Headline

கூகுள் எர்த்தில் யுகே அணு ஆயுத தலைமையகம்!



இங்கிலாந்து நாட்டின் அணு பாதுகாப்பு தலைமையகம் கூகுள் எர்த்தில் படு தெளிவாகத் தெரிவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இது தீவிரவாதிகளுக்கு பெரும் சாதகமாக அமையும் எனவும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் எர்த் மூலம்தான், மும்பை நகரில் தீவிரவாதிகள் தாக்குதலை திட்டமிட்டு நடத்தினர். இதையடுத்து கூகுள் எர்த்தில் இதுபோன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை பிளாக் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

உலகின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளையும் கூகுள் எர்த் மூலம் மிகத் தெளிவாக காண முடிகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்தின் அணு பாதுகாப்பு தலைமையகம் படு தெளிவாக கூகுள் எர்த் மூலம் பார்க்க முடிகிறது. இதனால் தீவிரவாதிகள் இங்கு தாக்குதல் நடத்தக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தின் பாஸ்லேன் பகுதியில் உள்ள இந்த தலைமையகத்தை மிக மிக துல்லியமாக காண முடிகிறது. மிக மிக குளோசப்பிலும் இதை காண முடிகிறது.

பாஸ்லேனில்தான் இங்கிலாந்தின் அணு ஆயுத நீர்மூழ்கிப் படைப் பிரிவும் உள்ளது.

இந்த கூகுள் எர்த் படத்தில் தலா 16 அணு ஆயுத ஏவுகணைகளை ஏந்திச் செல்லக் கூடிய திறம் படைத்த இரண்டு மிகப் பெரிய வாங்குவார்ட் கிளாஸ் நீர்மூழ்கிக் கப்ப்களும் நிற்பதைக் காண முடிகிறது.

தீவிரவாதிகள் இந்தப் பகுதியை ராக்கெட் வீசித் தாக்க மிக எளிதான வாய்ப்பு இதன் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராணுவ நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சன் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், இங்கு ஒரே ஒரு தாக்குதல் நடந்தால் கூட போதும் மிகப் பெரிய அளவுக்கு பேரழிவை சந்திக்க நேரிடும். அந்த சேதம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு மிகப் பெரிதாக இருக்கும் என்றார்.

இதுதவிர பாஸ்லேனில் உள்ள எச்.எம். கடற்படை தளமும் கூட தெளிவாகத் தெரிகிறது. இப்பகுதியில் அணு ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதியையும் கூட பக்காவாக பார்க்க முடிகிறது.

இவை தவிர இங்கிலாந்து உளவுப் பிரிவான எம்ஐ6ன் லண்டன் அலுவலகங்கள், ஹெர்போர்டில் உள்ள பயிற்சி பிரிவு, அலுவலகங்கள், பங்கர்கள், அணிவகுப்பு மைதானங்கள் ஆகியவையும் கூகுள் எர்த்தில் தெளிவாக காணப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு, ஈராக்கில் உள்ள தனது படைத் தளங்களை பார்க்க முடியாதபடி பிளாக் செய்யுமாறு கூகுள் நிறுவனத்தை இங்கிலாந்து கேட்டுக் கொண்டிருந்தது. பஸ்ராவில் ஒரு தீவரவாதி பிடிபட்டபோது, கூகுள் எர்த் மூலம் இங்கிலாந்து படைத் தளங்களை குறி வைத்து தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டது தெரிய வந்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவை இங்கிலாந்து பிறப்பித்திருந்தது.

இருப்பினும் அனைத்து தளங்களையும் கட்டுப்படுத்துவது இயலாத காரியமாக இருப்பதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் கூறுகிறது.

தாக்குதல் நடத்த வேண்டும் என தீவிரவாதிகள் திட்டமிட்டு விட்டால் எப்படியாவது தகவல்களைப் பெற்று விடுகிறார்கள் என்றும் அது கூறியுள்ளது.

நன்றி
- தட்ஸ்தமிழ்

0 comments: