வன்னிப் பகுதிக்கு அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படைகளை அனுப்பி தமிழர்களை வெளியேற்றும் திட்டததிற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வன்னியில் விடுதலைப் புலிகளின் பகுதியில் இருக்கும் லட்சக்கணக்கான தமிழர்களை வெளியேற்ற அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் படைப் பிரிவின் உதவியை இலங்கை நாடியுள்ளது.
அப்படி செய்யும்போது விடுதலைப் புலிகளுக்கும், அமெரிக்கப் படைகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அதன் மூலம் இந்தப் பிரச்சினையில் அமெரிக்காவையும் இழுத்து விடலாம் என்ற எண்ணம் இலங்கைக்கு.
இலங்கையின் இந்த திட்டத்திற்கு தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த தமிழர் அமைப்பும் இந்தத் திட்டத்தை அமெரிக்கா கைவிட வேண்டும் என கோரியுள்ளது.
இந்த நிலையில் இலங்கையின் இந்த அமெரிக்கப் படைத் திட்டத்திற்கு இந்தியாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வன்னியில் உள்ள மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதற்கு இந்திய அரசாங்கம் முன்னர் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது. இதன் பின்னர் அமெரிக்காவின் பசிபிக் கமாண்ட் முயற்சிகளை மேற்கொண்டிருந்தது.
ஆனால், மக்களை பலவந்தமாக வெளியேற்றுவதை விடுதலைப் புலிகள் எதிர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் அமெரிக்காவின் இந்த முயற்சிகளுக்கு இந்திய அரசு தற்போது எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் மக்களை வெளியேற்ற வேண்டும் என இந்தியா விரும்புகின்றது.
இந்தியாவின் இந்த நிலைப்பாடு இலங்கைக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே வன்னியில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு சர்வதேச படைகளை பயன்படுத்துவதில்லை என்ற அறிவிப்பை இலங்கை அரசு தெரிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
ஐ.நா. குற்றச்சாட்டுக்கு இலங்கை மறுப்பு
இந்த நிலையில், வட இலங்கையில் விடுதலைப் புலிகளும், இலங்கைப் படைகளும் போர்க் குற்றங்களை மேற்கொண்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் கலாநிதி நவநீதம்பிள்ளை தெரிவித்த கருத்துக்களை இலங்கை அரசு மறுத்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை மனித உரிமைத் துறை அமைச்சர் மகிந்தா சமரசிங்கே கூறுகையில்,
இலங்கை படையினரின் தாக்குதல்களினால் 2 ஆயிரத்து 800 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த கருத்துக்கள் தவறானவை. இது விடுதலைப் புலிகளின் தகவல்களை ஆதாரமாக கொண்டவை.
ஐக்கிய நாடுகள் சபையின் இந்த அறிக்கையால் நாம் ஏமாற்றம் மட்டும் அடையவில்லை; கவலையும் அடைந்துள்ளோம்.
ஐக்கிய நாடுகள் சபையின் தெரிவித்துள்ள தகவல்கள் ஆதாரமற்றவை; பொதுமக்கள் சிலர் கொல்லப்பட்டதை சிறிலங்கா மறுக்கவில்லை. ஆனால், தெரிவிக்கப்பட்ட எண்ணிக்கைகள் அதிகமானவை. பொதுமக்கள் மீதான விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை பிள்ளை தனது அறிக்கையில் புறக்கணித்துள்ளார் என்றார் அவர்.
நன்றி
-தட்ஸ்தமிழ்
Headline
யு.எஸ்.படைகளை அனுப்பி தமிழர்களை வெளியேற்ற இந்தியா எதிர்ப்பா?
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment