Headline

நாய் துரத்தியதால் சிறுவன் மாடியிலிருந்து விழுந்து பலி





சென்னையில், நாய் துரத்தியதால் பயந்து போன சிறுவன், நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தான்.

நாயை பொறுப்பின்றி மாடியில் உலவ விட்டிருந்த விமானப் பணிப்பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம், இந்தியன் ஏர்லைன்ஸ் குடியிருப்பில், நான்காவது பிளாக்கில் வசித்து வருபவர் சீனிவாசன். இவர், இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தில் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவரின் மனைவி அஞ்சனா. இவர்களுக்கு ஆசிஷ் அரவிந்த் (11) என்ற மகனும், ஷிவானி (4) என்ற மகளும் உள்ளனர்.

ஆசிஷ் அரவிந்த், கேந்திர வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தான். தேர்வு முடிந்து முடிவுகள் வெளியிடப்பட்டன.

இதில், தேர்ச்சி பெற்ற ஆசிஷ் அரவிந்த், அடுத்த பிளாக்கில் வசிக்கும் தனது மாமா சங்கர்ராவ் வீட்டிற்கு சென்று இனிப்பு வழங்கினான்.

அதன் பின்னர் நான்காவது மாடிக்குச் சென்று அங்கிருந்த தனது நண்பனுடன் சேர்ந்து விளையாடியுள்ளான்.

அதே பிளாக்கில், விமான பணிப்பெண்களாக வேலை பார்க்கும் நமீதா நாயக் (25), அவரின் சகோதரி சமீதா நாயக் (22) ஆகியோர் வசித்து வந்தனர். இருவரும் டாபர்மேன் ரக நாயை வளர்த்து வருகின்றனர்.

இரவு நேரத்தில் நாயை மாடியில் உலவ விடுவார்களாம்.
நேற்று முன்தினம் நமீதா நாயக் வேலைக்கு சென்றிருந்தார். வீட்டில் இருந்த சமீதா நாயக் வழக்கம்போல் இரவில் நாயை மாடியில் விட்டார்.

இந்த சமயத்தில்தான் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த ஆசிஷ் அரவிந்த்தை நாய் துரத்தியது. பயந்து போன சிறுவன் வேகமாக ஓடியுள்ளான். அப்போது நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தான்.

உடனடியாக அவனை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான்.

நாயை பொறுப்பின்றி மாடியில் உலவ விட்ட விமான பணிப் பெண் சமீதா நாயக் கைது செய்யப்பட்டார்.

சிறுவன் ஆசிஷ் அரவிந்த் தனது கண்களை தானம் செய்ய ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்தான். அதற்காக பதிவும் செய்து வைத்திருந்தான். இதையடுத்து அவனது கண்கள் தானமாக எடுக்கப்பட்டன.

இச்சம்பவம் ஏர்லைன்ஸ் குடியிருப்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி
-தட்ஸ்தமிழ்

0 comments: