சிறிலங்காவில் இருந்து திருப்பி அனுப்பப்பட்ட நிவாரணக் கப்பலான 'கப்டன் அலி' ('வணங்கா மண்') தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைத் துறைமுகத்துக்குள் நுழைய அனுமதி கிடைக்காமல் கடந்த 10 நாட்களாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.
போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுவதற்காகவே ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த தமிழர்கள் நிவாரண நிதி திரட்டி, 884 தொன் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை சேகரித்தனர்.
இவற்றை பிரான்சில் இருந்து 'கப்டன் அலி' என்ற 'வணங்கா மண்' கப்பல் மூலம் கடந்த 7 ஆம் நாள் இலங்கைக்கு அனுப்பி வைத்தனர்.
நிவாரணப் பொருட்களுடன் சென்ற கப்பலை சிறிலங்கா அரசு ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து, 'வணங்கா மண்' எங்கு செல்வது என தெரியாமல் நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றது.
தற்போது சென்னை அருகே 5 கடல் மைல் தூரத்தில் அனைத்துலக கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டு நிற்கின்றது.
இக்கப்பல் சென்னைத் துறைமுகத்துக்கு வரவேண்டுமானால், இந்திய மத்திய அரசின் முறையான அனுமதி பெறவேண்டும். அதற்கான அனுமதி கிடைக்காததால் துறைமுகத்துக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கப்பலில், 15 பணியாளர்களும் கப்பலில் இருந்த உணவுப் பொருட்களைக்கொண்டு நாட்களை நகர்த்திக்கொண்டுள்ளனர்.
மனித நேய அடிப்படையில், மத்திய அரசு தலையிட்டு நிவாரணக் கப்பல் சிறிலங்கா செல்ல மத்திய அரசு உதவ வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் கருணாநிதி, வெளியுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கிருஷ்ணாவுக்கு கடிதம் எழுதினார்.
தமிழ்நாடு அரசின் சார்பில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புதுடில்லி சென்று எம்.எஸ்.கிருஷ்ணா உள்ளிட்டோரை சந்தித்து வலியுறுத்தினார்.
நிவாரணக் கப்பல் சிறிலங்காவுக்கு அனுப்ப தேவையான அனைத்து உதவிகளையும் செய்யும் என வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதியளித்தார்.
இதனைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 'வணங்கா மண்' கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழைய மத்திய அரசு அனுமதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை கப்பல் சென்னை துறைமுகத்துக்குள் நுழையவில்லை.
இது தொடர்பாக சென்னை துறைமுக அதிகாரிகள் கூறியதாவது:
நிவாரணக் கப்பல் இன்னும் அனைத்துலக கடற்பரப்பின் எல்லையில் தான் நிற்கிறது. மத்திய அரசின் அனுமதிக்காக காத்திருக்கின்றது.
சென்னை துறைமுகத்துக்குள் வரவில்லை. சென்னை துறைமுகத்துக்குள் வர வேண்டும் என்றால் கப்பலில் உள்ள சரக்குகளுக்கான முறையான சான்றிதழ், அனுமதி கடிதம் போன்ற ஆவணங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
இதற்குரிய முகவர் கப்பலில் இடம் கேட்டு வேண்டுகோள் கடிதம் கூட தரவில்லை. குடிநீரின்றி தவிக்கும் நிலை இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து கடந்த 16 ஆம் நாள் குடிநீர் வழங்கினோம். இது மனிதாபிமான அடிப்படையிலான உதவிதான்.
தேவைப்பட்டால் மருத்துவம் உள்ளிட்ட அவசியமான உதவிகளை செய்ய துறைமுகம் தயாராகவே உள்ளது என்றார்.
சென்னைக்கு அருகே 5 மைல் தூரத்துக்கு நிவாரணக்கப்பல் வந்து இன்றுடன் 11 நாட்கள் ஆகின்றது. ஏற்கனவே 7 ஆம் நாள் புறப்பட்ட இக்கப்பல் 15 நாட்களாக சுற்றிக்கொண்டுள்ளது. கப்பலில் குறித்த காலத்துக்குத்தான் உணவுப் பொருட்கள் இருக்கும்.
நாட்கள் ஆக, ஆக கப்பலில் உள்ள பணியாளர்கள் பசிக்கு உணவு கிடைக்காமல் திண்டாடும் அபாயம் உள்ளது.
இந்திய அரசு துரித கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்பார்ப்பு என்று தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் 'தினமலர்' தெரிவித்துள்ளது.
நன்றி
-புதினம்
Headline
'வணங்கா மண்' கப்பலும் முதல்வரின் கடிதமும்!
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment