Headline

Feb
24,
2009

இலங்கையில் உடனடியான போர் நிறுத்தம் அவசியம்: ஐ.நா. வலியுறுத்தல்

வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும் மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும் என ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.


இதுதொடர்பாக ஐ.நா. வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இலங்கையின் தற்போதைய நிலமைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. அங்கு உருவாகியுள்ள மனித அவலங்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் கொல்லப்படுவது தொடர்பாக நாம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளோம்.


பொதுமக்களின் இழப்புகளை தவிர்ப்பதற்கு போரில் ஈடுபடும் இரு தரப்பும் அனைத்துலக மனிதாபிமான விதிகளையும், போரியல் விதிகளையும் மதித்தல் வேண்டும். இலங்கை அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் இதனை மதிக்க வேண்டும்.


வன்னியில் உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டு, மனிதாபிமான உதவிகள் அங்கு செல்வதற்கும், மக்கள் நடமாடுவதற்குமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட வேண்டும். விடுதலைப்புலிகள் மக்கள் வெளியேறவிடாது தடுப்பது கண்டனத்திற்கு உரியது.


வவுனியாவில் உள்ள இடைத்தங்கல் முகாமுக்கு வரும் மக்களின் மீது மேற்கொள்ளப்படும் சோதனைகள் அனைத்துலகத்தின் தாரதரத்துடன் இருத்தல் வேண்டும் என்பதை இலங்கை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.


இந்த முகாம்களுக்கு செல்லும் முழு அதிகாரங்களும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதாபிமான அமைப்புகள் போன்றவற்றுக்கு வழங்கப்பட வேண்டும்.


இலங்கையில் நடைபெற்று வரும் நீண்டகாலப் போருக்கு படைத்துறை ரீதியாக தீர்வுகாண முடியாது. விடுதலைப்புலிகள் வன்முறைகளை கைவிட்டு ஆயுதங்களை கீழே போட வேண்டும்.


எல்லா சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும்.


இலங்கையில் நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள் மற்றும் வன்முறைகள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவலை கொண்டுள்ளது.


மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். துணை ராணுவக் குழுவினரின் ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

நன்றி
நக்கீரன்

0 comments: