Headline

வன்னியில் உணவுப்பஞ்சம்: பட்டினியில் சிறுவர்கள் பலி மக்கள் அவதி





வன்னியில் சிங்கள ராணுவத்தினர் தொடர்ந்து மேற்கொண்டு வரும் போரினாலும், உலகத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் எதுவும் கிடைக்காத காரணத்தினாலும் ஏற்பட்டுள்ள பட்டினி அவலத்தினால் கடந்த 4 நாட்களில் 10 சிறுவர்கள் உட்பட 18 தமிழர்கள் வன்னியில் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ச்சியான உணவின்மை காரணமாகவும் நீரிழப்பு காரணமாகவும் காய்ச்சல் போன்ற நோய்களுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் - நோய் எதிர்ப்புத் தன்மையை இழந்து விட்டதனாலும் - இவர்கள் உயிரிழந்திருக்கின்றனர் என மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பல நாட்கள் உணவின்மை காரணமாகவே மயக்கமடைந்த 5 தமிழர்கள் மாத்தளன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கின்றன.

மேலும், உணவு மற்றும் மருத்துவ வசதி இல்லாத இதே நிலை தொடர்ந்தால் பட்டினி மற்றும் நோய் காரணமாக இன்னும் சில வாரங்களில் இழப்புக்கள் நூற்றுக்கணக்கில் அமையக்கூடும் எனவும் மருத்துவ தரப்பினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கள ராணுவத்தின் தொடர்ச்சியான வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களினால் வளம் கொழிக்கும் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டு வந்த காய்கறிகளை பறிக்க முடியாத நிலையும் மரக்கறி வகைகளை பயிரிட முடியாத நிலை தோன்றியிருப்பதனாலும் மரக்கறி வகைகளுக்கு தட்டுப்பாடு வன்னியில் ஏற்பட்டுள்ளது.


அத்துடன், 95 விழுக்காடு மக்கள் ஒரு நேர கஞ்சியை மாத்திரமே உண்டு வருகின்ற நிலை காணப்படுகின்றது.

குறிப்பாக, சிறுவர்களுக்கு ஊட்ட உணவு என்பது முற்று முழுதாக இல்லாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேநீர் குடிப்பதற்கு கூட தேயிலை சீனி எதுவும் இல்லாது அவலம் காணப்படுவதாகவும் மேலும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நன்றி
நக்கீரன்

0 comments: