Headline

சென்னையில் போதை டிரைவிங்-1000 பேர் லைசென்ஸ் ரத்து








குடித்து விட்டு வாகனம் ஓட்டிய 1000 பேரின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டிருந்தார்.

இதையடுத்து காவல்துறை ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. சென்னை முழுவதும் குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்களை கண்காணிக்கவும், ஏற்கனவே அமலில் உள்ளபடி ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்து, உறுதியான நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் தொடர்ச்சியாக குடிபோதையில் வாகனம் ஓட்டிய 11 ஆயிரம் பேரின் உரிமங்களை ரத்து செய்வதற்கு பரிந்துரைக்கப்பட்டு ஆயிரம் பேரின் உரிமங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன.

இப்படி ரத்தானவர்கள் பெரும்பாலும் கிழக்குக் கடற்கரைச் சாலையில் அதி வேகமாகவும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டி வந்து சிக்கியவர்கள் ஆவர்.

இதுகுறித்து தென்சென்னை போக்குவரத்து துணை ஆணையர் மனோகரன் கூறுகையில்,

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களின் உரிமத்தை ரத்து செய்வது, என்பது நீண்ட கால செயல்பாடு. சம்பந்தப்பட்டவரின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரைக்கப்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட நபரிடம் அதுபற்றி விளக்கம் கேட்பர். அதன் பிறகு, பதில் திருப்தி அளிக்காத பட்சத்தில் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுகிறது.

11 ஆயிரம் பேர்களுக்கு உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் 1000 பேரது ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 10 ஆயிரம் பேரிடம் விளக்கம் கேட்டுள்ளனர். அது செயல்பாட்டில் உள்ளது. எனவே வாகன ஓட்டிகள் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்

0 comments: