறார்கள். இதையட்டித்தான் வாக்குவாதம் தொடங்கி மோதலில் முடிந்தது.


நிலைமை மோசமாவதை அறிந்து நானே புறப்பட்டு செல்லலாமா என்று யோசித்தேன். மருத்துவர்கள் கண்டிப்பாக அந்த நிலையில் செல்லக் கூடாது என்றார்கள்.தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளரை உடனடியாக நீதி மன்றத்திற்கு சென்று தலைமை நீதிபதியை சந்தித்து பேசும்படி கூறினேன். அவர்களும் அவ்வாறே சென்றார்கள். டி.ஜி.பி., கமிஷனர் ஆகியோரையும் போகச் சொன்னேன். கமிஷனர் அங்கேதான் இருப்பதாக தகவல் கிடைத்தது.


தலைமை நீதிபதியுடன் தொலைபேசியில் பேச முயன்றேன். போன் கிடைக்கவில்லை. ஒரு கடிதம் எழுதினேன். எதிர்பாராத சம்பவம் நடைபெற்றுவிட்டது.

இது பற்றி எடுத்துக் கூற தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோரை அனுப்பியுள்ளேன். தாங்கள் என்னைப் பார்க்க விரும்பினால் ஆம்புலன்சில் வரத் தயாராக இருக்கிறேன் என்று எழுதி பேக்ஸ் மூலம் அனுப்பினேன்.தலைமைச் செயலாளரும், உள்துறை செயலாளரும் நீதி மன்றத்திலிருந்து போன் செய்து, தலைமை நீதிபதி இதுபற்றிய வழக்கினை சி.பி.ஐ.க்கு அனுப்ப வேண்டுமென்று எண்ணுவதாக கூறினர். உடனடியாக அதற்கு ஒப்புக் கொள்ள சொன்னேன். அதையடுத்து சி.பி.ஐ. விசாரணைக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.


இதற்கே இரவு 10 மணியாகிவிட்டது. தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., கமிஷனர், புலனாய்வுத்துறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு வந்து நீதிமன்ற நிகழ்ச்சிகளை பற்றி விளக்கினார்கள். அடுத்த நாள் சட்டமன்றத்தில் நிலைமைகளை விளக்கி அறிக்கை வைக்க இரவே அறிக்கை தயாரித்தேன்.


20-2-09:


இன்றைய ஏடுகளில் நீதிமன்ற நிகழ்ச்சிகள் அதிக இடம் எடுத்துக் கொண்டிருந்தன. எதிர்க்கட்சி தலைவர்கள் அறிக்கை கொடுத்திருந்தார்கள். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் 356வது பிரிவை பயன்படுத்தி, ஆட்சியை கலைக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்திருந்தார்.


சட்டப் பேரவையிலும் நீதி மன்ற சம்பவங்கள் பெரிதாக எழுப்பப்பட்டது. கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க கோரினர். விதி இடம் கொடுக்காது என்று கூறியும் கேட்கவில்லை. அ.தி.மு.க. வினர் வெளிநடப்பு செய்தனர். பா.ம.க. தொடர்ந்து குரல் எழுப்பியதால் வெளியேற்றப்பட்டனர். சட்டத்துறை அமைச்சர் விரிவான அறிக்கை படித்த போதிலும், அனைத்து எதிர்க்கட்சிகளும் கூச்சல், குழப்பம் ஏற்படுத்த முயற்சித்ததால் வெளியேற்றப்பட்டனர்.


20ம் தேதி ஏடுகளில் கொட்டை எழுத்து செய்தி வந்திருந்தது. ஜெயலலிதா ஒரு திருமண விழாவில் பேசியதை அனைத்து ஏடுகளுமே காங்கிரஸ் கட்சிக்கு ஜெயலலிதா அழைப்பு என்று தலைப்பிட்டு வெளியிட்டு இருந்தன.


காங்கிரஸ் கட்சியை பிடிக்காமல் இந்திய கம்யூனிஸ்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் தி.மு.க. அணியிலிருந்து பிரிந்து ஜெயலலிதா வீட்டிற்கு சென்று பேச்சு நடத்தியிருக்கிறார்கள். அந்த நிலையில், ஜெயலலிதா திடீரென்று காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு என்ற பெயரில் பேசியிருந்தார்.


சைவப் பெருமாட்டி உப்புக் கண்டத்தை பறி கொடுத்ததை போல இரண்டு கம்யூனிஸ்ட் காரர்களாலும் என்ன நடக்கிறது என்றே புரிந்து கொள்ள முடியாத நிலை. அதைப்பற்றி அன்று நான் அறிக்கை எழுதி முடிக்கவே நீண்ட நேரம் ஆகிவிட்டது.


மாலையில் தொலை ஒளிபரப்பு மூலமாக பாடி மேம்பாலத்தினை திறந்து வைத்தேன். அதில் பேசும்போது, திமுக அரசை கவிழ்க்க நினைக்கும் சதிகாரர்களின் திட்டத்திற்கு பயப்படாமல் நமது பயணத்தை தொடர்வோம் என்று கூறினேன்.அறுவை சிகிச்சை முடிந்து ஒன்பது நாட்கள் ஆகிவிட்டது. முதுகு தண்டு கவசம் பொருத்தப்பட்டு, சக்கர நாற்காலியில் அமர்ந்து, அறை உள்ளேயே சிறிது நேரமும், பின்பு அந்த ஏழாவது தளத்தையும் சுற்றி வந்தேன். பார்வையாளர்களில் சிலரை நாற்காலியில் அமர்ந்தவாறே சந்தித்தேன்.காவல்துறை அதிகாரிகளை அழைத்து உயர் நீதிமன்றத்தில் அன்று என்ன நிலைமை என்று கேட்டேன். பதற்றம் நீடிப்பதாகவும், நீதிபதி உத்தரவின் பேரில் போலீசார் யாரும் அங்கே வரவில்லை என்றும், வழக்கறிஞர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, என் உருவப்படத்தையும் சிலர் எரித்தார்கள் என்றும், பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டார்கள் என்றும் விளக்கினார்கள்.


என் படத்தை எரிக்கிற அளவுக்கு நான் வழக்கறிஞர்களுக்கு என்ன வஞ்சனை செய்தேன் என்று யோசிப்பதிலேயே இரவு முழுதும் கழிந்தது. விடிந்து ஏடுகளில் வழக்கறிஞர்கள் என் படத்தை கொளுத்தியதாக வந்த செய்தி கண்டதும் வாழ்க வசவாளர்கள் என்று அண்ணா சொல்லும் பாணியில், வாழ்க வழக்கறிஞர்கள்என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன்.

நன்றி
நக்கீரன்

2 comments:

ttpian said...

it is correct:
regret for burning ur picture...infact,they would have burned ur......

♠புதுவை சிவா♠ said...

lol ttpian

thanks for your comment