Headline

சீமான் பரோலில் வருகிறார்





சிறைக்குப் போகுமுன், தன்னால் தயாரிப்பாளர் பாதிக்கப்படக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் மாயாண்டிக் குடும்பத்தார் படத்தின் தன் பகுதிகள் முழுவதையும் நடித்துக் கொடுத்துவிட்ட இயக்குநர் சீமான், இப்போது படத்திற்கு, டப்பிங் பேசுவதற்காக பரோலில் வருகிறார்.

ராசு மதுரவன் இயக்கும் இந்தப் படத்தின் மணிவண்ணனின் மகனாக நடிக்கிறார் சீமான். உண்மையில் மணிவண்ணனிடம் பல ஆண்டுகள் உதவியாளராக இருந்தவர்தான் சீமான்.

போலீஸார் தன்மீது வழக்குப் பதிந்துள்ளது தெரிந்ததும், இந்தப் படத்தில் தனது பகுதிகளை மட்டும், சரணடைவதற்கு முன்பே நடித்துக் கொடுத்து உதவியிருக்கிறார் சீமான். இதைச் செய்ததற்குத்தான் அவருக்கு ஓடி ஒளிந்தார் என்ற பட்டப் பெயர் கிடைத்தது. பின்னர் தேசிய பாதுகாப்புத் தடுப்புச் சட்டத்தில் புதுச்சேரி காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருப்பதால் படத்துக்கு இன்னும் சீமான் டப்பிங் பேசவில்லை. இதையடுத்து அவரை பரோலில் அழைத்து வந்து டப்பிங் பேச வைக்க முயற்சி செய்து வருகின்றனர். சீமானும் பரோலில் வர ஒப்புக் கொண்டுள்ளார். அதற்கான விண்ணப்பங்களையும் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் சிறைத்துறையினரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

இதுகுறித்து இயக்குநர் ராசு மதுரவனிடம் கேட்டபோது, 'படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இது குடும்பம், காதல் சென்டிமென்ட் கொண்ட கதை. சீமான் டப்பிங் பேச வேண்டியிருக்கிறது. அதற்காக அவரை பரோலில் எடுக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். அவர் டப்பிங் பேசியதும் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் படம் ரிலீஸ் ஆகும்' என்றார்.

இந்தப் படத்தில் தருண்கோபி, சீமான், பொன்வண்ணன், நந்தா பெரியசாமி, ஜெகநாத், மணிவண்ணன் உட்பட 10 இயக்குனர்கள் நடிக்கின்றனர். தமிழரசி, பூங்கொடி ஹீரோயின்களாக அறிமுகமாகின்றனர். சபேஷ்முரளி இசை அமைக்கிறார்.

நன்றி
-தட்ஸ்தமிழ்

0 comments: