Headline

பாரதிராஜாவின்அந்த 8 நாட்கள் - பீதியில் காங்கிரஸ்


தமிழ் திரையுலகினர் சார்பில் திரையுலக தமிழீழ ஆதரவு இயக்கம் என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்த இயக்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குநர் பாரதிராஜா, மத்திய அரசுக்கு எதிராக 4ஆம் திகதி முதல் 11ஆம் திகதி வரை பிரச்சாரம் மற்றும் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

4ஆம் திகதி சென்னை, காஞ்சிபுரம், ஆரணி, சேலத்தில் பொதுக்கூட்டம்,

5ஆம் திகதி சேலம் தொடங்கி ஈரோட்டில் பொதுக்கூட்டம்,

6ஆம் திகதி திருப்பூர் தொடங்கி திண்டுக்கலில் பொதுக்கூட்டம்,

7ஆம் திகதி திண்டுக்கல் தொடங்கி விருதுநகரில் பொதுக்கூட்டம்,

8ஆம் திகதி விருதுநகர் தொடங்கி தென்காசியில் பொதுக்கூட்டம்,

9ஆம் திகதி தென்காசியில் தொடங்கி திருநெல்வேலியில் பொதுக்கூட்டம்,

10ஆம் திகதி திருநெல்வேலியில் தொடங்கி சிவகங்கையில் பொதுக்கூட்டம்,

11ஆம் திகதி சிவகங்கையில் தொடங்கி கடலூர் மற்றும் புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடத்துகிறோம் என்றார்.


13ம் திகதி இந்திய நாடளுமன்றத் தேர்தலின் தமிழக வேட்பாளர்களுக்கான வாக்குப்பதிவு இடம்பெறவுள்ளது குறிப்பிடடத்தக்கது.

23.04.2009 அன்று திரையுலகத் தமிழீழ ஆதரவு இயக்கத்தின் இயற்றப்பட்ட தீர்மானங்கள்

முதல் தீர்மானம்..

இலங்கையில் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்திய அரசு எந்த முயற்சியும் எடுக்காமல் அழித்தொழிக்கும் இந்த இனப் போருக்கு ஆயுதம் தந்து உதவுகிறது என்பது எந்த வரலாறும் மன்னிக்க இயலாத துரோகம்.

இருந்தபோதும் ஒரு வாய்ப்பிருக்கிறது. இந்த நொடி போர் நிறுத்தம் வேண்டுமென்று இந்திய அரசு, சிங்கள அரசுக்கு ஆணையிட முடியும். இன்று இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் ஆளும்கட்சி அதை செய்துவிட்டு, தமிழகத்துக்கு வந்து தமிழக மக்களிடம் வாக்குகளை கேட்பதுதான் நியாயமானது. நேர்மையானது. அடிவயிற்றில் பசியோடு எரியும் உலைக்கு அரிசி போடாமல், செத்த பிறகு வாய்க்கரிசி போட வரும் கேவலத்தை உலகின் எந்த இனமும் ஏற்காது.

தமிழர்களின் வாழ்வை, உயிரைக் காப்பாற்றத் தவறிய உங்களுக்கு தமிழர்களின் வாக்குகளைக் கேட்கும் தார்மீக தகுதியில்லை என்று நாங்கள் ஒரு மனதாகச் சொல்கிறோம்.

போர் நிறுத்தம் செய்து இனப்படுகொலையை தடுத்து நிறுத்தாமல் இந்திய அரசின் பிரதமர் மன்மோகன்சிங்கும், வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் தலைவர் சோனியாகாந்தியும் தாங்களாகவே தமிழகத்துக்கு வந்து வாக்கு கேட்கும் முயற்சியை மனசாட்சியின் பேரால் நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஒருமித்தக் குரலில் முன் மொழிகிறோம்.

இந்த எங்களது உணர்வுப்பூர்வமான கோரிக்கையை நிராகரித்துவிட்டு நீங்கள் தமிழகம் வந்தால், எங்கள் முழு எதிர்ப்பை, எந்தெந்த முறையிலெல்லாம் காட்ட வேண்டுமோ அந்தந்த வழிகளிலெல்லாம் காட்ட வேண்டிய சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்படுவோம் என்பதை ஒரு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறோம்.

எங்கள் தீர்மானத்தில் ததும்பும் உணர்வுகளை அறிந்து கொண்டு உணர்ந்து கொண்டு புரிந்து கொண்டு உடனடி போர் நிறுத்தம் செய்ய உத்தரவிட வேண்டுமென வற்புறுத்துகிறோம்..

இரண்டாவது தீர்மானம்

தமிழ் ஈழத்தின் உண்மையான உணர்வைப் புரிந்து கொள்ளாமல் அதனைக் கொச்சைப்படுத்தியும், உதவி செய்ய முன்வராத தமிழகக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் தங்கபாலு, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகிய மூவரின் தொகுதிகளிலும் அவர்களுக்கெதிராக பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்..”

நன்றி
-சங்கதி.காம்
-உண்மைத் தமிழன்

0 comments: