Headline

குழைந்தைகள் தினமும் மறந்து போன நேருவின் கொள்கையும்

இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது

நெடுமாறன் பேட்டி

தென்னாபிரிக்காவில் நிறவெறி அரசு மற்ற கறுப்பின மக்களை ஒடுக்கியபோது தென்னாபிரிக்காவை உலக நாடுகள் புறக்கணிப்புச் செய்யவேண்டும் என்பதற்காக ஐ.நா. பேரவையில் தீர்மானம் கொண்டுவரச் செய்து நிறைவேற்றி,தென்னாபிரிக்க நிறவெறி அரசை ஒதுக்கி வைக்கும் கொள்கையைக் கடைபிடித்து நேரு வெற்றியும் பெற்றார்.

ஆக, உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் எங்கெங்கே சுதந்திரம் பெறப் போராடினார்களோ அவர்களுக்கெல்லாம் நேரு பகிரங்கமாக ஆதரவு கொடுத்தார். ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக ஆதரவு கொடுத்தார் என்பதுதான் முக்கியமானது. இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கைக்கு அடிநாதமாகவும் அது இருந்தது.

உலகெங்கும் அடிமைப்பட்ட மக்கள் விடுதலை பெறவேண்டும். அதற்கு இந்தியா உதவவேண்டுமென்பதும் அவரது கொள்கையாக இருந்தது

அதனால்தான் அதன் பின்னால் வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சியினாலும்,ஜனதாக் கட்சி ஆட்சியினாலும் பாரதீய ஜனதா ஆட்சியாயிருந்தாலும் அந்தக் கொள்கையிலிருந்து எவராலும் விலகிச் செல்ல முற்படவில்லை. ஆங்காங்கே சிறு சிறு மாற்றங்கள் செய்திருக்கலாமே ஒழிய அடிப்படையில் அணிசேராக் கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்திய வெளியுறவுக் கொள்கையிலிருந்து எந்தக் கட்சியும் விலகிச் செல்ல முடியவில்லை.

அதேபோல ஸ்பெயின் நாட்டில் பிராங்கோ என்ற சர்வாதிகாரியை எதிர்த்து அந்த நாட்டு இளைஞர்கள் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்குப் போராட்டம் நடத்தினார்கள். அந்தப் போராட்டத்திற்கு உதவ வேண்டும் என்று அன்றைக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி வேண்டுகோள் விடுத்தது.

ஐரோப்பாவில், பிரிட்டனில் ஏராளமான இந்திய இளைஞர்கள் அந்தப் பேராட்டத்தில் உதவி செய்வதற்காகத் தங்கள் பெயரை எல்லாம் பதிவு செய்தார்கள். அதிலே ஒருவர் இந்திராகாந்தி என்பது குறிப்பிடத்தக்கது.

16 வயது மாணவியாக இந்திராகாந்தி இருந்தபோது படையில் சேர்ந்து ஸ்பெயினில் ஜனநாயகத்தை நிலைநிறுத்துகிற போரில் உதவுவதற்கு முன் வந்தார். ஜவஹர்லால் நேருவை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தனது தூதராக அனுப்பியது. அவர் ஸ்பெயின் நாட்டின் எல்லையில் போய் அங்கு திரண்டிருந்த பல்வேறு நாட்டுத் தொண்டர்களிடம் பேசி உற்சாகப்படுத்தி ஜனநாயகப் போராட்டத்திற்கு ஆதரவு கொடுத்தார்.

இப்படி காங்கிரஸ் கட்சி ஆரம்பத்திலிருந்தே வெளியுறவுக் கொள்கையிலே தீவிரமாக கவனம் செலுத்தியது. அது படிப்படியாக வளர்ந்து நேரு அவர்களே பிரதமராகப் பொறுப்பேற்றவுடன் அதிகாரப்பூர்வமாக அதை அமுலுக்குக் கொண்டுவரமுடிந்தது.

ஆனால், ஜவகர்லால் நேருவின் பேரன் ராஜீவ்காந்தி 1985 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற பின்பு அவர் தன்னுடைய பாட்டனாரும் தன் தாயாரும் எத்தகைய வெளிவிவகாரக் கொள்கையைக் கடைப்பிடித்தார்கள் என்பதை உணரவில்லை.

அதிகாரிகள் அவரை தவறாக வழிநடத்தினார்கள் என்பதுதான் உண்மை. அன்றைக்கு இந்தியாவின் தூதுவராக இருந்த தீட்சித், இந்தியாவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளராக இருந்த பண்டாரி போன்ற அதிகாரிகள் அவரை வழிமாற்றி நடத்தினார்கள்.

அப்பொழுதுதான் முதன்முதலாக நேரு அமைத்த பாதையில் இருந்து இந்திய அரசு விலகிச் செல்லத் தொடங்கியது. அப்பொழுதுதான் உலகம் முழுவதும் அடிமைப்பட்ட மக்கள் எங்கு போராடுகிறார்களோ அவர்களுக்கு ஆதரவு அளிக்கிற இந்தியாவின் கொள்கையிலிருந்து தலைகீழான மாற்றம் ஏற்பட்டது. இலங்கையில் சுதந்திரம் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்த ஈழத்தமிழர்களை ஒடுக்குவதற்கு சுதந்திர இந்தியாவின் படை அங்கு அனுப்பப்பட்டது.

இந்திய வரலாற்றில் கறைபடிவதற்கு காரணமானவர் ராஜீவ்காந்திதான். வேறுயாருமல்லர். அவருடைய தாயாரும் அவருடைய பாட்டனாரும் கடைப்பிடித்து வந்த கொள்கைக்கு நேர்மாறான திசையில் ராஜீவ்காந்தி சென்றார். அதில் வெற்றிபெறவில்லை. படுதோல்வியடைந்தார்.


நெடுமாறன் பேட்டி முழுமையாக படிக்க

நன்றி
-yarl.com

லா படிக்க விரும்பும் சிறுவன் - சிரிப்பு

0 comments: